Published : 09 Mar 2017 10:08 AM
Last Updated : 09 Mar 2017 10:08 AM

ஜெ. உடல்நிலை குறித்த எந்த தகவலும் எனக்கு தெரிவிக்கவில்லை; சுகாதாரத்துறை செயலரின் அறிக்கையை வாபஸ் பெறாவிட்டால் வழக்கு தொடருவேன்: உண்ணாவிரதத்தில் ஓபிஎஸ் எச்சரிக்கை

ஜெயலலிதா உடல்நிலை குறித்த எந்த தகவலையும் எனக்கு தெரிவிக்கவில்லை. இதுதொடர்பாக சுகாதாரத்துறை செய லாளர் வெளியிட்ட அறிக்கையை திரும்பப் பெறாவிட்டால் அவர் மீது வழக்கு தொடரப்படும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலி தாவின் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி ஓ.பன்னீர்செல்வம் அணி யினர் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் 32 மாவட்டங்கள் தவிர புதுச்சேரி, பெங்களூரு, மும்பை மற்றும் சிங்கப்பூர் என 36 இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் பட்டது.

சென்னையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், செங்கல்பட்டில் மைத்ரேயன் எம்.பி., கிருஷ்ணகிரியில் கே.பி.முனுசாமி, திண்டுக்கல்லில் நத்தம் விஸ்வநாதன், ஆவடியில் க.பாண்டிய ராஜன், சேலத்தில் செம்மலை, கோவையில் எம்எல்ஏக்கள் ஆறுகுட்டி, சின்னராஜ், அருண்குமார், மதுரையில் எம்எல்ஏக்கள் மாணிக்கம், சரவணன், நெல்லையில் முன்னாள் எம்பி மனோஜ் பாண்டியன், புதுச்சேரியில் ஓம்சக்தி சேகர் ஆகியோர் தலைமையில் போராட்டம் நடந்தது. இதில், பல ஆயிரக்கணக் கானோர் பங்கேற்றனர்.

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் நடந்த போராட்டத் துக்கு இ.மதுசூதனன் தலைமை வகித்தார். காலை 9 மணிக்கே ஆயிரத்துக்கும் அதிக மானோர் திரண்டனர். 9.15 மணிக்கு ஓபிஎஸ் வந்தார். சரியாக 10 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கியது.

உண்ணாவிரதத்தின் நோக்கத்தை விளக்கிப் பேசிய முன்னாள் எம்எல்ஏ ஜே.சி.டி.பிரபாகர், ‘‘செப்டம்பர் 22-ம் தேதி போயஸ் கார்டனில் என்ன நடந்தது என்பதற்கு விடை தேடியே இந்த போராட் டம். இது மருத்துவர்களுக்கு எதிரான போராட்டம் அல்ல’’ என்றார். உண்ணாவிர தத்தில் நிர்வாகிகள் பேசியதாவது:

சட்டப்பேரவை முன்னாள் தலைவர் பி.எச்.பாண்டியன்:

யார் குற்றவாளி என் பது ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு தெரியும். அதிமுகவில் எம்ஜிஆர் காலத்திலேயே பல அணிகள் இருந்தன. ஆனாலும், அவர்கள் அனைவரும் அதி முகவில்தான் இருந்தனர். அந்த நிலை தான் தற்போதும் உள்ளது. சசிகலா குற்றவாளி என்பதால் அவர் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து எடுக்கப் பட வேண்டும். அவர் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக தெரிவதால், அவரது கைபேசி மற்றும் அவரது குடும்பத்தினரின் கைபேசி எண்களில் பேசிய விவரங்களை வெளியிட வேண்டும்.

முன்னாள் அமைச்சர் பொன்னையன்:

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ் ணன், பினாமி ஆட்சியின் கைக்கூலியாக மாறிவிட்டார். ஜெயலலிதாவுக்கு சிறுநீர் தொற்று ஏற்பட்டதால், செப்டிசீமியா உருவாகி அவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட தாக மருத்துவ அறிக்கையில் கூறப் பட்டுள்ளது. இதுபோன்ற நிலை ஏற்பட்டதற்கான காரணத்தை விளக்க நீதி விசாரணை வேண்டும். மருத்துவ மனையில் அனுமதிக்கப்படும் முன்பு, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச் சைக்கு சுகாதாரத் துறையே பொறுப்பு.

