Last Updated : 26 Oct, 2014 02:04 PM

 

Published : 26 Oct 2014 02:04 PM
Last Updated : 26 Oct 2014 02:04 PM

6 ஆண்டில் டெங்குவால் 60 லட்சம் பேர் பாதிப்பு - ஆண்டுக்கு ரூ.6,753 கோடி மருத்துவ செலவு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் 6 ஆண்டுகளில் 60 லட்சம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசின் பதிவில் உள்ள புள்ளி விவரங்களைவிட பல மடங்கு பாதிப்பு அதிகமாக இருக்கிறது. ஆண்டு தோறும் டெங்கு காய்ச்சலுக்கு ரூ.6,753 கோடி செலவிடப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் நோய் பரப்பும் பூச்சிகள் ஆராய்ச்சி மையம் (சிஆர்எம்இ), சர்வதேச மருத்துவ நோயியல் நெட்வொர்க் (ஐஎன்சிஎல்இஎன்) மற்றும் அமெரிக்கா பல்கலைக் கழகம் இணைந்து இந்தியாவில் கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் வைரஸ் குறித்த ஆராய்ச்சியை நடத்தியது. குறிப்பாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்த ஆராய்ச்சியையும் நடத்தியது. இந்தியாவில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு மற்றும் இறப்பு குறித்த அரசு பதிவுகளில் உள்ள புள்ளி விவரத்தைவிட, அதிக அளவில் டெங்கு பாதிப்பு இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

டெங்குவால் 60 லட்சம் பேர் பாதிப்பு

இந்தியாவில் 2012-ம் ஆண்டு டெங்குவால் 20,472 பேர் பாதிக்கப்பட்டு, 132 பேர் உயிரிழந்துள்ளனர். இதே போல 2013-ம் ஆண்டில் 75,454 பேர் பாதிக்கப்பட்டு, 127 பேர் உயிரிழந்து இருப்பதாக அரசின் பதிவில் பதிவாகியுள்ள புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஆராய்ச்சிபடி 2006 முதல் 2012-ம் ஆண்டு வரையுள்ள காலக்கட்டத்தில் இந்தியாவில் டெங்கு காய்ச்சலால் சுமார் 60 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். அதே போல டெங்குவால் இறப்பு விகிதமும் அரசின் புள்ளி விவரத்தைவிட அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சி முடிவில் சொல்லப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு 6,753 கோடி செலவு

இந்த ஆராய்ச்சி முடிவுகள் தொடர்பாக, இந்திய பொது சுகாதார சங்கத்தின் தமிழக தலைவர் டாக்டர் இளங்கோ கூறியதாவது:

இந்தியாவில் 2006 முதல் 2012-ம் ஆண்டு வரை டெங்கு காய்ச்சலுக்கு 57,78,408 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலால் நாட்டில் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் டெங்கு காய்ச்சலுக்கு மருத்துவ செலவாக ரூ.6,753 கோடி செலவு செய்யப்படுகிறது. பணம் கொடுத்து தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றது, டெங்கு காய்ச்சலுக்கு அரசு செலவிட்டது மற்றும் மருந்து, மாத்திரைகள் வாங்கியது என அனைத்து செலவுகள் மொத்தம் ரூ.6,753 கோடியாகும். இந்தியா ஆண்டு தோறும் விண்வெளி ஆராய்ச்சிக்கு செலவிடும் தொகை அளவுக்கு, டெங்கு காய்ச்சலுக்கு செலவாகிறது.

80% நோயாளிகள் பதிவு இல்லை

தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் 80 சதவீதம் டெங்கு காய்ச்சல் நோயாளிகளின் முழு விவரங்கள் அரசின் பதிவு களுக்கு வருவதில்லை. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் 20 சதவீத டெங்கு நோயாளிகளின் புள்ளி விவரங்கள் மட்டுமே அரசிடம் இருக்கிறது. டெங்கு காய்ச்சலை கண்டுபிடிக்க மற்றும் ஆய்வு செய்வதற்கான மருத்துவ உபகரணங்கள் குறைவாக இருக்கிறது. ஒவ்வொரு இடத்திலும் டெங்கு காய்ச்சலை கண்டுபிடிக்கும் முறை மாறுபடுகிறது. இதனால் டெங்கு காய்ச்சல் பாதித்த நோயாளிகளை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்தியாவில் 99.7 சதவீதம் டெங்கு நோயாளிகளின் விவரங்கள் அரசின் பதிவுகளுக்கு வருவதில்லை. 0.3 சதவீதம் டெங்கு நோயாளிகளின் விவரங்கள் மட்டுமே அரசின் பதிவுகளில் பதிவு செய்யப்படுகிறது.

நோய் கண்காணிப்பு திட்டம்

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் கொசு மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்த கொள்கை முடிவை எடுக்க வேண்டும். உலக வங்கியின் நிதியுதவியுடன் தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தை வலுப்படுத்த வேண்டும். டெங்குவை அறிவிக்கப்பட்ட நோய்களின் பட்டியலில் சேர்த்து, சிகிச்சைக்கு வரும் டெங்கு காய்ச்சல் நோயாளிகள் குறித்த விவரத்தை உடனுக்குடன் அரசிடம் தெரிவிக்கும்படி தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். மாநில அரசும் பொது சுகாதாரத்துறையை வலுப்படுத்த வேண்டும். டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்த விவரத்தை உடனுக்குடன் பதிவு செய்ய வேண்டும். அந்த புள்ளி விவரத்தின்படியே, டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் அரசு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x