Published : 12 Jun 2016 01:00 PM
Last Updated : 12 Jun 2016 01:00 PM

தேர்தல் தோல்வியால் பதவி பறிப்பு நடவடிக்கை: அச்சத்தில் கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள்

திமுகவில், கோவை வடக்கு வீரகோபால் உட்பட 3 மாவட்டச் செயலாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதனால் கொங்கு மண்டலத்தில் திமுக தோல்வி கண்ட தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டச் செயலாளர்கள் அச்சத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

தேர்தலுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒவ்வொருவரும் மாவட்டத்துக்கு குறைந்தபட்சம் 2 தொகுதிகளை வெற்றி பெற வைக்கவேண்டும், இல்லாவிட்டால் அவர்கள் தங்கள் கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்துவிட வேண்டும் என அறிவுறுத் தப்பட்டிருந்தது. அதையடுத்து, தோல்விக்கு பொறுப்பேற்று உடனடியாகவே திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் க.செல்வராஜ், ராஜினாமா செய்து கடிதம் அனுப்பினார்.

கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டல மாவட்டங்களை பொறுத்தவரை 90 சதவீதம் தொகுதிகளில் திமுக தோல்வியை தழுவியது. அதற்கு காரணம் கட்சிக்குள் நடந்த உள்ளடி வேலையே. எனவே தோல்விக்கு பொறுப்பேற்று மற்ற மாவட்டச் செயலாளர்கள் எப்போது ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கட்சிக்குள் தொடர்ந்து எழுந்தன. கோவை வருவாய் மாவட்டத்தில் உள்ள 4 கட்சி மாவட்டங்களில் இந்த குரல்கள் கூடுதலாகவே எழுந்தன.

மாவட்ட செயலாளர்கள் 4 பேரில் பொள்ளாச்சி தொகுதியில் தமிழ்மணிக்கு மட்டும் சீட் கிடைத்திருந்தது.

மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் தமிழ்மணி உட்பட 9 திமுக வேட்பாளர்கள் தோல்வியை தழுவினர். சிங்காநல்லூர் தொகுதி யில் மட்டும் திமுக வெற்றி பெற்றது.

எனவே அந்த மாவட்டச் செய லாளர் தவிர மீதி மாவட்டச் செய லாளர்கள் தம் பொறுப்பிலிருந்து விலக வேண்டும்; அல்லது கட்சி மேலிடம் அவர்களை நீக்க வேண் டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

சமீபத்தில் நடந்த மாவட்ட நிர் வாகிகள் கூட்டத்தில் வேட்பாளர் கள், அதிருப்தியாளர்கள் என்னென்ன உள்ளடி வேலைகள் செய்தார்கள் என்பதை பட்டியலிட்டே குற்றம்சாட்டினர். இதுகுறித்த செய்தி ‘தி இந்து’ ஜூன் 2ம் தேதி இதழில் வெளியானது.

அதையடுத்து, கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் வீரகோபால் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிக் கப்பட்டு மு.முத்துசாமி கட்சிப் பொறுப்பாளராக நியமிக்கப்பட் டுள்ளார்.

இது குறித்து கோவை திமுகவினர் சிலர் கூறும்போது, ‘கோவையில் 9 தொகுதிகளில் பெரும்பான்மை இடங்களில் சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடையக் காரணம், நிர்வாகிகளின் உள்ளடி வேலையே. தோல்வியடைந்த மாவட்டங்களில், கட்சியில் ரகசியக் குழு மூலம் ஆய்வு நடத்தி அளித்த அறிக்கையும், தலைமைக்கு வந்த புகார்களும் ஒத்துப்போவதால் முதல் கட்டமாக இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் 2 ஆண்டு கள் கட்சித் தேர்தல் நடந்தபோது கோவை வடக்கு மாவட்டத்தில் வரும் 6 பகுதிக் கழகங்களில் 4-ஐ வீரகோபால் அணியும், 2-ஐ மட்டும் பொங்கலூரார் அணியும் கைப்பற்றியது. அதில் ஒரு பகுதிக் கழகத்தின் நிர்வாகியான லோகுவின் மனைவிதான் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட்ட மீனா லோகு. அவர் தோல்வியை தழுவியதோடு, கருணாநிதியை சந் தித்து, நடந்ததை விளக்கியதாக செய்திகள் வந்தன. அதையடுத்தே கோவை வடக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இப்போது வடக்கு மாவட்ட கட்சிப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முத்துசாமியும் பொங்கலூரார் ஆதரவாளராக இருந்து பகுதிக் கழக செயலாளர் ஆனவர்தான்’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x