Published : 04 Jun 2016 12:31 PM
Last Updated : 04 Jun 2016 12:31 PM

கல்வி வளாகங்கள் போதை வளாகங்களாக மாறுவதை தடுத்திடுக: ராமதாஸ்

மாணவர்களின் எதிர்காலத்தையும், நாட்டின் எதிர்காலத்தையும் சீரழிக்கும் போதைப் பொருட்களை தடுக்கத் தவறும் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புகழ்பெற்ற கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் பயிலும் மாணவர்கள் தங்களின் எதிர்காலத்தை இழக்கக்கூடிய ஆபத்தான பாதையில் பயணம் செய்கின்றனர். படித்து சிறந்த வேலைவாய்ப்பையும், வளமான எதிர்காலத்தையும் உருவாக்கிக் கொள்ள வேண்டிய மாணவர்கள், போதைமருந்து பழக்கத்திற்கு அடிமையாகிவருவது கவலையளிக்கிறது.

இந்தியாவில் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் அதிகமுள்ள பெருநகரங்களில் ஒன்றாக சென்னை உருவெடுத்துள்ளது. ஆனால், இந்த வரமே மிகப்பெரிய சாபமாக மாறியிருக்கிறது. சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள பல்வேறு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (IIT), தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனம்(NIFT), ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் (ACJ) உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் ஆந்திரா, கர்நாடகா, வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும், சீனா, இலங்கை, நேபாளம், நைஜீரியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் அதிக எண்ணிக்கையில் பயின்று வருகின்றனர்.

பல நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் நிர்வாகங்கள் வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட பிற மாநிலங்களில் முகவர்களை அமர்த்தி அவர்கள் மூலம் அங்குள்ள மாணவர்களை தங்களின் நிறுவனங்களில் சேர்க்கின்றன. தரமான கல்வி கற்க வேண்டும் என்பதற்காக வரும் மாணவர்கள் அவர்களையும் அறியாமல் போதை வலையில் வீழ்த்தப்படுவது தான் மிகவும் சோகமாகும்.

சென்னை மற்றும் வட தமிழகத்திலுள்ள உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவியரில் பெரும்பான்மையினர் கட்டுப்பாடற்ற பணக்கார குடும்பங்களை சேர்ந்தவர்கள் என்பதாலும், பெற்றோரின் கண்காணிப்புக்கு அப்பால் விடுதிகளில் தங்கியிருப்பது, ஏற்கெனவே போதைக்கு அடிமையான மூத்த நண்பர்களின் நட்பு, வளாகத்துக்கு அருகிலேயே தடையின்றி கிடைக்கும் போதை மருந்துகள் உள்ளிட்ட காரணங்களாலும் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வாழ்க்கையைத் தொலைக்கின்றனர்.

மாணவர்களை போதைப்பழக்கத்திற்கு அடிமையாக்க திட்டமிட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பெரும்பாலும் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்கள் தான் போதைக் கும்பலின் இலக்காக உள்ளனர். வீட்டிலிருந்து வந்து படித்து செல்லும் மாணவர்களிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோர் இத்தகைய போதைப் பழக்கத்திற்கு அடிமையாக்கப்படுகின்றனர்.

வார இறுதி நாட்களில் கொண்டாட்டங்கள் என்ற பெயரில் அழைத்துச் செல்லப்படும் மாணவர்களுக்கு முதலில் சிறிதளவு மட்டும் போதைப் பொருட்கள் கொடுக்கப்படுகின்றன. அதற்கு மயங்கும் மாணவர்கள் முதலில் வார இறுதி நாட்களில் போதை மருந்து உட்கொள்ளத் தொடங்கி, பின்னர் தினமும் பயன்படுத்தி ஒரு கட்டத்தில் போதை மருந்து இல்லாமல் வாழ முடியாது என்ற நிலைக்கு ஆளாகின்றனர்.

