Published : 26 Jan 2017 08:40 AM
Last Updated : 26 Jan 2017 08:40 AM

கடல் ஆமைகளை புதைக்குமிடமாக மாறும் சென்னை கடலோரப் பகுதி: மீன் வளம் பாதிக்கும் அபாயம்

சென்னை கடலோரப் பகுதியில் கடந்த இரு வாரங்களாக கடல் ஆமைகள் உயிரிழப்பது அதி கரித்து வருகிறது. இதனால் கடலில் மீன் வளம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உலகில் 60 சதவீத மக்கள் கடல் மீன் வளத்தைச் சார்ந்து வாழ் கின்றனர். மனித உணவுத் தேவை யில் 20 சதவீதத்தை கடல் மீன் உணவுகள் பூர்த்தி செய்கின்றன.

மீனவ நண்பன்

மீன் குஞ்சுகளை உணவாக உட்கொண்டு, கடலில் மீன் வளத்தை அழிக்கும் சக்தியாக ஜெல்லி மீன்கள் விளங்குகின்றன. இந்த ஜெல்லி மீன்களை கடல் ஆமைகள் சாப்பிட்டு மீன் வளத்தை பெருக்குகின்றன. மேலும் மீன்களுக்கு உணவாகும் பவளப் பாறைகளில் வளரும் பாசிகள் பெருக்கத்துக்கும் உதவி புரிந்து, மீனவ நண்பனாகவும் திகழ்கின்றன.

கடல் ஆமைகள் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை கடலோரப் பகுதியில் அதிகாலை நேரங்களில் முட்டையிடும். இம்முட்டைகளை நாய்களும், பறவைகளும் சிதைப் பதால், கடல் ஆமை இனம் அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதன் அழிவைத் தடுக்க தமிழ்நாடு வனத்துறை சார்பில் கடந்த 2012 முதல் தமிழக கடலோரப் பகுதியில் ஆமைகள் இடும் முட்டைகள் சேகரிக்கப்பட்டு, பெசன்ட்நகர் உள்ளிட்ட 3 இடங்களில் உள்ள ஆமை குஞ்சு பொரிப்பகங்கள் மூலம் பொரிக்கப் பட்டு வருகின்றன.

அரசு உத்தரவு

மீன் வளத்தைப் பாதுகாக்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை தமிழக கடலோரப் பகுதியில் உள்ள 9 மாவட்டங்களில், 5 கடல் மைல் தொலைவுக்கு விசைப் படகுகள் மூலம் மீன் பிடிக்கத் தடை விதித்து மீன்வளத்துறை கடந்த ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவு இதுவரை அமலுக்கு வரவில்லை.

இந்நிலையில், சென்னையில் மெரினா கடற்கரை முதல் நீலாங் கரை வரையிலான கடற்கரைப் பகுதிகளில் கடந்த இரு வாரங்களாக, கரைக்கு முட்டையிட வரும் ஆமைகளில் 40-க்கும் மேற்பட்டவை உயிரிழந்துள்ளன. இதனால் மெரினா கடற்கரை முதல் நீலாங்கரை வரையிலான கடற்கரை பகுதிகள், ஆமைகள் முட்டையிடும் பகுதிகள் என்ற அடையாளத்தை இழந்து, விசைப்படகுகளால் உயிரிழக்கும் ஆமைகளை புதைக்கும் இடங்களாக மாறி வருகின்றன.

இது தொடர்பாக வனத்துறை வன உயிரினப் பிரிவு அதி காரிகளிடம் கேட்டபோது, “கரைக்கு வரும் ஆமைகள் இடும் முட்டைகளை சேகரித்து, நவீன முறையில் குஞ்சு பொரிக்க வைத்து, கடலில் விடும் பணியை வனத்துறை செய்கிறது. கடலில் அடிபடுவதை மீன்வளத்துறையும், கடலோரக் காவல் படையும்தான் தடுக்க வேண்டும்” என்றனர்.

மீன்வளத்துறை அதிகாரிகள் கூறும்போது, “இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ளது. மீன் வளத்துறை உத்தரவால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் நீதிமன்றத்தில் தெரி வித்துள்ளனர். கடல் ஆமைகளை யும் பாதுகாக்க வேண்டும். அதே வேளையில் மீனவர்களின் வாழ் வாதாரத்தையும் பாதுகாக்க வேண் டிய கடமை அரசுக்கு உள்ளது. அதற்கான வழி முறைகளை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்” என தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x