Published : 27 Feb 2014 03:47 PM
Last Updated : 27 Feb 2014 03:47 PM

தேமுதிக, பாமக எம்எல்ஏ முதல்வருடன் திடீர் சந்திப்பு

திருத்தணி தொகுதி தேமுதிக எம்எல்ஏ அருண் சுப்பிரமணியன் மற்றும் பாமக எம்எல்ஏ கலையரசு ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை சந்தித்தனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு தலைமைச் செயலகத்துக்குச் சென்ற முதல்வர் ஜெயலலிதாவை இரு எம்எல்ஏ-க்களும் தனித்தனியாக சந்தித்ததாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

திருத்தணி எம்எல்ஏ அருண் சுப்பிரமணியனைச் சேர்த்து, தேமுதிக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 9 எம்எல்ஏக்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துள்ளனர். இவர்களில் 8 பேர் தொடர்ந்து தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்களாக நீடித்து வந்தாலும், சட்டப்பேரவையில் அவர்களுக்குத் தனி இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக-வுடன் தேமுதிக கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. கடந்த 2012-ம் ஆண்டில் சட்டப்பேரவையில் பேசும்போது முதல்வருக்கும், தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கும் மோதல் ஏற்பட்டது. அதன்பிறகு அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது.

இதைத் தொடர்ந்து அக்கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் ஜெயலலிதாவை தங்கள் தொகுதி நலன் கருதி பார்க்கத் தொடங்கினர்.

2012-ல் தொடங்கிய பிரிவு

முதன்முதலாக கடந்த 2012 அக்டோபர் 26-ம் தேதி தமிழழகன், சுந்தர்ராஜன் ஆகிய தேமுதிக எம்எல்ஏ-க்கள் முதல்வரைச் சந்தித்து, பரபரப்பை ஏற்படுத்தினர். அதற்கு மறுநாளே அருண்பாண்டியன், மைக்கேல் ராயப்பன் ஆகியோர் முதல்வரைச் சந்தித்தனர்.

இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி, செங்கம் சுரேஷ்குமார் எம்எல்ஏ-வும் முதல்வரைச் சந்தித்தார். பின்னர், அக்கட்சியின் பெண் உறுப்பினர் சாந்தியும் (மே 29), அவரைத் தொடர்ந்து ஏழாவதாக மாபா பாண்டியராஜனும் (ஜூன் 12) ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினர். முதல்வரைச் சந்தித்த பிறகு, தங்கள் தொகுதியில் நலத்திட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக அவ்வப்போது அவர்கள் பேட்டியும் அளித்து வருகின்றனர்.

பண்ருட்டி ராமச்சந்திரன்

இந்நிலையில், தேமுதிக-வில் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அக்கட்சியின் அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கடந்த நவம்பர் 9-ந் தேதி கட்சியில் இருந்து விலகினார். தனது எம்எல்ஏ பதவியையும் அவர் ராஜினாமா செய்தார். இதனால் தேமுதிக-வின் அதிகாரப்பூர்வ பலம், 28 ஆகக் குறைந்தது. பண்ருட்டி ராமச்சந்திரன், முதல்வரைச் சந்தித்து அதிமுக-விலும் சேர்ந்துவிட்டார். ஏற்கெனவே 7 அதிருப்தி எம்எல்ஏக்கள், முதல்வரைச் சந்தித்துவிட்டனர். இதனால், தேமுதிக-வுக்கு ஆதரவான எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை சட்டப்பேரவையில் 21 ஆக குறைந்தது.

தேமுதிக-வுக்கு பின்னடைவு

இந்நிலையில், தேமுதிக எம்எல்ஏ அருண் சுப்பிரமணியன், முதல்வரை வியாழக்கிழமை திடீரென சந்தித்தார். அவர் சந்திப்பு குறித்த விவரங்கள் தெரியவில்லை.

இச்சந்திப்பின் மூலம் சட்டப்பேரவையில் தேமுதிக ஆதரவு எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை 20 ஆக குறைந்துள்ளது.

அருண் சுப்பிரமணியன் மீது ஆளும்கட்சி சார்பில் நில அபகரிப்பு வழக்கு போடப்பட்டிருந்தது. அவர், முதல்வரைச் சந்தித்திருப்பது, தேர்தல் நேரத்தில் தேமுதிக-வுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோல், பாமக உறுப்பினரான (அணைக்கட்டு) கலையரசுவும் ஜெயலலிதாவை வியாழக்கிழமை சந்தித்தார். சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில் அவர் கடந்த சில மாதங்களாக கலந்து கொள்ளவில்லை. கட்சியிலும் ஒதுங்கியே இருந்துவந்தார்.

முதல்வருடனான சந்திப்பு பற்றி அவரிடம் கேட்டபோது, “முதல்வருக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொல்லச் சென்றதாகவும், தொகுதியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளதற்காக நன்றி சொன்னதாகவும்” கூறினார்.

10 ஆக உயர்வு

சில மாதங்களுக்கு முன்பு புதிய தமிழகம் எம்எல்ஏ ராமசாமியும் (இவரும் அதிருப்தியில் உள்ளார்) சந்தித்துப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், முதல்வரை 10 எதிர்க்கட்சி எம்எல்ஏ-க்கள் சந்தித்துப் பேசியிருக்கின்றனர்.

தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை, முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தொகுதி சார்ந்த பணிகள் தொடர்பாக மனு அளித்த (இடமிருந்து) வேலூர் அணைக்கட்டு தொகுதி பாமக எம்எல்ஏ ம.கலையரசு, தேமுதிக திருத்தணி எம்எல்ஏ எம்.அருண் சுப்பிரமணியன்.

தேமுதிக பாணியில் பாமக எம்எல்ஏ

தேமுதிக அதிருப்தி எம்எல்ஏக்கள் போல பாமகவின் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் கலையரசு தமிழக முதல்வரை சந்தித்திருப்பது பாமகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதிருப்தியில் உள்ள கலையரசுவை சமாதானப்படுத்தும் முயற்சிகளை பாமக தலைமை தீவிரமாக இறங்கியுள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் அதிமுக அனுதாபியாக கருதப்படுபவர் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியின் பாமக உறுப்பினர் கலையரசு. அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து தமிழக முதல்வர் மற்றும் அரசின் திட்டங்களுக்கு ஆதரவாகவே சட்டமன்றத்தில் பேசிவருபவர். சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட சில காலம் வரை பாமக கரை வேட்டி கட்டியவர் திடீரென கரை வேட்டி கட்டுவதை நிறுத்திவிட்டார்.

பாமக கரை வேட்டி கட்டாமல் இருக்க காரணம் என்ன? என்று பலர் கேட்ட கேள்விகளுக்கு மழுப்பலான பதிலை மட்டும் அளித்துவந்தார். பாமக தலைமையுடன் லேசான உரசல் இருந்தாலும் அதை வெளிப்படையாக கூறாமல், எனக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்த டாக்டர் அய்யாவை மறக்க மாட்டேன் என்று மட்டும் கூறிவந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பாமக பொதுக்குழு கூட்டத்தில் கலையரசு எம்எல்ஏ கலந்துகொள்ளவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x