Published : 28 Sep 2016 08:25 AM
Last Updated : 28 Sep 2016 08:25 AM

ஆணவக் கொலைகளை தடுக்க விரைவில் புதிய சட்டம்: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் தகவல்

ஆணவக் கொலைகளை தடுக்க மத்திய அரசு விரைவில் புதிய சட்டம் இயற்றவுள்ளது. அதற்கான நடவடிக்கை சட்ட அமைச்ச கத்தில் நிலுவையில் இருந்து வருகிறது என மத்திய அரசு வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகள், தங்களது அரசியல் சுய நலத்துக்காக ஆணவக் கொலை களைத் தடுக்க எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டி இந்திய மக்கள் மன்றத்தின் தலைவரான வாராகி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய் திருந்தார்.

அதில், ‘கடந்த 2003-ம் ஆண்டு கலப்பு திருமணம் செய்த விருத்தாசலம் முருகேசன்- கண்ணகி, தூத்துக்குடி வினோத் குமார், சேலம் இளவரசன், திருச்செங்கோடு கோகுல்ராஜ், மன்னார்குடி அமிர்தவள்ளி- பழனியப்பன், உடுமலைப்பேட்டை சங்கர் என ஏராளமானோர் அடுத் தடுத்து கவுரவக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளில் கலப்பு திருமணம் செய்த 81 பேர் இறந் துள்ளனர். எனவே, தமிழகத்தில் நடைபெறும் ஆணவக் கொலை களை தடுக்க புதிதாக சட்டம் இயற்றவும், தாழ்த்தப்பட்ட, பழங் குடியின மக்களின் பாதுகாப்புக்கு தற்காப்பு ஆயுதங்கள் வழங்கவும் உத்தரவிட வேண்டும்’ என அதில் கோரியிருந்தார். இந்த வழக்கில் தமிழக முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரும் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோரைக் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர். ‘‘ஆணவக் கொலை களை தடுக்க விரைவில் புதிய சட்டம் கொண்டு வரப்படும். அதற்கான பரிந்துரைகள் மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகத்தில் நிலு வையில் உள்ளது’’ என தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘இதற்காக பிரத்யேக சட்டம் இயற்றப்படும் வரை மாநில அரசு காத்திருக்காமல், ஆணவக் கொலைகளை தடுப்பது மற்றும் கலப்புத் திருமண தம்பதிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக காவல்துறைக்கு போதுமான விழிப்புணர்வு பயிற்சி அளிக்க வேண்டும்’’ என்றார்.

அதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது: சமுதாயத்தில் புரை யோடிப் போய் கிடக்கும் ஆணவக் கொலைகளை தடுப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. நவீன யுகத்தில் பெற்றோரின் மனநிலையும், உறவினர்களின் மனநிலையும் மாற வேண்டும். ஆவணக் கொலை களைத் தடுக்கும் விதமாக புதிய சட்டம் விரைவில் இயற்றப்பட உள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆணவக் கொலைகளை தடுப்பதில் போலீஸாருக்கு முக்கிய பங்கு உள்ளது. அவர்கள் தான் சமுதாய பொறுப்பை உணர்ந்து மதிநுட்பமாக செயல்பட வேண்டும். அதற்கு அவர்களுக்கு போதிய விழிப்புணர்வு பயிற்சிகள் தேவை.

நீதித்துறை பயிற்சிமையம் ஆணவக் கொலைகளை தடுக்கும் விதமாக போலீஸாரின் மன நிலையை அறிந்து அதற்கேற்ப பயிற்சி அளிக்க வேண்டும். அது போல சமூகத்தின் சிந்தனையும் மாற வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசா ரணையை டிசம்பர் 15-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x