மாணவர்கள் மட்டுமின்றி மாணவிகளும் இப்பழக்கத்திற்கு அடிமையாவது தான் கொடுமை. சென்னை புறநகரில் பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் மாணவிகள் விடுதியில் அண்மையில் நடத்தப்பட்ட திடீர் ஆய்வில் பல மாணவிகளின் அறையில் போதை மருந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் தங்கள் பிள்ளைகளை விடுதியில் இருந்து அழைத்துச் சென்றிருக்கின்றனர். இந்த பல்கலைக்கழகத்தில் மட்டும் தான் என்றில்லை.பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் இதே நிலை என்பது தான் மறுக்க முடியாத உண்மையாகும்.

சென்னையில் உள்ள பல கல்வி நிறுவனங்களுக்கு அருகில் போதை மருந்து விற்கப்படுவது பல ஆண்டுகளாக நடந்து வருவது தான். அரசு கல்லூரிகளும், சில பள்ளிகளும் கூட இதற்கு விதிவிலக்கு அல்ல. ஆனால், அப்போதெல்லாம் அதிகபட்சமாக கஞ்சா என்ற போதைப் பொருளும், மாவா எனப்படும் போதை தரும் மருந்துகளும் தான் விற்கப்படும். அப்போது மதுப்பழக்கமும், புகைப்பழக்கமும் தான் மாணவர்களிடையே காணப்படும் அதிகப்பட்ச தீய பழக்கங்களாக இருந்தன.

ஆனால், இப்போது பணக்கார கல்வி நிறுவனங்களில் பயிலும் பணக்கார மாணவர்களின் உதவியால் விலை உயர்ந்த, மிகவும் ஆபத்தான போதைப் பொருட்கள் மாணவர்களின் கைகளில் கிடைக்கத் தொடங்கியுள்ளன. கஞ்சா, அபின், ஹெராயின், கோகைன் உள்ளிட்ட போதை மருந்துகள் மட்டுமின்றி எல்.எஸ்.டி (Lysergic Acid Diethylamide -LSD) எனப்படும் ஒரு வகை போதை மருந்தையும் மாணவர்கள் பயன்படுத்துகின்றனர். ஒருவகையான காளானிலிருந்து தயாரிக்கப்படும் இந்த போதை மருந்து குறைந்த பட்சம் 12 மணி நேரம் மாயை உலகில் மனிதர்களை வைத்திருக்கும் தன்மை கொண்டதாகும். மேலும் கொடைக்கானல் மலைப்பகுதியில் கிடைக்கு பழுப்பு நிறக் காளான் அதிக போதை தருவது என்பதால் அதுவும் மாணவர்கள் கைகளுக்கு கிடைப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலையுடன் கூறுகின்றனர்.

கல்லூரி மாணவர்களுக்கு போதை மருந்துகளை விற்பனை செய்வதற்குய் நவீனமான முறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. வெளிமாநிலங்களிலிருந்து வந்து விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களை வளைக்கும் போதை மருந்து கும்பல், போதைப் பொருட்களை சக மாணவர்களிடம் விற்பனை செய்தால் மிகப்பெரிய அளவில் பணம் ஈட்டலாம் என்று மூளைச்சலவை செய்து போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுத்துகின்றனர்.

பிற மாநிலங்களைச் சேர்ந்த வேறு சில மாணவர்கள் பெங்களூரு, ஹைதராபாத், திருவனந்தபுரம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் என தங்களின் ஊர்களில் இருந்து போதை மருந்துகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். ஒருமுறை போதைக்கு அடிமையானவர்களால் போதை மருந்து உட்கொள்ளாமல் இருக்க முடியாது. அதனால் சென்னையில் எந்த மூலையில் போதை மருந்து கிடைக்கும் என்பது அவர்களுக்கு தெரிந்துள்ளது.

கஞ்சா போன்ற போதை மருந்துகள் வடசென்னை பகுதிகளிலும், உயர்வகை போதை மருந்துகள் எழும்பூர், தரமணி, கிண்டி, சைதாப்பேட்டை, அடையாறு, திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களிலும், புறநகர் பகுதிகளில் மதுரவாயல், பூந்தமல்லி, வண்டலூர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களில் போதை மருந்து விற்பனை தடையின்றி நடைபெற்று வருகிறது. வாடிக்கையாளர்களின் அறைகளுக்கே போதை மருந்தை கொண்டு சென்று வழங்குவதும் நடக்கிறது.

