Published : 28 Apr 2014 08:22 AM
Last Updated : 28 Apr 2014 08:22 AM

ஓடும் ரயிலில் 22 பவுன் நகை கொள்ளை: தருமபுரி அருகே பெண்களிடம் கும்பல் துணிகரம்

தருமபுரி அருகே அபாயச் சங்கிலி யைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்திய கொள்ளையர்கள், பெண்களை மிரட்டி 22 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

மயிலாடுதுறையில் இருந்து தினமும் மாலையில் மைசூருக்கு விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், திருச்சி, ஈரோடு, சேலம், தருமபுரி, பெங்களூர் வழி யாக மைசூர் சென்றடையும். சனிக் கிழமை மாலை மயிலாடுதுறையில் இருந்து கிளம்பிய இந்த ரயிலில் ஏராளமான பயணிகள் இருந்தனர்.

சேலம் ரயில் நிலையத்தி லிருந்து கிளம்பிய இந்த ரயில், இரவு 1.45 மணிக்கு சேலம்-தருமபுரி மாவட்ட எல்லைப் பகுதியான காருவள்ளியைக் கடந்தது. அப்போது, யாரோ அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்துள்ளனர். இதையடுத்து, ரயில் நின்றது.

அப்போது, படுக்கை வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகளான எஸ்-1, எஸ்-2, எஸ்-5 மற்றும் எஸ்-7 ஆகிய நான்கு பெட்டிகளில், ஒரே நேரத்தில் கொள்ளைக் கும்பல் புகுந்து உறங்கிக் கொண்டிருந்த பெண்கள் அணிந்திருந்த தங்க நகைகளைப் பறித்துக் கொண்டு தப்பியோடியது.

திருவாரூர் கொரடாச்சேரியைச் சேர்ந்த ராஜசேகர் மனைவி சரஸ்வதி (46) அணிந்திருந்த 8 பவுன் தாலிச் சங்கிலி, பெங்களூர் சின்னப்பா கார்டன் பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் மனைவி மஞ்சு (35) அணிந்திருந்த 5 பவுன் சங்கிலி, பெங்களூர் புஷ்பா லே-அவுட் பகுதியைச் சேர்ந்த விஸ்வேஸ்வரன் மனைவி பவானி (33) அணிந்திருந்த 4 பவுன் சங்கிலி மற்றும் பெங்களூரைச் சேர்ந்த மற்றொரு பெண் பயணியின் 5 பவுன் சங்கிலி ஆகியவற்றை அந்தக் கும்பல் கொள்ளையடித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தலைமறைவாகிவிட்டது.

ரயிலில் பணியில் இருந்த காவல் துறையினர், கொள்ளைக் கும்பலைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். எனினும், அது காட்டுப் பகுதி என்பதால், கொள்ளைக் கும்பலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து தருமபுரி ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

முதல்கட்ட விசாரணையில், ஐந்துக்கும் மேற்பட்ட கொள்ளைக் கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. தப்பிச் சென்ற கொள்ளையர் களிடமிருந்து தவறி விழுந்த சில பொருள்களைக் கைப்பற்றி யுள்ளதாகவும், அதன் மூலம் கொள்ளைக் கும்பல் வளைக் கப்படும் என்றும் காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

கொள்ளையர்களைப் பிடிக்க சேலம், கோவை, ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறை மூலம் மூன்று தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

வனப் பகுதியில் ஓடும் ரயிலை நிறுத்தி, நகைகளைக் கொள்ளையடித்த சம்பவம் ரயில் பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x