Published : 23 Feb 2017 12:49 PM
Last Updated : 23 Feb 2017 12:49 PM

அடுத்தடுத்து அணைகள் கட்டும் கர்நாடக, கேரள அரசுகள்: காவிரி பாசனப் பகுதியில் 200 டிஎம்சி நீரை சேமிக்க திட்டமிட வேண்டும் - தமிழகத்தை காப்பாற்ற விவசாயிகள் வலியுறுத்தல்

கர்நாடகா மற்றும் கேரள அரசுகள் தமிழகத்துக்கு தண்ணீரை தரக் கூடாது என்பதற்காக பல்வேறு அணைகளைக் கட்டி வருகின்றன. இதனால் தமிழகத்தை வறட்சி யிலிருந்து காப்பாற்ற காவிரி பாசனப் பகுதிகளில் பெய்யும் மழையிலிருந்து 200 டிஎம்சி தண்ணீரைச் சேமிக்க தமிழக அரசு உரிய திட்டமிடுதல்களை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என விவசாய சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

காவிரியில் தமிழகத்துக்கு உள்ள உரிமையை உறுதிசெய்து காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித்தீர்ப்பை கர்நாடக அரசு இதுவரை முறையாக அமல்படுத்தி, தமிழகத்துக்கு உரிய தண்ணீரைத் தரவில்லை. இந்தத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டும், தீர்ப்பில் தெரிவித்தபடி காவிரி மேலாண்மை வாரியம், நீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை மத்திய அரசு அமைக்கவில்லை.

காவிரியில் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடகா திறக்காததால், கடந்த 5 ஆண்டு களாக தமிழகத்தில் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட் டுள்ளது. மேலும், காவிரியை ஆதாரமாகக் கொண்டு செயல்படும் கூட்டுக்குடிநீர் திட்டங்களும் தண்ணீர் இல்லாததால் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.

காவிரியில் தொடர்ந்து தண்ணீர் கிடைக்காததால் வாங்கிய கடனைக் கட்ட முடியாமலும், குடும்பத்தை நடத்த போதுமான வருமானம் இல்லாமலும் விவசாயிகள் பெரும் பொருளாதார சிக்கலில் உள்ளனர்.

கர்நாடகா மற்றும் கேரள அரசுகள் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை வழங்காமல் தங்கள் மாநிலங்களில் தமிழகத்துக்கு தண்ணீர் வரும் ஆறுகளின் குறுக்கே புதிய அணைகளைக் கட்டி வருகின்றன. இதனால் தமிழகத்துக்கு வருங்காலங்களில் இந்த மாநிலங்களிலிருந்து தண்ணீர் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் காவிரிப் பாசனப் பகுதிகளில் பெய்யும் மழைநீரில் 200 டி.எம்.சி. தண்ணீரைச் சேமிக்க உரிய திட்டமிடுதல்களை போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டியது அவசியமானது என்கின்றனர் விவசாயிகள்.

இதுகுறித்து, தமிழ்நாடு காவிரிப் பாசன விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் மகாதானபுரம் ராஜாராம் கூறியதாவது: கர்நாடகா மற்றும் கேரள அரசுகள் அணைகளைக் கட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கவில்லை. கர்நாடக அரசு கபினி நீர்த்தேக்கத்தில் இருந்து ரூ.212 கோடி செலவில் 0.56 டிஎம்சி தண்ணீரை நஞ்சன்கூடு சாம்ராஜ் நகரில் உள்ள 20 ஏரிகளுக்கு ராட்சத பம்புசெட்டுகள் மூலம் கொண்டுசெல்லும் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது. இதனால் அங்கு 154 கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இதேபோன்று, சாம்ராஜ் மாவட்ட ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டுசெல்லும் 4 திட்டங்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றுக்காக முறையே 2010, 1675, 2275 குதிரைத்திறன் கொண்ட ராட்சத பம்புசெட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன.

காவிரி நீரை நீரேற்றுப் பாசனம் உறிஞ்சி எடுத்துச் செல்வதால் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளுக்கு குறைந்தபட்ச நீரே வரும். இதனால் எதிர்காலத்தில் பிலிகுண்டுலுவுக்கு கீழே மேட்டூர் அணை வரையிலான 25 கிலோ மீட்டர் பரப்பில் பெய்யும் மழைநீரே மேட்டூர் அணைக்கு கிடைக்கும் என்ற நிலை உள்ளது.

தமிழக காவிரிப் பகுதியில் 200 டிஎம்சிக்கு மேல் மழை வளம் உள்ளது என காவிரி நடுவர் மன்றம் தெரிவித்துள்ளது. மற்ற மாநிலங்கள் செய்தது போன்று தமிழகத்திலும் நீர் சேமிப்புத் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும். டெல்டா பகுதியில் பெய்யும் வடகிழக்குப் பருவமழை நீர் கடலில் சென்று வீணாகாமல் தடுக்க நீரேற்றுப் பம்புசெட்டுகள் மூலம் கல்லணைக்கு மேற்கே பல ஏரிகளை உருவாக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் திட்டமிட வேண்டும்.

இந்தப் பணிகளை வரும் கோடைக்காலத்திலேயே தொடங்கும் வகையில் வல்லுநர் கள், விவசாய சங்க நிர்வாகிகள் கொண்ட குழுவை அமைத்து அதற்கான பணிகளைத் தொடங்க வேண்டும்.

மேலும், எங்கள் சங்கம் சார்பில் அனைத்து விவசாய சங்கத் தலைவர்கள், வல்லுநர்கள் ஆகியோரிடம் கருத்துகளைப் பெற்று ஒரு வரைவுத் திட்டத்தை தயாரித்து தமிழக அரசிடம் சமர்ப்பிக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x