Published : 06 Apr 2017 05:23 PM
Last Updated : 06 Apr 2017 05:23 PM

மதுவிலக்குக் கொள்கையில் திமுகவும் பாமகவும் ஒன்றிணைகிறதா?

மதுவிலக்குக் கொள்கையில் திமுகவும், பாமகவும் ஒன்றிணைகிறதா? என்ற கேள்வி வலுவாக எழுந்துள்ளது.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று பாமக வழக்கறிஞர் பாலு சந்தித்துப் பேசினார். அப்போது ராமதாஸ் கொடுத்து அனுப்பியிருந்த கடிதத்தை மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். மேலும், மதுக்கடைகளை மீண்டும் திறக்க எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் எனவும் பாலு ஸ்டாலினிடம் கேட்டுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாலு, ''பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸின் அறிவுறுத்தலின்படி, மு.க.ஸ்டாலினை சந்தித்தேன். உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்திருக்கும் வேளையில் 3,321 கடைகளையும் மீண்டும் தமிழகத்தில் திறக்கக் கூடாது என்பதை ஸ்டாலின் வலியுறுத்த வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொண்டோம்.

குறிப்பாக மாநில நெடுஞ்சாலையை மாவட்ட சாலையாக மாற்றுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை கடிதமாக அளித்துள்ளோம்'' என்றார்.

திமுகவையும், ஸ்டாலினையும் பாமக தலைவர்கள் தொடர்ந்து விமர்சித்து வந்தனர். முன்னதாக, ஸ்டாலினை நோக்கி அன்புமணி அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டார். அதற்கு ஸ்டாலினும் பதிலளித்து கடிதங்கள் எழுதினார். தொடர் கடிதங்களால் காத்திரமாக ஒருவருக்கொருவர் விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தனர்.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர்களாக இருந்த திமுகவை சேர்ந்தவர்கள் பீட்டாவை தடை செய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று ஸ்டாலினிடம் அன்புமணி கேள்வி எழுப்பினார்.

கச்சத்தீவை மீட்பதாக இரு திராவிடக் கட்சிகளும் நாடகங்கள் நடத்துகின்றன என்று ராமதாஸ் குற்றம் சாட்டினார்.

பலமுறை மீண்டும், மீண்டும் மதுவைத் திணித்து சீரழித்ததற்காக தமிழ்நாட்டு மக்களிடம் ஸ்டாலினும், அதிமுகவும் பாவமன்னிப்பு கேட்க வேண்டும் அன்புமணி ராமதாஸ் கூறினார். மேலும், மதுவிலக்குக்கு உங்களை தகுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என்று ஸ்டாலினுக்கு அன்புமணி கடிதம் எழுதினார்.

இந்நிலையில், பாமகவின் பிரதிநிதி, வழக்கறிஞர் பாலு ஸ்டாலினை சந்தித்தார்.

இது தொடர்பாக ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''திமுகவைப் பொறுத்தமட்டில் மதுவிலக்கு கொள்கைக்கு என்றைக்கும் ஆதரவாக இருக்கும் கட்சி என்பதும், தலைவர் கருணாநிதி ஆட்சியிலிருந்த காலத்தில்தான் மதுக்கடைகளை படிப்படியாக மூடும் முடிவினை முதன் முதலாகஎடுத்தார் என்பதும் தமிழக மக்கள் அறிந்ததே.

குறிப்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து 22.12.2008 அன்று வைத்த கோரிக்கையை ஏற்று 1300 மதுக்கூடங்களையும், 128 மதுக்கடைகளையும் மூடியதுதான் திமுக ஆட்சி'' என்பதை நினைவுகூர்ந்துள்ளார்.

இதனால் மதுவிலக்குக் கொள்கையில் திமுகவும், பாமகவும் ஒன்றிணைகிறதா? என்ற கேள்வி வலுவாக எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x