Published : 26 Jul 2016 10:42 AM
Last Updated : 26 Jul 2016 10:42 AM

60 வயதில் பிஎச்டி படித்தவர் விபத்தில் மரணம் மனைவி, மகளுக்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு

ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராமானுஜம். இவரது மனைவி சரஸ்வதி. ஒரு மகள் உள்ளார். ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றதும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். பின்னர் தனியாக செக்யூரிட்டி நிறுவனம் நடத்தி வந்தார். எம்.ஏ, எம்.பில் படித்திருந்த ராமானுஜம், பி.எச்டி படிக்க பதிவு செய்திருந்தார். அவரது பி.எச்டி படிப்பு முடியும் தறுவாயில் இருந்தது.

இந்நிலையில் 2009ல் ராஜபாளையத்தில் இருந்து ஸ்ரீவில்லிப்புதூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றபோது பஸ் மோதி இறந்தார். மனைவி, மகளுக்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் 2011ல் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி காப்பீட்டு நிறுவனம் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. அதில் ராமானுஜம் மரணத்தால் மனைவி, மகளுக்கு ஏற்பட்ட நஷ்டங்களுக்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கியது அதிகம். இழப்பீட்டு தொகையை குறைக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இதனை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி நூட்டி ராமமோகனராவ் அடங்கிய அமர்வு விசாரித்து பிறப்பித்த உத்தரவு:

விபத்தில் உயிரிழந்தவரின் படிப்பு, வேலையை பார்க்கும் போது அவர் கஷ்டப்பட்டு முன்னேறியது தெரிகிறது. 60 வயதுக்கு மேல் பி.எச்டி படிப்பது சிரமமானது. இருப்பினும் அந்த வயதில் படிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் படித்துள்ளார். விபத்து காரணமாக அவரால் பிஎச்டி பட்டம் பெற முடியாமல் போயுள்ளது.

இப்படிப்பட்டவர்களின் அன்பு அரவணைப்பை இழந்தவரின் மனைவிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு அதிகம் இல்லை. அனுபவம் வாய்ந்த தந்தையின் துணையை இழந்து தவிக்கும் மகளுக்கும் ரூ.3 லட்சம் வழங்குவது தவறில்லை. தந்தை இருந்திருந்தால் மகளுக்கு பேருதவியாக இருந்திருக்கும். மகளின் வாழ்வை மேம்படுத்த பல வழிகளில் உதவியிருப்பார். உதவி இல்லாமல் போன மகளுக்கு இழப்பீடு வழங்குவதில் தவறில்லை. இதனால் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x