Published : 21 Mar 2014 02:09 PM
Last Updated : 21 Mar 2014 02:09 PM

பெரம்பலூர்: 100 வயது மனுதாரருக்காக விரைவான விசாரணை தீர்ப்பு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி மற்றும் அனல் மின் நிலையத் திட்டத்துக்காக நிலம் கொடுத்தோருக்கான இழப்பீடு கோரும் வழக்கில், 100 வயதான மனுதாரருக்காக வழக்கு விசாரணையை விரைவாக முடித்து தீர்ப்பை வெளியிட்டது ஜெயங்கொண்டம் சிறப்பு நீதிமன்றம்.

மின் திட்டத்துக்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கான இழப்பீடு வழங்குவது தொடர்பாக அதிக எண்ணிக்கையில் வழக்குகள் தொடரப்பட்டதால் இதற்காகவே 2 சிறப்பு நீதிமன்றங்கள் ஜெயங் கொண்டத்தில் தொடங்கி செயல்பட்டு வருகின்றன.

வழக்குத் தொடர்ந்தவர்களில் உடையார்பாளையம் தர்மராசு மகன் ராமதுரையும் (100) ஒருவர். 1914-ல் பிறந்த இவர், உடையார்பாளையம் ஜமீனிலும், பிறகு ஜெயங் கொண்டம் பேரூராட்சியாக இருந்தபோது எழுத்தரா கவும் பணியாற்றியவர். முந்திரி மரங்களுடன் இருந்த ராமதுரையின் 2.98 சென்ட் நிலம் மின் திட்டப் பணிக்காக கையகப்படுத்தப்பட்டபோது, அரசுத் தரப்பில் அவருக்கான இழப்பீட்டு தொகையாக ரூ.84,673 வழங்கப்பட்டது. ஆனால், கூடுதலாக இழப்பீடு கேட்டு ராமதுரை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

நிகழாண்டு ஜன. 28-ல் சிறப்பு நீதிமன்றம் 2-ல் வழக்கு விசாரணை தொடங்கியபோதே, ராமதுரையின் வயதைக் கருத்தில் கொண்டு விரைவாக வழக்கு விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. நீதிமன்றமும் அதை ஏற்றுக்கொண்டு, ஒன்றரை மாதத்தில் விசாரணையை முடித்து திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கியது.

ராமதுரைக்கு இழப்பீடாக சென்ட் நிலத்துக்கு ரூ.2,500 வீதமும், தலா ரூ.3,000 வீதம் 62 முந்திரி மரங்களுக்கும், 30% ஆறுதல் தொகையாகவும், நிலம் மற்றும் மரத்துக்கு முதலாண்டுக்கு 9% வட்டியும், 2-வது ஆண்டிலிருந்து இழப்பீடு வழங்கப்படும் வரை 15% வட்டியும் வழங்க வேண்டும் என்று திங்கள்கிழமை தீர்ப்பளிக் கப்பட்டது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x