Published : 26 Oct 2014 01:04 PM
Last Updated : 26 Oct 2014 01:04 PM

பால் விலை நிர்ணயிக்க ஒழுங்குமுறை ஆணையம்: நுகர்வோர் அமைப்புகள் கோரிக்கை

மின்சாரம், தொலைத் தொடர்பு துறைகளில் கட்டணம் நிர்ணயிக்க ஒழுங்குமுறை ஆணையம் இருப்பதுபோல, பால் விலையை நிர்ணயிக்கவும் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும் என்று நுகர்வோர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. மேலும் தீர்ப்பாயம், குறைதீர் மையம் போன்றவற்றையும் அமைக்க வேண்டும் என கோருகின்றனர்.

மக்களின் இன்றியமையாத தேவைகளில் பால் முக்கிய இடம் பிடித்துள்ளது. ஆனால் பாலின் விற்பனை விலை, விநியோகம், தர சோதனை போன்றவற்றில் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுகின்றன. தரத்தைப் பொறுத்தவரை தனியார் நிறுவனங்களைவிட, அரசு நிறுவனமான ஆவின் மீது மக்கள் அதிக அளவு நம்பிக்கை கொண்டுள்ளனர். அந்த நம்பிக்கையை குலைக்கும் வகையில், ஆவின் நிறுவனத்தில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கலப்பட முறைகேடுகள் பொதுமக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்குள் வரலாறு காணாத அளவுக்கு ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தியிருப்பது மக்கள் மீது பெரும் சுமையை ஏற்றியுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மைய தலைவர் டி.சடகோபன் கூறியதாவது:

ஆவினில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நடுத்தர குடும்பம் ஒன்றுக்கு மாதம் ரூ.1,000 வரை கூடுதல் செலவு ஏற்படும். அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பட்டியலில் பால் உள்ளதால், அதன் விலையை பொதுமக்கள் கருத்தை கேட்காமல் உயர்த்தக் கூடாது.

தேர்தல் காரணமாக, அரசியல் கட்சிகள் பல ஆண்டுகளாக விலை உயர்த்தாமல் இருந்துவிட்டு, திடீரென்று மொத்தமாக உயர்த்துவதால் பொதுமக்கள் மீது அதிக சுமை ஏற்றப்படுகிறது. எனவே, இந்த நிலையைப் போக்க மின்சாரம், தொலைபேசி கட்டண நிர்ணய முறைகளைப் போல், ஆவின் நிறுவனத்திலும் ஒழுங்குமுறை ஆணையம் ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு அமைத்து குறைந்தபட்சம் பொதுமக்கள் கருத்துகளையாவது கேட்க வேண்டும். குறைதீர் மையங்கள் மூலம் மக்களின் குறைகளைக் கேட்டு, ஆவின் நிர்வாகத்தை சீர் செய்ய வேண்டும்.

இவ்வாறு சடகோபன் கூறினார்.

ரேஷன் கடைகளில் உணவுப் பொருள் விநியோகம், சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பாகவும் தொலைபேசி மற்றும் மின் துறை போன்றவற்றிலும் மாதந்தோறும் மக்கள் குறை கேட்கும் கூட்டம் நடத்துகின்றனர். குறை தீர்ப்பாயம், குறை தீர்ப்பு மையம், ஒழுங்குமுறை ஆணையம் ஆகியனவும் செயல்படுகின்றன. ஆனால், ஆவினில் இதுபோன்று எந்தவித நுகர்வோர் நலன் சார்ந்த அமைப்புகளும் இல்லை. தலைமை அலுவலகத்தில் ஒரே ஒரு குறை தீர் தொலைபேசி எண் மட்டும் செயல்படுகிறது. அதனால்தான் ஆவினில் முறைகேடுகள், தர உறுதி இல்லாமை போன்றவை அதிகரிப்பதாக புகார்கள் உள்ளன.

இதுகுறித்து நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு மைய மாநிலத் தலைவர் முத்தையா முரளிதரன் கூறும்போது, ‘‘தனியார் நிறுவனங்கள் வணிக நோக்கத்தில் செயல்பட்டாலும், அரசு நிறுவனமான ஆவின், வணிக ரீதியாக செயல்படு வதைவிட சேவை துறையாகவும், வெளிப்படைத் தன்மையான துறை யாகவும் செயல்பட வேண்டும். இதற்காக, ஒழுங்குமுறை ஆணை யம் ஏற்படுத்தி, ஆவின் மற்றும் தனியார் பால் நிறுவன செயல் பாடுகளையும் விலை உயர்வையும் கட்டுப்படுத்த வேண்டும்’’ என்றார்.

தேதி இல்லாத பாக்கெட்

ஆவின் பால் பாக்கெட்களில் அவ்வப்போது தயாரிப்பு தேதி இல்லாமல் விநியோகம் செய்யப்படுவதுண்டு. கடந்த ஒரு வாரமாக பல இடங்களில் தேதி இல்லாத பால் பாக்கெட் விநியோகம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து சமூக ஆர்வலர் டி.சடகோபன் கூறும்போது, ‘‘கடந்த சில நாட்களாக ஒருசில பகுதிகளில் தேதி இல்லாத பால் பாக்கெட் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. தனியார் நிறுவனங்கள் கணினி அச்சில் தேதியை அச்சடித்து பால் பாக்கெட்களை விநியோகிக்கின்றனர். ஆனால், ஆவினில் இன்னும் ரப்பர் ஸ்டாம்ப் முறைதான் உள்ளது. இதனால், போலி பாக்கெட்கள் அதிகம் வர வாய்ப்புள்ளது’’ என்றார்.

இதுகுறித்து ஆவின் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பால் பதனிடும் பண்ணைகளில் உள்ள இயந்திரங்களில் ஏற்படும் கோளாறால், அவ்வப்போது தேதி அச்சடிக்க முடிவதில்லை. விரைவில் புதிய கணிணி இயந்திரங்கள் வருகின்றன’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x