Published : 27 Jan 2014 12:38 PM
Last Updated : 27 Jan 2014 12:38 PM

அந்தமான் படகு விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு கூடுதல் நிதி: ராமதாஸ் வலியுறுத்தல்

அந்தமானில், படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு, பலியானவர்கள் குடும்பங்களுக்கு தமிழக அரசு கூடுதல் நிதி உதவி வழங்க வேண்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "அந்தமான் தீவில் போர்ட் பிளேர் அருகில் சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்து மூழ்கிய விபத்தில், அதில் பயணம் செய்த 21 பேர் உயிரிழந்தனர் என்பதையும், அவர்களில் 16 பேர் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதையும் அறிந்து அதிர்ச்சியும், வேதனையும், பெரும் துயரும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுற்றுலா படகில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் சென்றது தான் விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. கடந்த 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கேரள மாநிலம் தேக்கடியில் நிகழ்ந்த இதே போன்ற படகு விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 45 பேர் உயிரிழந்தனர்.

இதே போன்ற விபத்துகள் தொடர்ந்து நிகழும் போதிலும், அதிலிருந்து பாடம் கற்கவோ, இத்தகைய விபத்துகளைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவோ அரசும், சுற்றுலா படகுகளை இயக்குபவர்களும் முன்வராதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

இனிவரும் காலங்களிலாவது இத்தகைய விபத்துகளைத் தடுக்கும் வகையில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவும், கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும், மத்திய அரசும், மாநில நிர்வாகங்களும் முன்வர வேண்டும்.

படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்தமான் நிகோபார் யூனியன் பிரதேச நிர்வாகம் தலா ரூ. 1 லட்சமும், தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்குத் தமிழக அரசு தலா ரூ. 1 லட்சமும் நிதி உதவி அறிவித்துள்ளன.

தேக்கடி படகு விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குக் கேரள அரசு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கியதால் அதற்கு இணையான தொகையை அந்தமான் யூனியன் பிரதேச நிர்வாகத்தின் சார்பில் வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும். தமிழக அரசும் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குக் கூடுதல் நிதி உதவி வழங்க வேண்டும்". இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x