Published : 13 Jan 2017 12:35 PM
Last Updated : 13 Jan 2017 12:35 PM

மஞ்சளாற்றில் மணல் திருட்டு கும்பல் அட்டகாசம்: ஆற்றோர நிலத்திலிருந்து தென்னைகள் சாய்ந்து விழும் அவலம்

வத்தலகுண்டு அருகே மஞ்சளாற்றில மணல் திருட்டு அதிகரித்துள்ளது. ஆற்றங்கரையை தோண்டி மணல் அள்ளப்படுவதால், விளைநிலங்களில் உள்ள தென்னை மரங்கள் சாய்ந்து விழுகின்றன. இதனால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொடைக்கானல் மலையில் உருவாகி தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் வழியாக வைகை ஆற்றில் கலக்கிறது மஞ்சளாறு. இதில், வத்தலகுண்டு அருகே செல்லும் மஞ்சளாற்றில் அதிக அளவில் மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. ஆற்றில் உள்ள மணல் முழுவதும் திருடப்பட்ட நிலையில், தற்போது கணவாய்ப்பட்டி கிராமம் அருகே ஆற்றங்கரையில் உள்ள மணலை தோண்டி எடுக்கின்றனர்.

விளைநிலங்களின் உரிமை யாளர்களை மிரட்டி டிராக்டர்களில் மணல் திருட்டு நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆற்றங்கரையோரப் பகுதியில் விளைநிலங்களில் வண்டல்படிவு மேலாக காணப்பட்டாலும் அடியில் மணல் இருப்பதை காணமுடிகிறது. இதற்காக நிலத்தை குடைந்து மணல் அள்ளுகின்றனர்.

இதுபோன்று மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் மண்ணோடு புதைந்து உயிரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளன. அதன் பின்பும், அந்த கும்பல் மணல் திருட்டை கைவிடவில்லை. இதை தட்டிக்கேட்கும் சமூக ஆர்வலர்களுக்கும் கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.

இதுகுறித்து வத்தலகுண்டை சேர்ந்த விவசாயி இளங்கோ கூறியதாவது:

மஞ்சளாற்றுப் பகுதியில் முன்பு ஜேசிபி இயந்திரம் மூலம் மணல் அள்ளும் பணியில் சிலர் ஈடுபட்டனர். தற்போது அந்த அளவுக்கு மணல் இல்லை என்பதால், அவர்கள் மணல் திருடுவதை நிறுத்திவிட்டனர். தற்போது ஆற்றங்கரையோரம் வண்டல்படிவுக்கு கீழே புதைந்துள்ள மணலை தோண்டி எடுத்து டிராக்டர்கள் மூலம் கடத்தி வருகின்றனர்.

இதனால் விளைநிலங்களில் உள்ள தென்னைமரங்கள் சாய்ந்து விழுகின்றன. ஆற்றங்கரையோரம் உள்ள விளைநிலங்களின் உரிமை யாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தால், அவர்களை மணல் திருட்டு கும்பல் மிரட்டுகிறது. ஆற்றங்கரைகளை சேதப்படுத்துதால் மழை காலங்களில் ஆறு திசைமாறிச் சென்று வெள்ளப் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து வருவாய்த்துறை யினரிடம் புகார் கொடுத்தபோதும், எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இருக்கும் சிறிது மணலையாவது காப்பாற்ற மாவட்டநிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x