Published : 08 Jun 2016 02:46 PM
Last Updated : 08 Jun 2016 02:46 PM

உள்ளாட்சித் தேர்தலில் அமலுக்கு வருகிறது பெண்களுக்கான 50% இடஒதுக்கீடு

வருகிற அக்டோபரில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் முதன்முறையாக பெண்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட உள்ளது. இதற்காக பெண்களுக்கான வார்டுகளை பிரிக்கும் பணியில், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் முதன்முறையாக உள்ளாட்சித் தேர்தலில் 50 சதவீத இடங்களுக்கு பெண்கள் போட்டியிட உள்ளனர். இதற்காக சட்டப்பேரவை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் அடிப்படையில் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகள், ஒன்றியக் கவுன்சில், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகியவற்றின் அடிப்படையில், வாக்காளர் பட்டியல் பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதையடுத்து, வார்டு வாரியாக பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ள வார்டுகள் பிரிக்கப்பட்டு, இவை பெண்களுக்கு ஒதுக்கப்பட உள்ளன. இதன் மூலம் ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளில் 50 சதவீத உறுப்பினர்கள் பெண்களாக இருப்பர்.

இதற்கான பணிகளை ஜூன் 25-ம் தேதிக்குள் முடிக்க, அனைத்து ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நகராட்சி, மாநகராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சுழற்சிமுறையில் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது 2016-ம் ஆண்டு அக்டோபரில் நடைபெறவுள்ள தேர்தலில் சுழற்சிமுறை அமல்படுத்தப்படுகிறது. இதனால் பொது, தாழ்த்தப்பட்டோருக்கானவை, பெண்கள் (எஸ்சி), பெண்கள் (பொது) உள்ளிட்ட ஊராட்சித்தலைவர், நகராட்சித் தலைவர், கவுன்சிலர்களுக்கான இடங்கள் மாறவுள்ளன. கடந்தமுறை போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள், இந்தமுறை போட்டியிட முடியாத நிலையும் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

உள்ளாட்சித் தேர்தலில் இந்த முறை பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு மட்டுமின்றி, சுழற்சி முறையில் இடஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இதனால் பேரவைத் தேர்தல் வாக்காளர் பட்டியலைக் கொண்டு இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த மாத இறுதிக்குள் பணிகள் முடிந்துவிடும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x