Published : 13 Mar 2014 01:43 PM
Last Updated : 13 Mar 2014 01:43 PM

சிவகங்கையில் ப.சிதம்பரத்துக்கு பதிலாக புஷ்பராஜ்?- காங்கிரஸ் நிர்வாகிகளிடம் திடீர் ஆலோசனை

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனக்குப் பதிலாக, புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் தலைவர் புஷ்பராஜை நிறுத்த திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1996-லிருந்து சிவகங்கையில் திமுக தயவால் வெற்றிபெற்ற நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு, இந்தமுறை வலுவான கூட்டணி அமையாது என்பது முன்கூட்டியே தெரிந்துபோனது. அதனால்தான் இம்முறை, தனக்குப் பதிலாக தனது மகன் கார்த்தி சிதம்பரத்தை சிவகங்கையில் நிறுத்தும் திட்டத்தில் இருந்தார். ஆனால், தேமுதிக-வும் காங்கிரஸுக்கு டாடா காட்டிவிட்ட நிலையில், கார்த்தியும் பின்வாங்கிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

கார்த்தி இல்லாதபட்சத்தில் தனது உதவியாளரும் காரைக்குடி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வுமான சுந்தரத்தை நிறுத்தலாம் என்று சிதம்பரம் ஆலோசனை நடத்தி இருக்கிறார். ஆனால், திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள சுப.துரைராஜும் சுந்தரமும் வல்லம்பர் சாதியினர்; உறவுக்காரர்கள்.

கடந்த தேர்தல்களில் தனக்காக களப்பணி செய்த துரைராஜுக்கு சிக்கலை உண்டாக்கக் கூடாது என்பதாலும் அவரிடம் சுந்தரம் தாக்குப்பிடிக்க முடியாது என்பதாலும், சிதம்பரம் தனது முடிவை மாற்றிக்கொண்ட தாக காங்கிரஸ் வட்டாரத்தில் சொல்கிறார்கள்.

இதனிடையே, சிவகங்கை தொகுதியில் முத்தரையர் வாக்கு வங்கி வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் இடத்தில் இருப்ப தால், அந்த சமூகத்தைச் சேர்ந்த புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் தலைவரான புஷ்பராஜை வேட் பாளராக நிறுத்துவது குறித்து 11-ம் தேதி கட்சியினருடன் ஆலோசனை நடத்தியுள்ளார் சிதம்பரம்.

இதுகுறித்து ’தி இந்துவிடம் பேசிய புஷ்பராஜ், ’’ எனக்கு எந்தத் தகவலும் இல்லை. கட்சியிலும் நான் பணம் கட்டவில்லை. ஆனாலும், தலைவர் சிதம்பரம்தான் எனக்கு எல்லாமே. அவர் நிற்கச் சொன்னால் கட்டாயம் நிற்பேன். 1977 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் கூட்டணியில் ஆலங்குடி தொகுதியில் 11 ஆயிரம் வாக்கு வித்தியாசத்திலும், 1984-ல் திருமயத்தில் 39 ஆயிரம் வாக்கு வித்தியாசத்திலலும் வெற்றிபெற்றேன்.

வாழப்பாடியார் இருந்தபோது திவாரி காங்கிரஸ் வேட்பாளராக புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, 82 ஆயிரம் வாக்கு களை பெற்றேன். சிவகங்கை தொகுதியில் எங்கள் சமூகத்தினர் கணிச மாக இருக்கிறார்கள். எனவே, தலைவர் என்னை வேட்பாளராக நிறுத்தினால் யாருமே எதிர்பாராத திருப்பம் நடக்கும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x