Published : 23 Mar 2017 11:23 AM
Last Updated : 23 Mar 2017 11:23 AM

கிணற்றில் தவறி விழுந்த யானையை மீட்க வனத் துறையினர் தீவிர முயற்சி

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே கிணற்றில் தவறி விழுந்த யானையை மீட்க வனத் துறையினர் முயன்றனர். எனினும், மாலை நேரமாகிவிட்டதால் இன்று (மார்ச் 23) யானையை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.

மேட்டுப்பாளையம் அருகேயுள்ள பாலமலை வனப் பகுதியிலிருந்து தண்ணீர், உணவு தேடி வந்த யானைக் கூட்டம், மலை அடிவாரத்தில் உள்ள கோவனூர் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு புகுந்தது. அந்தக் கூட்டத்தில் இருந்த, 10 வயது மதிக்கத்தக்க ஆண் யானை, சவுந்திரராஜன் என்பவரது தோட்டக் கிணற்றில் தவறி விழுந்தது. தண்ணீர் வற்றியதால் வறண்ட அந்தக் கிணற்றை பயன்படுத்தாமல் வைத்திருந்தனர்.

அந்த யானையை மீட்க முடியாததால், உடன் வந்த யானைகள் கிணற்றை சுற்றிச் சுற்றி வந்து, பிளிறியபடி நின்றன.

தகவலறிந்து வந்த வனத் துறையினர், கிணற்றின் அருகே நின்றிருந்த பிற யானைகளை காட்டுக்குள் விரட்டினர். பின்னர், கிணற்றில் விழுந்த யானையை மீட்க பெரும் முயற்சி மேற்கொண்டனர். இதற்காக கிரேன், பொக்லைன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. அந்த யானைக்கு பழங்கள், தென்னை மட்டை, கரும்பு மற்றும் தண்ணீரை வனத் துறையினர் வழங்கினர். அதன் கோபத்தை தணிக்க பழத்தில் மருந்து வைத்தும் கொடுத்துள்ளனர்.

இதற்கிடையே, மாலை நேரமாகி இருட்டத் தொடங்கியதால் யானையை மீட்கும் முயற்சி ஒத்திவைக்கப்பட்டது. இன்று காலை யானைக்கு லேசான மயக்க மருந்தை செலுத்தி, கிரேன் மூலம் அதை மீட்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்று வனத் துறையினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x