Published : 25 Sep 2015 08:01 PM
Last Updated : 25 Sep 2015 08:01 PM

தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமில்லை: பேரவையில் அமைச்சர் திட்டவட்டம்

ரவுடிகள் அராஜகம், கள்ளச்சாராயம் பெருகுவதுடன் அரசு கஜானாவும் காலியாகும் என்பதால் மதுவிலக்கு சாத்தியமில்லாமல் உள்ளது என்று சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் இன்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறைகள் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது.

அப்போது, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

அதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், "அரசு ஒருபோதும் சாராயத்தை ஊக்குவிக்கவில்லை. மதுவிலக்கு கொள்கையை ஏற்றுக் கொண்டால்கூட அது சாத்தியமில்லை.

மேலும், 100 சதவீதம் ரவுடிகள் அராஜகத்துக்கு வழிவகுப்பதுடன், கள்ளச்சாராயம் பெருகி, அரசின் கஜானாவையும் அது காலி செய்து விடும்.

நாடு முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால், முதன்முதலில் தமிழகத்தில் அமல்படுத்தப்படும். மதுவிலக்கு அமல்படுத்தப்படும் காலம் கனிந்து வந்தால், நடைமுறைப்படுத்தப்படும்.

பக்கத்து மாநிலங்களின் ஒத்துழைப்புடன்தான் அமல்படுத்த முடியும். இதற்கு அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்" என்றார் அமைச்சர்.

இதனிடையே, மதுவிலக்கை அமல்படுத்துவது குறித்து பாமக எம்எல்ஏ கணேஷ்குமார் பேசியபோது குறுக்கிட்ட அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், "மதுவிலக்கை பற்றி பேசும் உங்கள் கட்சி தலைவர், மது அருந்துபவர்கள் யாரும் கட்சியில் இருக்க கூடாது என அறிவிப்பாரா?

உங்கள் கட்சி மாநாடு நடக்கும் இடங்களில் மதுபான விற்பனை அதிகரிக்கிறது. கடந்த ஜூலை 12-ம் தேதி கோவையில் மாநாடு நடந்த அன்று மட்டும், முந்தைய மற்றும் பிந்தைய நாட்களை காட்டிலும் இருமடங்காக ரூ.4.71 கோடிக்கு மதுபானம் விற்கப்பட்டுள்ளது. எனவே, முதலில் நீங்கள் திருந்துங்கள்" என்றார் அமைச்சர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x