Published : 24 Jun 2016 01:49 PM
Last Updated : 24 Jun 2016 01:49 PM

கவுன்சிலர்களே மேயரை தேர்ந்தெடுக்க மசோதா நிறைவேற்றம்: போட்டிக்குப் பின்வாங்கும் அதிமுக பிரமுகர்கள்

மாநகராட்சிகளுக்கு கவுன்சிலர்களே மேயரை தேர்ந்தெடுக்கலாம் என்ற மசோதா நிறைவேறியதை தொடர்ந்து ஆளும் கட்சி அரசியல் விஐபிக்களின் மேயர் கனவு தகர்ந்துள்ளது. இதனால் 2-ம் கட்ட, 3-ம் கட்ட அரசியல் பிரமுகர்கள் பலர் மகிழ்ச்சியிலும், சிலர் வேதனையிலும் ஆழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேறியது. ஆகவே தற்போதுள்ள 12 மாநகராட்சிகளில் எவையெல்லாம் பெண் மேயர்கள், பெண்களுக்கான வார்டுகள் அறிவிப்பு வரும் என்பதற்காக காத்திருக்கின்றனர் உள்ளூர் அரசியல் புள்ளிகள். ஆண்களை விட பெண்கள் எந்த வார்டுகளில், எந்த மாநகராட்சிகளில் அதிக எண்ணிக்கையில் உள்ளனரோ அவை பெண்களுக்கானவையாக மாற்றலாம் என அரசு தரப்பில் ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதனால் ஒவ்வொரு மாநகரங்கள், நகரங்கள், பஞ்சாயத்துகளுக்கு உள்ளிட்ட அரசியல் புள்ளிகள் நம் பகுதி பெண்களுக்கானதாக மாறுமா? தானே சீட் கேட்பதா? மனைவி, மகள், மருமகளுக்கு சீட் கேட்கலாமா? என இப்போதிருந்தே ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

மாநகராட்சி மேயர் பதவிக்காக அந்தந்த மாநகரங்களில் உள்ள முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள், முன்னாள் எம்.பிக்கள், முன்னாள், இந்நாள் மேயர்கள், மண்டலத் தலைவர்கள் தங்களை தயார்படுத்தி வந்தனர்.

உதாரணமாக கோவை மாநகராட்சியில் செ.ம.வேலுச்சாமி, ப.ராஜ்குமார், ப.வே.தாமோதரன், த.மலரவன், கே.எஸ்.துரைமுருகன், சேலஞ்சர் துரை, சிங்கை சின்னச்சாமி, கோபாலகிருஷ்ணன் உட்பட 50-க்கும் மேற்பட்ட அதிமுக விஐபிக்கள் இதற்காக தயார் நிலையில் இருப்பதாக கட்சி வட்டாரத்தில் கூறப்பட்டது. இது குறித்த செய்தியை ‘தி இந்து’ பதிவு செய்தது.

தற்போது மேயர் சீட்டுக்காக வரிந்து கட்டிக் கொண்டு நின்றிருந்த பெரும்பாலான விஐபிக்களும் சீட் கேட்பதிலிருந்து பின் வாங்குவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிமுகவின் மூத்த நிர்வாகியும், கவுன்சிலருமான ஒருவர் கூறியதாவது:

மேயர் தேர்தலில் நேரடியாக நிற்கும்போது முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்.எல்.ஏ, முன்னாள் எம்.பி., போன்ற விஷயங்கள் எல்லாம் ஒரு மரியாதைக்குரியவையாக இருக்கும். ஆனால், இப்போது அவர்கள் தங்களுக்குரிய வார்டுகளை தேர்ந்தெடுத்து அதைக் கேட்பது என்பது கவுரவக் குறைச்சலாகவே இருக்கும். தவிர, யாருக்கு சீட் என்பதை உள்ளூர் அமைச்சரும், அந்தந்த மாவட்டச் செயலாளர்களுமே முடிவு செய்து பட்டியல் கொடுப்பர். அவர்கள் சீனியர்கள், முன்னாள் அமைச்சர்கள் பட்டியலில் வருவதை விரும்பமாட்டார்கள்.

எனவே, விஐபிக்கள் பெரும்பாலும் தன் வாரிசுகளுக்கு சீட் கேட்டு (குறிப்பாக பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்றால் சுலபம்) கவுன்சிலராக்கி மேயராக்கவும் திட்டமிட்டுள்ளனர். அதே சமயம் வார்டுகள், சட்டப்பேரவை தொகுதிகளில் தோல்வியை கண்டிருப்பதால், எந்தெந்த வார்டில் எதிர்க் கட்சியை விட எங்கள் கட்சி வேட்பாளர் வாக்குகள் குறைவாகப் பெற்றுள்ளார்களோ, அந்த சிட்டிங் கவுன்சிலர்களுக்கு சீட் இல்லை என்ற பேச்சும் கட்சியின் மேல் மட்டத்தில் உள்ளது.

சிட்டிங் கவுன்சிலராக இருந்தால் ரூ.25 லட்சம், புது நபர் கவுன்சிலர் சீட்டுக்கு வந்தால் ரூ.15 லட்சம் செலவழிக்க ஒரு குறியீடு வைக்க உள்ளதாகவும் சொல்கிறார்கள். கவுன்சிலருக்கே இந்த நிர்ணயம் என்றால் மேயர், மண்டலத் தலைவர்கள் தேர்ந்தெடுக்க எவ்வளவு தொகை நிர்ணயம் என்பது தெரியவில்லை. அப்படி அந்த தொகையை செலவழித்து வென்றாலும் எத்தனை நாளைக்கு அந்த மேயர், மண்டலத் தலைவர்கள் பதவியை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்ற சந்தேகமும் எழுகிறது.

எனவே முக்கிய விஐபிக்கள் மட்டுமல்ல; முன்னாள் கவுன்சிலர்கள் பலரும் கூட இதிலிருந்து பின்வாங்க யோசித்து வருகிறார்கள். எனவே புதியவர்களே இந்த முறை கவுன்சிலர் வேட்பாளர்களாக அதிகம் போட்டியிடுவதற்கு வாய்ப்பு உள்ளது. அப்படி வரும்போது ஆளுங்கட்சியே ஆனாலும், புதியவர்கள் வார்டு வாரியாக போட்டியிடும்போது ஈடு கொடுப்பது சிரமம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x