இ.மதுசூதனன்:

எனக்கு வாரியத் தலைவர் பதவி தருவதாக சசிகலா ஆசை வார்த்தை காட்டினார். அதை வேண்டாம் என்று கூறிவிட்டேன். சசிகலா சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்து, அதிமுகவுக்கு சொந்தமாக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர். உண்ணா விரத முடிவில் ஓ.பன்னீர்செல்வம் பேசிய தாவது: கட்சியையும், ஆட்சியையும் ஒரு தனிப்பட்ட குடும்பம் கபளீகரம் செய்யும் அசாதாரணமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதை மாற்றத்தான் தர்மயுத்தம் தொடங்கி யுள்ளோம். ஜெயலலிதா மரணமடைந்த நாளில், மாலை 4.30 மணிக்கே இறந்து விட்டதாக வீட்டில் இருந்த எனக்கு 6.30 மணிக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே மருத்துவமனைக்கு சென்று கேட்டபோது, ‘இன்னும் உறுதி செய்யப்படவில்லை’ என கூறினர். நேரம் கடத்தி 11.30 மணிக்கு காலமாகிவிட்டதாக தெரிவித்தனர்.

ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர் பான தகவலை என்னிடம் தெரிவித்ததாக சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார். ஆனால், எந்த செய்தியும் எனக்கு தெரிவிக்கப்படவில்லை. எனவே, அறிக்கையை செயலாளர் வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.

என்னிடம் விசாரணை நடத்த வேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். என்னிடம் விசாரித்தால் என்ன நடந்தது என்பதை சொல்கிறேன். உண்மை வெளிவந்தால் முதல் குற்றவாளி விஜயபாஸ்கர்தான்.

கடந்த 2011-ல், சசிகலா உள்ளிட்ட வர்களை கட்சியில் இருந்து ஜெய லலிதா நீக்கினார். மீண்டும் 2012-ல் சசிகலாவை மட்டும் சேர்த்தார். அப்போது சசிகலாவுடனோ, அவரது குடும்பத்தி னருடனோ யாரும் பேசக் கூடாது என்று ஜெயலலிதா உத்தரவிட்டார். அன்றி லிருந்து ஜெயலலிதா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டது வரை சசிகலாவிடம் நான் பேசியதே இல்லை. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 24-வது நாளில், வெளியில் வரும் போது சசிகலா என்னைப் பார்த்து, ‘அம்மா நன்றாக இருக்கிறார்’ என்றார். இதுதான் நடந்தது. மன்னிப்பு கடிதத்தில் சசி்கலா கூறிய சதித்திட்டம் தற்போது முழுமையாக நிறை வேறியுள்ளது. அதிமுக காப்பாற்றப்பட வேண்டும் என்ற நிலையில்தான் இந்த தர்மயுத்தம் நடக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அனைவருக்கும் பழரசம் கொடுத்து உண்ணாவிரதம் முடித்து வைக்கப்பட்டது.

*

சட்டப்பேரவை முன்னாள் தலைவர் பி.எச்.பாண்டியன் பேசும்போது, சசிகலாவை ‘கன்விக்ட் நம்பர் 3525’ என குறிப்பிட்டார்.

*

ஓ.பன்னீர்செல்வம் பேசத் தொடங்கியபோது அருகில் உள்ள கல்லூரி மாணவிகள், தனியார் நிறுவன ஊழியர்கள் எழும்பூர் ரயில் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அவர்கள், ஓபிஎஸ் பேசுவதை அறிந்ததும் நின்று முழுவதுமாக கேட்டுவிட்டு சென்றனர்.

*

உண்ணாவிரதப் போராட்டத்துக்காக எழும்பூர் ருக்குமணி லட்சுமிபதி சாலையின் ஒரு பக்கம் முழுவதும் 500 மீட்டர் தூரத்துக்கு பந்தல் அமைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான இருக்கைகள் போடப்பட்டிருந்தன.

*

10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டதால் ருக்குமணி லட்சுமிபதி சாலையில் முற்றிலுமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

*

போராட்டம் நடந்த பகுதியில் 10-க்கும் அதிகமான டிஜிட்டல் திரைகள் வைக்கப்பட்டிருந்தன.

படங்கள்: ம.பிரபு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x