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்து மாணவர்கள் இந்த பழக்கத்திற்கு அடிமையாகி எதிர்காலத்தை இழப்பது வழக்கமாகிட்டது. அண்மையில் என்னை சந்தித்த சில பெற்றோர் அவர்களின் பிள்ளைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி தெரிவித்த தகவல்கள் அதிர்ச்சியும், கவலையும் அளிப்பவையாக இருந்தன.

சென்னை மற்றும் வடமாவட்டங்களில் மட்டும் தான் என்றில்லாமல் மேற்கு மாவட்டங்களிலும் இதே நிலை தான் காணப்படுகிறது. சேலம், கோவை பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்களில் போதையின் ஆதிக்கம் மட்டுமின்றி, கலாச்சார சீரழிவுகளும் நடைபெறுகின்றன. இவை அனைத்தும் கல்லூரி நிர்வாகங்களுக்கு நன்றாக தெரியும் என்ற போதிலும், இதுகுறித்த உண்மைகள் வெளியில் தெரிந்தால் பெயர் கெட்டுவிடும் என்பதற்காக தவறு செய்த மாணவர்களுக்கு அபராதம் மட்டும் விதித்து விட்டு, நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் மூடி மறைத்து விடுகின்றன. இது தவறு செய்யும் மாணவர்களுக்கு மீண்டும் மீண்டும் தவறு செய்வதற்கான துணிச்சலை வழங்குகின்றன என்பது இன்னொரு அவலம்.

மாணவர்களுக்கு கல்வியை விட நன்னெறியும், நல்லொழுக்கமும் தான் மிகவும் முக்கியம் ஆகும். கல்வி என்ற உன்னதத்தை பெறுவதற்காக வரும் மாணவர்கள் போதை என்ற சாத்தானிடம் சிக்கி சீரழிவதை அரசு அனுமதிக்கக் கூடாது. கல்வி நிறுவனங்களுக்கு அருகில் நடக்கும் போதைப்பொருள் விற்பனையைத் தடுக்ககி கோரி பல போராட்டங்களை பாமக நடத்தியுள்ளது.

சென்னையில் எந்தெந்த பகுதிகளில் போதை மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன என்பதை அங்கு வாங்கப்பட்ட போதை மருந்துகளை 2006-11 கருணாநிதி ஆட்சிக் காலத்தில் சட்டப்பேரவையில் காட்டி, பாமக தலைவர் ஜி.கே.மணி பேசியிருக்கிறார். அவரது புகார் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதாக சட்டப்பேரவையில் அமைச்சர்கள் உறுதியளித்தனர். ஆனால், இன்று வரை போதை சாத்தானை தடுக்க எந்த அரசும், நடவடிக்கை எடுக்கவில்லை. இனியும் இதேநிலை தொடராமல் இருப்பது தான் சமூகத்துக்கு நல்லது.

கல்வி வளாகங்கள் போதை வளாகங்களாக மாறுவதை தடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் அவற்றின் நிர்வாகங்களுக்கு உண்டு. அவை நினைத்தால் இதை சாதிக்கலாம். உதாரணமாக, சத்யபாமா பல்கலைக்கழகம் மற்றும் அதன் குழும நிறுவனங்களின் வளாகங்களில் போதைப் பொருட்கள் அண்ட விடாமல் நிர்வாகம் தடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. தனியார் கல்வி நிறுவன நிர்வாகிகள் தங்களின் சங்கம் மூலம் இதற்கான வழிமுறைகளை அப்பல்கலைக்கழக நிர்வாகத்திடமிருந்து அறிந்து தங்களின் கல்வி நிறுவனங்களிலும் செயல்படுத்தலாம்.

இதேபோல், தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்கள் மட்டுமின்றி, எந்த இடத்திலும் போதை மருந்து விற்கப்படவில்லை என்ற நிலையை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும். இதற்காக காவல்துறையில் தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, மாணவர்களின் எதிர்காலத்தையும், நாட்டின் எதிர்காலத்தையும் சீரழிக்கும் போதைப் பொருட்களை தடுக்கத் தவறும் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும்.

இதற்கான நடவடிக்கைகளை ஜெயலலிதா அரசு மேற்கொள்ளத் தவறினால், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கிறேன்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x