Published : 03 Jun 2017 09:55 AM
Last Updated : 03 Jun 2017 09:55 AM

பணம் செலுத்த 14 நாட்கள் கால அவகாசத்துடன் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்து பெறும் வசதி: ஐஆர்சிடிசி விரைவில் அறிமுகம்

ரயில் டிக்கெட்டை முன்கூட்டியே வழங்கி, பணம் செலுத்த 14 நாட்கள் அவகாசம் அளிக்கும் புதிய திட்டத்தை ஐஆர்சிடிசி அடுத்த மாதம் அறிமுகப்படுத்துகிறது.

இந்திய ரயில்வே துறை மூலம் இயக்கப்படும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்களில் பயணம் செய்பவர்களில் 65 சதவீதம் பேர் ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். பணம் இல்லாத காரணத்தால் சிலர் ரயில் டிக்கெட் முன்பதிவை தள்ளிப்போடுகின்றனர். இவர்களுக்காக இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) புதிய வசதியை தொடங்கவுள்ளது. அதாவது, முன்கூட்டியே ரயில் டிக்கெட்டை பெற்றுக் கொண்டு, இதற்கான பணம் செலுத்த 14 நாட்களுக்கு அவகாசம் அளிக்கவுள்ளது.

இது தொடர்பாக ஐஆர்சிடிசி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பணம் செலுத்த 14 நாட்களுக்கு கால அவகாசத்துடன் ரயில் டிக்கெட்டை முன்கூட்டியே வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு 3.5 சதவீத சேவை வரியுடன் சேர்த்து கட்டணம் வசூலிக்கப்படும். இத்திட்டத்தை இ பே லேட்டர் (epaylater) என்ற நிறுவனத்துடன் இணைந்து ஐஆர்சிடிசி அறிமுகம் செய்ய உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்பும் பயணியின் பெயர், செல்போன் எண், இ-மெயில் முகவரி, பான் கார்டு அல்லது ஆதார் விவரங்கள் பெறப்பட்டு டிக்கெட் வழங்கப்படும். இந்த திட்டம் வரும் ஜூலை மாதத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளது. உடனடியாக பணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லாததால் வேகமாகவும் முன்பதிவு செய்ய முடியும். குறிப்பிட்ட அவகாசத்துக்குள் பணம் செலுத்த தவறும் பட்சத்தில் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x