Last Updated : 15 Mar, 2014 12:00 AM

 

Published : 15 Mar 2014 12:00 AM
Last Updated : 15 Mar 2014 12:00 AM

மறக்கப்பட்டதோ திருநெல்வேலி எழுச்சி தினம்?

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருநெல்வேலி எழுச்சி தினம் பலரால் நினைக்கப்படாமலே வியாழக்கிழமை கடந்து சென்றது. இந்த தினத்தின் முக்கியத்துவம் குறித்து இளைய தலைமுறையினருக்கு உணர்த்தப்படாமல் இருப்பது குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டனர்.

சுதந்திரப் போராட்ட வீரர் விபின் சந்திரபால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 1908-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதியை, `சுயராஜ்ய நாளாக’ சுதந்திரப் போராட்ட வீரர்கள் கொண்டாடினர். திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றங்கரையில் தடையை மீறி இந்த விடுதலை விழா நடந்தது. இதுபோல் தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றுவிட்டு திருநெல்வேலிக்கு வந்த வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பத்மநாப ஐயங்கார் ஆகியோர், 1908-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி கைது செய்யப்பட்டனர்.

நெல்லை கிளர்ச்சி

இதன் எதிரொலியாக திருநெல்வேலியில் ஏற்பட்ட கலவரத்தை அடக்க போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். அடுத்த நாள் (மார்ச் 13) அடித்தட்டு மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இந்த கிளர்ச்சியில் திருநெல்வேலி சந்திப்பில் தற்போதுள்ள ம.தி.தா. இந்துக் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில், அப்போது செயல்பட்ட ம.தி.தா. இந்து கலாசாலை மாணவர்களும் முக்கிய பங்கு வகித்தனர். இந்த கிளர்ச்சியில் பொதுச்சொத்துகள் தீக்கிரையாக்கப்பட்டன.

நிலமையை கட்டுக்குள் கொண்டுவர ஆங்கிலேய ஆட்சியாளர்கள் அடக்குமுறையைக் கையாண்டனர். திருநெல்வேலியில் சாதி, சமய வேறுபாடுகள் இல்லாமல் மக்கள் கிளர்ந்தெழுந்த இச்சம்பவம் வரலாற்றில் `திருநெல்வேலி எழுச்சி நாளாக’ குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திரப் போராட்டத்தின் ஓர் அங்கமாக நடைபெற்ற இந்த கிளர்ச்சியை குறித்து, இளைய தலைமுறைக்கு சொல்ல வேண்டிய பொறுப்பும், கடமையும் ஒவ்வொரு ஆண்டிலும் மறக்கப்பட்டு வருகிறது. இந்த எழுச்சியின் 106-வது ஆண்டு நினைவு தினம் வியாழக்கிழமை பெரிதாக நினைக்கப்படாமல் கடந்து சென்றது.

பாடமாக்க வேண்டும்

ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தின் முக்கியத்துவம் குறித்து இளைஞர்களுக்கு தெரிவிக்காமல், தங்கள் கடமையிலிருந்து பல்வேறு சமூக அமைப்புகளும், இலக்கிய அமைப்புகளும் தவறி வருவது சுட்டிக்காட்டப்பட வேண்டும். இது குறித்து திருநெல்வேலி எழுச்சி நினைவேந்தல் குழுவின் தலைவர் ஆர்.ஏ. சுந்தரலிங்கம் கூறியதாவது:

இந்த தினத்தின் முக்கியத்துவத்தை வளரும் தலைமுறையினருக்கு உணர்த்தும் வகையில் வரும் ஆண்டிலிருந்து நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளோம். சாதி, சமய வேறுபாடுகளைக் களைந்து அனைவரும் ஒன்றுதிரண்டு போராட்டம் நடத்தியதை, திருநெல்வேலி எழுச்சி தினம் நமக்கு உணர்த்துகிறது. இந்த தினத்தின் முக்கியத்துவத்தை சமகாலத்தில் உள்ளவர்களுக்கு உணர்த்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இத் தினத்தை அரசு கொண்டாட வேண்டும் என்றார் அவர்.

தேசபக்தியை வளர்த்தெடுக்கும் முயற்சியாக நமது முன்னோர்களின் எழுச்சி உணர்வையும், தியாக வரலாற்றையும் நினைவூட்ட அரசும், தன்னார்வ அமைப்புகளும் முன்வர வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x