Published : 26 Jun 2016 11:27 AM
Last Updated : 26 Jun 2016 11:27 AM

இலங்கை போர்க்குற்றம்; மனித உரிமை அவையில் பசுமைத் தாயகம் பங்கேற்பு: ராமதாஸ் அறிக்கை

இலங்கை போர்க்குற்றம் குறித்த மனித உரிமை அவையில் பசுமைத் தாயகம் பங்கேற்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடரில், வரும் 29.6.2016 புதன் கிழமை அன்று இலங்கை போர்க்குற்றங்கள் குறித்த விசாரணை அறிக்கையை ஐநா மனித உரிமைகள் ஆணையர் சயீத் அல் ஹுசைன் வெளியிடுகிறார்.

இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப்போரில் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு காரணமான இலங்கை ஆட்சியாளர்களையும், இராணுவ அதிகாரிகளையும் தண்டிக்க வேண்டும். இதற்காக இலங்கை மீது இனப்படுகொலை மற்றும் போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று என்னால் நிறுவப்பட்ட பசுமைத் தாயகம் அமைப்பு கடந்த 7 ஆண்டுகளாக ஐ.நா. மனித உரிமை பேரவையில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இலங்கை இனப்படுகொலை குறித்து பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பசுமைத் தாயகம் அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த ஐநா மனித உரிமைப் பேரவையின் பத்தாவது கூட்டத்தில் ஈழத்தமிழர் நீதிக்காக பசுமைத் தாயகம் அமைப்பு ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையை சமர்ப்பித்தது. அப்போது முதல் ஐநா மனித உரிமைகள் பேரவையின் எல்லா கூட்டங்களிலும் இலங்கை மீதான அறிக்கையை பசுமைத் தாயகம் சமர்ப்பித்து வருகிறது. 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த மனித உரிமைப் பேரவையின் 24-ஆவதுக் கூட்டத்திலும், 2015 ஆம் ஆண்டு செப்டம்பரில் நடந்த 30-ஆவது கூட்டத்திலும் பா.ம.க. இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பங்கேற்று இலங்கையில் நடந்த இனப்படுகொலைகள் குறித்து பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஐ.நா. அமைப்புக்கு வெளியிலும் பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள், புலம் பெயர்ந்த தமிழர்கள் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறுதல் மற்றும் மனித உரிமைகளை ஊக்கப்படுத்துதல்' எனும் தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 47 உறுப்பு நாடுகள் இந்த தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தன. வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்மானத்தின் மூலம் இலங்கை அரசு தானாகவே முன் வந்து ‘இலங்கையில் நிலைமாற்று நீதி’ (Transitional justice) எனும் பொறிமுறையை (Mechanism)செயல்படுத்துவதாக சர்வதேச சமூகத்திடம் வாக்குறுதி அளித்தது. ஆனால், அவற்றை இலங்கை நிறைவேற்றவில்லை.

‘‘நிலைமாற்று நீதி’’ (Transitional justice) என்பது, மிகக் கொடூரமான மனித உரிமை மீறல்கள் நடந்த நாடுகளில், அந்தக் கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களின் பாதிப்புகளை அங்கீகரித்து, குற்றவாளிகளைத் தண்டித்து, பாதிப்புகளுக்கு பரிகாரம் கண்டு, மீளவும் குற்றம் நடக்காதவாறு சீரமைப்புகளை செய்து அமைதிக்கு திரும்பும் வழிமுறை ஆகும். இந்த நடைமுறையில் நான்கு முக்கிய அங்கங்கள் உள்ளன. 1. உண்மையை வெளிக்கொணர்தல் (Truth Process), 2. குற்றவாளிகளைத் தண்டித்தல் (Justice Process), 3. இழப்புகளுக்கு பரிகாரம் தேடுதல் (Reparation Process), 4. குற்றம் நடந்ததற்கான காரணங்களைக் கண்டுபிடித்து அமைப்புகளை மாற்றுதல் (Non-Recurrence) - ஆகியவையே அந்த 4 முக்கிய அங்கங்களாகும். நிலைமாற்று நீதி முறையில் பாதிக்கப்பட்ட மக்களே முக்கியமான அங்கமாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நிபந்தனைகளை கடந்த ஆண்டு இலங்கை அரசும் ஒப்புக்கொண்டிருக்கிறது. குறிப்பாக, நடந்த பன்னாட்டு குற்றங்களுக்கு வெளிநாட்டு நீதிபதிகள், விசாரணையாளர்கள், வழக்குரைஞர்கள் அடங்கிய நீதிமன்றம் மற்றும் விசாரணை அமைப்பை அமைக்க இலங்கை அரசு ஒப்புக்கொண்டுள்ளது. மேலும், சாட்சிகளைப் பாதுகாக்கும் சட்டத்தை கொண்டுவருதல், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குதல், சிவில் பணிகளில் இருந்து இராணுவத்தை விலக்குதல், வடக்கு கிழக்கில் இராணுவத்தை குறைத்தல், தமிழர்களின் நிலத்தை திருப்பியளித்தல், தொடரும் மனித உரிமை மீறல்களைத் தடுத்தல், காணாமல் போனோர் பிரச்சினைக்கு தீர்வு காணுதல் என பல்வேறு 'நம்பிக்கை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை' செயல்படுத்துவதாக கூறியிருந்தது இலங்கை அரசு. ஆனால், தற்போது இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இலங்கை ஏமாற்றுகின்றது. இலங்கை அரசின் இந்த அணுகுமுறை குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையம் என்ன நினைக்கிறது, அடுத்தடுத்த கட்டங்களில் மனித உரிமை ஆணையம் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது என்பது குறித்து விவரங்களை ஆணையத்தின் தலைவர் சயீத் அல் ஹுசைன் தமது உரையில் வெளியிடுவார் என்று தெரிகிறது.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக என்னால் நிறுவப்பட்ட பசுமைத் தாயகம் அமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். பசுமைத் தாயகம் பொதுச்செயலாளர் இர. அருள், சோழன் க. குமார், த. சூரியபிரகாஷ் ஆகியோர் இதற்காக இன்று சென்னையிலிருந்து ஜெனீவா செல்கின்றனர்.

போர்க்குற்ற விசாரணையில் இலங்கை அரசின் ஏமாற்று தந்திரங்களை ஐநா மனித உரிமைப் பேரவையில் பசுமைத் தாயகம் பிரதிநிதிகள் எடுத்துரைப்பார்கள். இன அழிப்பைத் தொடரும் இலங்கை அரசின் சதிக்கு ஐ.நா. அவை உடன்படக் கூடாது என்றும், கடந்த 2015 தீர்மானம் முழு அளவில் நிறைவேற்றப்படுவதை ஐநா அவையும் உலகநாடுகளும் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என்றும் பசுமைத் தாயகம் அமைப்பின் பிரதிநிதிகள் ஐநா மனித உரிமை அவையில் வலியுறுத்துவார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x