Published : 10 Aug 2016 08:55 AM
Last Updated : 10 Aug 2016 08:55 AM

சமஸ்கிருதம், இந்தி திணிப்பை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது: அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், பெஞ்சமின் திட்டவட்டம்

சமஸ்கிருதம், இந்தி மொழி திணிப்பை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பி.பெஞ்சமின் ஆகியோர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

சட்டப்பேரவையில் நேற்று உயர் கல்வி, பள்ளிக் கல்வி, இளை ஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. இதில் திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு (திருச்சுழி) பேசியதாவது:

புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் பல அம்சங்கள் மாநிலங்களின் உரிமைகளை பறிப்பதாக உள்ளது. 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்பதை, இனி 5-ம் வகுப்பு வரை மட்டுமே கட்டாய தேர்ச்சி என கூறப்பட்டுள்ளது. இது கிராமப்புற ஏழை மாணவர்களை கடுமையாக பாதிக்கும்.

சரியாக படிக்காத மாணவர் களை அதாவது 13 வயதிலேயே தொழில் கல்விக்கு அனுப்பவும் வரைவு அறிக்கை பரிந்துரை செய்கிறது. இதன்மூலம் மத்திய பாஜக அரசு மறைமுகமாக குலக் கல்வி திட்டத்தை கொண்டுவர முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நாடு முழுவதும் ஒரே பாடத் திட்டம் என்பது இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எதிரானது. உயர் கல்வியில் வெளிநாட்டு பல் கலைக்கழகங்களை அனுமதித் தால் ஏழைகளுக்கு உயர் கல்வி என்பது சாத்தியமில்லாமல் போய்விடும். சமஸ்கிருதம், இந்தி மொழியை திணிக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கை உள்ளது.

சமூக நீதி, இட ஒதுக்கீடு, சிறு பான்மையினர் நலன் ஆகியவற் றுக்கு எதிராக உள்ள இந்த புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெறக்கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றவும் மத்திய அரசை வற் புறுத்த வேண்டும். கல்வியாளர் களைக் கொண்ட புதிய குழு அமைத்து கல்விக் கொள்கையை வகுக்கவும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

உயர் கல்வித் துறை அமைச் சர் கே.பி.அன்பழகன்:

புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையை ஆராய்ந்து தமிழகத்தின் நலன்களை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு தனது பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கும். தமிழகத்தின் மொழி, கலாச்சாரம், பண்பாட்டை பாதுகாக்கவும், கல்வித் துறையில் பின்பற்றப்படும் நடைமுறைகளை தொடரவும் தமிழக அரசு உறுதி பூண்டுள்ளது. சமஸ்கிருதம், இந்தி மொழிகள் திணிப்பதற்கான வாய்ப்பை தமிழக அரசு ஒருபோதும் வழங்காது. சமூக நீதி மற்றும் சிறுபான்மையினர் நலன்களை பாதுகாப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பி.பெஞ்சமின்:

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக உயர் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்த கருத்துகளை நானும் தெரிவிக்க விரும்புகிறேன். பள்ளிக்கல்வித் துறையில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகள் தொடர்வதை தமிழக அரசு உறுதிசெய்யும். சிறுபான்மையினர் நலன் போற்றிப் பாதுகாக்கப்படும்.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்:

அமைச்சர்களின் கருத்தை வரவேற்கிறேன். புதிய கல்விக் கொள்கையை திரும்ப பெறக்கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடை பெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x