Published : 23 May 2017 01:34 PM
Last Updated : 23 May 2017 01:34 PM

ரூ.36 கோடி மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத் துறை கட்டிடங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்

36 கோடியே 31 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை கட்டிடங்களை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

இது தொடர்பாக இன்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை சார்பில், ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தில் 9 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மீன் இறங்குதளதை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

மேலும், திருவொற்றியூர், சோழந்தூர் மற்றும் ஏர்வாடி ஆகிய இடங்களில் 63 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 கால்நடை மருந்தகக் கட்டிடங்கள், ராமநாதபுரத்தில் 58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒரு கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி நிலையக் கட்டிடம், 25 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத் துறை கட்டிடங்கள் ஆகியவற்றை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

மேலும், நாமக்கல், மதுரை, புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருவண்ணாமலை மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் அறுவை சிகிச்சை அறை, ஆய்வக அறை, சிகிச்சைக் கூடம் ஆகிய வசதிகளுடன் 5 கோடியே 94 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 28 கால்நடை மருந்தகக் கட்டிடங்கள், கரூரில் 61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒரு கால்நடை நோய் புலனாய்வு பிரிவு கட்டிடம், கரூர் மாவட்டம் - குளித்தலை, தருமபுரி மாவட்டம் - சின்னாறு, திண்டுக்கல் மாவட்டம் - அணைப்பட்டி, தேனி மாவட்டம் - வைகை அணை, திருநெல்வேலி மாவட்டம்- மணிமுத்தாறு ஆகிய இடங்களில் 15 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட மீன் பண்ணைகளை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் - சாமந்தன்பேட்டையில் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மீன் இறங்கு தளம், மதுரையில் 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் புதிய பயிற்சி மற்றும் ஆய்வு மையக் கட்டிடம், திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் பால்பண்ணையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக வளாகத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணைவேந்தர் மாளிகை, பதிவாளர் குடியிருப்பு மற்றும் இயக்குநர் குடியிருப்புகள் என மொத்தம் 36 கோடியே 31 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை கட்டிடங்களை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று திறந்து வைத்தார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x