Last Updated : 05 Feb, 2014 12:00 AM

 

Published : 05 Feb 2014 12:00 AM
Last Updated : 05 Feb 2014 12:00 AM

சென்னையில் விரைவில் 150 மிதிவண்டி நிலையங்கள்- மோட்டார் வாகன போக்குவரத்தை குறைக்க மாநகராட்சி திட்டம்

சென்னையில் 150 இடங்களில் மிதிவண்டி நிலையங்களை விரைவில் அமைக்க மாநகராட்சி நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதற்கான டெண்டர்கள் இன்னும் சில நாட்களில் விடப்பட இருக்கின்றன.நகரின் முக்கிய சந்திப்புகளில் அமைக்கப்பட உள்ள இந்த நிலையங்களிலிருந்து மிதிவண்டிகள் எடுத்து கொண்டு விருப்பப்பட்ட இடத்துக்கு சென்று அருகில் இருக்கும் வேறொரு நிலையத்தில் மிதிவண்டியை நிறுத்தி விடலாம்.

சீனா, பிரான்சு உள்ளிட்ட வெளி நாடுகளில் செயல்பாட்டில் இருக்கும் இந்த திட்டம் மோட்டார் வாகன போக்குவரத்தை பெருமளவில் குறைக்க உதவுகிறது. பிரான்சு நாட்டின் பாரிஸ் நகரத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் ஒரு மணி நேரத்தில் காரில் கடக்கும் தூரத்தை சைக்கிளில் (சராசரியாக ஒரு மணி நேரத்தில் 15 கி.மீ.) மிக எளிதாக கடக்க முடிகிறது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் டெல்லியிலும் பெங்களூருவிலும் இத்திட்டம் செயல்பாட்டில் உள்ளது. 2012-ம் ஆண்டில் சென்னையில் 14 லட்சம் மிதிவண்டிகள் ஓடிக்கொண்டிருந்தன. தற்போது இந்த எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது. சென்னையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டால் மோட்டார் வாகன போக்குவரத்தை குறைத்து மிதிவண்டி பயன்படுத்துவதையும் நடந்து செல்வதையும் ஊக்குவிக்க முடியும். தற்போது விடப்படும் டெண்டரில் வெளிநாட்டு நிறுவனங்களும் பங்கு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திட்டம் செயல்படும் முறை

ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் மிதிவண்டி நிலையங்கள் அமைக்கப்படும். ஒவ்வொரு நிலையத்திலும் 10 முதல் 20 மிதிவண்டிகள் இருக்கும். உதாரணமாக, சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பெசன்ட் நகர் செல்ல விரும்பும் ஒருவர், அடையாறு இந்திரா நகர் வரை ரயிலில் சென்று, அங்கு இருக்கும் மிதிவண்டி நிலையத்திலிருந்து மிதிவண்டியை எடுத்துக் கொண்டு பெசன்ட் நகர் பகுதி வரை செல்லலாம். அங்கிருக்கும் வேறொரு நிலையத்தில் மிதிவண்டியை நிறுத்தி விடலாம்.

இதேபோல இந்திரா நகரிலிருந்து பெசன்ட் நகர் செல்ல விரும்புபவர் பேருந்திலோ, ஆட்டோவிலோ செல்லாமல் இந்திரா நகர் ரயில் நிலையம் வரை நடந்து சென்று அங்கிருந்து மிதிவண்டியை எடுத்துக் கொள்ளலாம்.

மிதிவண்டியை நிறுத்தும் இடத்தில் ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி கட்டணத்தை செலுத்தலாம். மிதிவண்டிகள் தொலையாமல் இருக்க ஜிபிஎஸ் முறை பயன்படுத்தப்படும்.

இது குறித்து, நகர்ப்புற திட்ட ஆராய்ச்சியாளர் மற்றும் ஆசிரியர் எ.வத்சன் கூறுகையில், “நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டெர்டாம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மிதிவண்டி நிலையங்கள் இயங்குகின்றன. எல்லா இடங்களிலும் மிதிவண்டி திருடு என்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. எனவே மிதிவண்டி நிலையங்களை அமைப்பது மட்டுமல்லாமல், மிதிவண்டிகள் திருடு போகாமல் இருக்க, விபத்துகளை தவிர்க்க பாதுகாப்பான மிதிவண்டி பாதைகள், அருகருகே மிதிவண்டி நிலையங்கள் அமைப்பது போன்ற அனைத்து அம்சங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் இத்திட்டம் வெற்றி அடையும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x