Published : 16 Jun 2016 02:53 PM
Last Updated : 16 Jun 2016 02:53 PM

புதிய திட்டங்கள் இல்லாத ஆளுநர் உரை: வைகோ ஏமாற்றம்

தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் ஆற்றிய உரையில் குறிப்பிட்டுக் கூறும்படியான புதிய திட்டங்கள் எதுவும் இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக சட்டமன்றத்தின் 15-ஆவது கூட்டத் தொடரைத் தொடங்கி வைத்து ஆளுநர் ஆற்றிய உரை இப்பொழுதுதான் புதிதாக அதிமுக ஆட்சி பொறுப்பேற்றுக் கொண்டதைப் போல எதிர்காலத் திட்டங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவை அனைத்துமே கடந்த ஐந்தாண்டு கால ஜெயலலிதா ஆட்சியில் அறிவிக்கப்பட்டவைதான்.

சிறு, குறு விவசாயிகள் என்ற பாரபட்சம் இல்லாமல் அனைத்து விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்; தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடனைத் தமிழக அரசே செலுத்த வேண்டும் என்று விவசாயிகள் வைத்த கோரிக்கைகள் பற்றி ஆளுநர் உரையில் இடம் பெறாதது ஏமாற்றம் தருகிறது.

டாஸ்மாக் மதுக் கடைகளை மூட கால நிர்ணயத்தை அறிவித்திருந்தால் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று முதல்வர் கொடுத்த வாக்குறுதி நிறைவேறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கும்.

தாதுமணல் விற்பனையை அரசே ஏற்று நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்; புதிய கிரானைட் கொள்கை உருவாக்கப்பட்டு அதன் விற்பனை முறைப்படுத்தப்படும் என்ற அறிவிப்புகள் வரவேற்கக் கூடியதுதான். ஆனால், தாதுமணல் கொள்ளை குறித்து விசாரணை நடத்திய ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன் திப் சிங் பேடி அரசுக்கு அளித்த அறிக்கையை ஜெயலலிதா அரசு இதுவரை வெளியிடவில்லை.

நாள்தோறும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வரும் நிலையில் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்று ஆளுநர் உரை மூலம் ஜெயலலிதா அரசு தனக்குத் தானே பாராட்டிக் கொண்டிருக்கிறது.

கல்வி வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 விழுக்காடு ஒதுக்கீடு செய்வதற்கும், பள்ளி கல்லூரி கல்விக் கட்டணத்தை முறைப்படுத்தவும் ஆளுநர் உரையில் தெளிவான அறிவிப்புகள் இல்லை.

கடந்த ஆண்டு நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழகத்திற்கு வந்த முதலீடுகள் பற்றி குறிப்பிடப்படவில்லை.

கடந்த ஐந்தாண்டுகளில் பல்லாயிரக்கணக்கான சிறு குறு தொழில்கள் நலிவடைந்துள்ள நிலையில் புதிதாக அவற்றைத் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பு வெறும் ஏட்டுச் சுரைக்காயாகத்தான் இருக்கும்.

தமிழகத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவோம் என்று கூறுவது ஏற்கக் கூடியதாக இருப்பினும் மத்திய அரசால் தமிழ்நாடு நதிநீர்ப் பிரச்சினையில், வரி வருவாய்ப் பங்கீடு, மீனவர் பிரச்சினை போன்றவற்றில் வஞ்சிக்கப்பட்டு வருவதை ஜெயலலிதா அரசு எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்று தெரியவில்லை.

விலைவாசி உயர்வு, சேவை வரி 15 சதவீதமாக அதிகரிப்பு, யூக வணிகம், இணையதள வர்த்தகம் போன்றவற்றுக்குத் தடை ஆகியவை குறித்து அதிமுக அரசு நிலைப்பாடு ஆளுநர் உரையில் கூறப்படவில்லை.

மொத்தத்தில் தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் ஆற்றிய உரையில் குறிப்பிட்டுக் கூறும்படியான புதிய திட்டங்கள் எதுவும் இல்லை'' என்று வைகோ கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x