Published : 12 Jul 2016 02:13 PM
Last Updated : 12 Jul 2016 02:13 PM

கிணறு வெட்ட வலியுறுத்தியவர்களை வீடுகளுக்கு தீ வைத்ததாக கூறி காவல்துறையினர் துன்புறுத்தல்: தி.மலை ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

செங்கம் அருகே கோட்டாங்கல் கிராமத்தில் பொது இடத்தில் கிணறு வெட்ட வேண்டும் என்று வலியுறுத்திய கிராம மக்களை, வீடுகளுக்கு தீ வைத்ததாகக் கூறி போலீஸார் துன்புறுத்தி வருவதாக ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.

இது குறித்து கோட்டாங்கல் கிராமத்தில் வசிக்கும் ஜி.பெரியசாமி தலைமையில் கிராம மக்கள் அளித்துள்ள மனுவில், “திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் கோட்டாங்கல் கிராமத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசிக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளாக குடிநீர் பற்றாக்குறை உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுக் கிணறு அமைப்பது என்று ஊராட்சி மன்றத் தலைவர் மூலம் தெரியவந்தது. அப்போது அவர், பிரச் சினை ஏற்பட்டதால் கிணறு வெட்டும் பணி தடைபட்டதாகவும், ஒன்றாக இருந்து இடத்தைத் தேர்வு செய்து கொடுத்தால் கிணறு வெட்டி தருவதாகக் கூறினார்.

இதையடுத்து, புறம்போக்கு நிலங்களில் தண்ணீர் ஆதாரம் உள்ள பகுதியைக் கண்டறியும் பணியை நிபுணர் உதவியுடன் மேற்கொண்டோம். அதில், சர்வே எண் 96-1-ல் நீர் வளம் இருப்பது கண்டறியப்பட்டது. அந்த இடத்தில் பொதுக் கிணறு அமைத்து கொடுக்குமாறு கேட்டுக்கொண்டோம். இது குறித்து வட்டாட்சியரிடம் கடந்த 4-ம் தேதி மனுவும் கொடுக்கப்பட்டது.

இதன்பின்னர், ‘‘அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர், அதனை அகற்ற வேண்டும்’’ என்று சிப்பந்தி சங்கர் கடந்த 5-ம் தேதி அழைத்தார். நாங்களும் உடன் சென்றோம். அப்போது அங்கு கொட்டகைகள் பெரும்பாலும் பிரிக்கப்பட்டிருந்தன. மீதம் இருந்ததை பிரித்துவிட்டு கிராம மக்கள் திரும்பினர்.

இந்த நிலையில் கொட்டகையை பிரித்து எறிந்ததாகக் கூறி கிராம மக்களை செங்கம் போலீஸார் அழைத்துச் சென்றனர். கொட்டகை பிரிக்கப்பட்ட இடத்தில் என்ன நடந்தது என்று சிப்பந்தியை அழைத்து விசாரிக்கு மாறு வலியுறுத்தினோம். எங்கள் கருத்தை போலீஸார் ஏற்கவில்லை. காவல்நிலையத்தில் எங்களை கேவலப்படுத்தினர். பின்னர், எதிர் தரப்பையும் வரவழைத்து எச்சரித்து அனுப்பினர். இதற்கிடையில், பிரச்சினை உள்ள இடத்தை மீண்டும் ஆக்கிரமித்து கொட்டகை போடப்பட்டது. இந்த நிலையில் ஆக்கிரமிக்கப்பட்ட கொட்டகைகள் கடந்த 8-ம் தேதி நள்ளிரவு எரிந்துள்ளது. அதற்கு நாங்கள்தான் காரணம் என்று போலீஸார் கூறியபோது, அதிர்ச்சி அடைந்தோம்.

மேலும், 15 பேரை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, குற்றச்சாட்டை ஒருவர் ஏற்றுக்கொண்டால், மற்ற 14 பேரை விடுவிப்பதாக போலீஸார் மிரட்டினர். பின்னர், திங்கட்கிழமை வர வேண்டும் என்று கூறி எச்சரித்து அனுப்பினர்.

இது குறித்து விசாரணை நடத்தி உரிய நியாயம் வழங்கி அப்பாவி கிராம மக்களை விடுவிக்க வேண்டும். கிராம மக்கள் மீது பொய் புகார் கொடுத்த வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குடிநீர் கிடைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x