Published : 25 Dec 2013 08:26 PM
Last Updated : 25 Dec 2013 08:26 PM

ஈரோடு: சத்தியமங்கலம் வனப்பகுதியில் வனவிலங்குகள் எண்ணிக்கை அதிகரிப்பு

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் நடைபெற்ற கணக்கெடுப்பில் அனைத்து வகையான விலங்குகளின் எண்ணிகை சராசரியாக உயர்ந்துள்ளது என புலிகள் காப்பக இணை இயக்குநர் கே.ராஜ்குமார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சத்தியமங்கலம், டி.என்.பாளையம், பவானிசாகர், தலமலை வனச்சரகங்களிலும், ஆசனூர் வனக்கோட்டத்திற்குட்பட்ட ஆசனூர், கேர்மாளம், தாளவாடி வனச்சரகங்களில் வனவிலங்குகள் குறித்த கணக்கெடுப்புப் பணி டிச.17 முதல் டிச 22 வரை நடைபெற்றது. இந்த கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்ட வனஉயிரினங்கள் விபரங்கள் குறித்து சத்தி புலிகள் காப்பக இணை இயக்குநர் கே.ராஜ்குமார் கூறியதாவது:

சிக்கரசம்பாளையம், புளியம்கோம்பை, பண்ணாரி, சீரங்கராயன்கரடு, கேர்மாளம், தலமலை, எக்கத்தூர், ஜீரஹள்ளி, நெய்தாளபுரம், தட்டவாடி, ராமர்அணை உள்ளிட்ட 48 இடங்களில் நடைபெற்ற கணக்கெடுப்பில் 150 பேர் கலந்து கொண்டனர். வன அலுவலர்களுடன் இணைந்து பணியாற்றிய தன்னார்வ தொண்டர்கள் மற்றும் வனக்கல்லூரி மாணவர்கள் வனத்தை முழுமையாக புரிந்து கொண்டு அதன் சூழலுக்கேற்ப கணக்கெடுப்பை மேற்கொண்டு பதிவு செய்தனர்.

நுண்ணிய உயிர்வாழ்வன மற்றும் பல்வேறு வகையான மரம், செடி, கொடி தாவரங்கள் வளர்ச்சி மற்றும் தாவர உண்ணிகள் பற்றியும் பதிவு செய்யபட்டுள்ளதால் கணக்கெடுப்பு பணி திருப்தி கரமாக உள்ளது.ஆசனூர், தலமலை, கேர்மாளம், பண்ணாரி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் புலி, சிறுத்தை, கரடி,கழுதைப்புலி, செந்நாய் போன்ற விலங்குகளின் எச்சம், கால்தடம் அதிகளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சத்தி புலிகள் காப்பகத்தில் இறப்பை விட அதன் பரிமாண வளர்ச்சியை காட்டுகிறது.

சராசரியாக அனைத்து வகை விலங்குகளின் இனப்பெருக்கம் இரு மடங்காக உயர்ந்து, இறப்பு விகிதம் குறைந்தும் உள்ளது. குறிப்பாக, யானைகள், புள்ளிமான்கள், காட்டெருமைகள் கணிசமாக அதிகரித்துள்ளது. செந்நாய்களிடமிருந்து தனது வேட்டை இரையை காப்பாற்ற மரத்தில் உச்சியில் மான் உடலை வைத்து சிறுத்தை சாப்பிட்டது தெரியவந்துள்ளது.

தட்டவாடி என்ற இடத்தில் கணக்கெடுப்பாளர்கள் யானை துரத்தியதால் அவர்கள் சமயோசிதமாக செயல்பட்டு தப்பியோடினர். சத்தி வனத்தில் மழையளவு கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது. வரும் கோடைகாலத்தை சமாளிப்பது பற்றி ஜனவரி முதல் முதற்கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.

இங்கு சேகரிக்கப்பட்ட அனைத்து விபரங்களை பிரத்தியேகமாக தயாரிக்கபட்ட மென்பொருளில் பதிவுசெய்து தேசிய வன உயிரின ஆராய்சி நிலையத்துக்கு அனுப்பப்படும். அவர்களும் சில இடங்களில் மாதிரி கணக்கெடுப்பு நடத்தி இறுதியாக வனவிலங்குகள் பற்றி புள்ளிவிபரங்களை அரசுக்கு அனுப்பி வைப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x