Last Updated : 06 May, 2017 10:22 AM

 

Published : 06 May 2017 10:22 AM
Last Updated : 06 May 2017 10:22 AM

திருச்சி ஐயப்பன் கோயிலின் சமுதாயப் பணி படிப்பில் சிறந்து விளங்கும் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை:ஜாதி, மத பாகுபாடின்றி இதுவரை ரூ.57 லட்சம் வழங்கியுள்ளது

பல்வேறு சமுதாயப் பணிகளில் ஈடுபடும் திருச்சி ஐயப்பன் கோயில் நிர்வாகம், படிப்பில் சிறந்து விளங்கும் ஏழை மாணவர்கள் பொறியியல் பட்டயப் படிப்பு படிக்க கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது. இதுவரை 300-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ரூ.57 லட்சம் உதவித்தொகை வழங்கி உள்ளது.

திருச்சி லாசன்ஸ் சாலையில் சூழல்நேய பசுமைப் பூங்காவாக காட்சி தரும் ஐயப்பன் கோயிலில் வழக்கமாக நடைபெறும் பூஜை, வழிபாடுகளைத் தவிர, ரத்த தானம், பாலர் பள்ளி, தேவாரம் - திருவாசகம் வகுப்புகள், திருக் குறள், ஆத்திச்சூடி ஒப்பிக்கும் மாணவர்களுக்குப் பரிசளித்தல், யோகா, கோடைகாலத்தில் நீர்மோர் தானம், கல்வி தானம், மூலிகைச் செடிகள் வழங்குதல் போன்ற சமுதாயப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

ஆண்டுதோறும் ஏழை, எளிய மாணவர்கள் பொறியியல் பட்டயப் படிப்பு பயில உதவித்தொகை வழங்கி வருகிறது. கடந்த 1993-94-ம் கல்வி ஆண்டு முதல் இதுவரை 300-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கியுள்ளது.

இதுகுறித்து கோயில் நிர்வாகி கள் கூறியதாவது: மதிப்பெண் அதிகம் பெற்று படிக்க வசதி இல்லாத ஏழை மாணவர்களின் சிரமத்தைப் போக்கும் வகையில், அவர்கள் தொழிற்கல்வி பயில ஆண்டுதோறும் உதவித் தொகை வழங்கி வருகிறோம். மற்ற படிப்பு களைவிட பொறியியல் பட்டயப் படிப்பு படித்தால் சீக்கிரம் வேலைக்குச் செல்லும் வாய்ப்பு உள்ளது. அதாவது, 10-ம் வகுப்பு படித்த பின், 3 ஆண்டு பொறியியல் பட்டயப் படிப்பு படித்தால், 18 வயதில் அவர்கள் வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்ற முடியும் என்பதால், பட்டயப் படிப்பு படிக்க உதவித்தொகை வழங்கி வருகிறோம்.

10-ம் வகுப்பில் 470-க்கு மேல் மதிப்பெண் (நிகழாண்டுக்கான தகுதி) பெற்றிருக்கும் ஏழை மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும். தாய், தந்தையை இழந்தவர்கள், கிராமப் புற மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கல்வி உதவித் தொகை பெற்று பாலிடெக்னிக்கில் முதலாமாண்டு சேரும் மாணவர்கள் தொடர்ந்து 2, 3-ம் ஆண்டுகளுக்கும் உதவித்தொகை பெற, அரியர்ஸ் இல்லாமல் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

அந்த வகையில், கடந்த 1994 முதல் இந்த ஆண்டு வரை 300-க் கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ரூ.57 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கியுள்ளோம். கோயில் நிர்வா கம் மூலம் படித்து முடித்து வேலைக் குச் சென்ற பல மாணவர்கள், கோயில் நிர்வாகம் மூலம் படிக் கும் தங்களைப் போன்ற மாணவர் களின் படிப்புக்காக ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட தொகையை நன்கொடையாக வழங்குகின்றனர் என்றனர்.

கல்வி உதவித் தொகை பெற்று படித்து, தற்போது பணி புரிந்து வரும் திருச்சி அருகே உள்ள பூங் குடியைச் சேர்ந்த எம்.குணசேகரன் என்பவர் கூறும்போது, “நான் 10-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் கள் பெற்றிருந்தாலும், தொடர்ந்து படிக்க வசதி இல்லை. நன்கு படிக்கும் ஏழை மாணவர்களுக்கு ஐயப்பன் கோயில் நிர்வாகம் கல்வி உதவித்தொகை வழங்குவதை அறிந்து, அங்கு சென்று உதவி கேட்டேன். எனக்கு கல்வி உதவித் தொகை கிடைத்தது.

தற்போது பட்டயப் படிப்பு படித்து முடித்து, கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது. கோயில் நிர்வாகம் எனக்கு இந்த உதவியை செய்யாமல் இருந்தால், நான் கூலி வேலைக்குத்தான் சென்றிருப்பேன். செய்த உதவிக்கு நன்றிக்கடனாக, நானும் எனது பங்குக்கு ஏழை மாணவர்கள் படிப்புக்காக கோயி லுக்கு நன்கொடை வழங்கி வருகிறேன். எனது வாழ்வை மாற்றியமைத்த ஐயப்பன் கோயில் நிர்வாகத்துக்கு நன்றி” என்றார்.

மத பாகுபாடு இல்லை

கோயில் நிர்வாகத்தினர் மேலும் கூறும்போது, “இந்த கல்வி உதவித் தொகை ஜாதி, மத பாகுபாடு இல்லாமல் வழங்கப்படுகிறது. இதுவரை கல்வி உதவித் தொகை பெற்ற 300 பேர்களில் பிற மதத்தைச் சேர்ந்த 30 மாணவ, மாணவிகளும் உள்ளனர்” என்றனர்.

‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்’ என்பது முன்னோர் வாக்கு. இறைவனைப் போற்ற ஏற்படுத்தப்பட்ட ஒரு கோயில் நிர் வாகம் ஏழை, எளிய மாணவர்கள் பொறியியல் பட்டயப் படிப்பு பயில உதவுவது என்பது இறை நிலைக்கு ஒப்பானது என போற்றுகின்றனர் பக்தர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x