Published : 27 Dec 2013 12:00 AM
Last Updated : 27 Dec 2013 12:00 AM

அட்டப்பாடி தமிழர்களை அகதிகளாக அழைத்து வருவோம் - தமிழர் அமைப்புகள் கூட்டாக எடுத்திருக்கும் முடிவு!

அட்டப்பாடியில் பாதிக்கப் பட்டதாகச் சொல்லப்படும் 19 தமிழர் குடும்பங்களை தத்தெடுத்து, அவர்களை அகதிகளாக தமிழகம் அழைத்துவரப் போவதாக தமிழர் அமைப்புகள் அறிவித்திருக்கின்றன.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அட்டப்பாடி கிராமத்தைச் செப்பனிட்டு செழிக்க வைத்தது தமிழர்கள்தான். இங்கே 1930-களில் குடியேறிய தமிழர்கள் நிலம்பூர் ஜமீனிடம் நிலங்களை கிரயம் பெற்று விவசாயம் செய்தார்கள். இன்னொரு பிரிவினர் 1940-ல் தொடங்கி 1960 வரை நிலங்களை படிப்படியாக கிரயம் பெற்று விவசாயம் செய்யத் தொடங்கினார்கள். இந்த நிலங்கள்தான் இப்போது, பழங்குடியினருக்குச் சொந்தமானவை என சர்ச்சை வெடித்திருக்கிறது.

பழங்குடியினருக்கு சொந்தமான நிலங்களை அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என 1975-ல் கேரள அரசு சட்டம் இயற்றியது. இதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியதால், 1999-ல் பழங்குடியினருக்கு சொந்தமான நிலங்களை ஐந்து ஏக்கருக்கு மேல் வைத்துக் கொள்ளக் கூடாது என சட்டத்தை திருத்தினார்கள். ஆனால், இதை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், முந்தைய சட்டத்தின்படி பழங்குடியினர் நிலங்களை மீட்டுக் கொடுக்கும்படி உத்தரவிட்டது. அதை அமல்படுத்தியபோதுதான் இப்போது அடிதடி பிரச்சினை!

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் நீதிமன்றத்தை மதித்தார்களா?

இதுகுறித்து 'தி இந்து'வுக்கு பேட்டி யளித்த வழக்கறிஞர் சிவசாமி தமிழன், ''அட்டப்பாடி ஏரியாவில் சுமார் 30 ஆயிரம் தமிழர்கள் வசிக்கிறார்கள். இவர்கள் தங்களின் மொத்த மூலதனத்தையும் இரண்டு தலைமுறை உழைப்பையும் போட்டுத்தான் அங்குள்ள நிலங்களை வளப்படுத்தி இருக்கிறார்கள். இந்த நிலையில், திடீரென அவர்களை வெளியேறச் சொன்னால் எங்கு போவார்கள்? மறுத்தவர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். கோர்ட் உத்தரவுப்படிதான் நடவடிக்கை எடுக்கிறோம் என்று சொல்லும் கேரள அரசாங்கம், முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கோர்ட் சொன்னதை மதித்ததா?'' என்று கேள்வி எழுப்பினார்.

கேரளத் தமிழர் கூட்டமைப்பின் அமைப்பாளர் அன்வர் பாலசிங்கம் ‘தி இந்து'விடம் பேசுகையில், “அட்டப்பாடியிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முக்காலியில் அணை கட்ட திட்டமிடுகிறது கேரளம். இது நடந்தால் பவானி ஆறு வறண்டுவிடும். இதேபோல், சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பு அணை ஒன்றை கட்டுவதற்கும் முயற்சிக்கிறார்கள். இது நடந்தால் சிறுவாணித் தண்ணீரும் நமக்கில்லை. அட்டப்பாடியில் தமிழன் இருந்தால் இதை எல்லாம் செய்யவிடமாட்டான் என்பதால் தமிழர்களை அங்கிருந்து வெளியேற்றப் பார்க்கிறார்கள்.

ஆதிவாசிகளின் நிலங்களை வாங்கியது தான் தமிழர்கள் செய்த குற்றம் என்றால் 2010-ம் ஆண்டு வரை அந்த நிலங்களுக்கு பத்திரப் பதிவுகள் நடந்தது ஏன்? தீர்வை ரசீது போட்டது ஏன்? ஆதிவாசிகள் நிலம் என்றால் அது எத்தனை ஹெக்டேரில் உள்ளது. எந்த ஏரியாவில் உள்ளது? இது குறித்தெல்லாம் கேரள அரசு வெளிப்படையாக இன்னமும் அறிவிக்காதது ஏன்? அட்டப்பாடியில் தமிழர்கள் 3000 பேர் தாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், 19 பேர் மட்டுமே தாக்கப்பட்டதாகவும் அவர்களுக்கு மட்டுமே அங்கு பிரச்சினை இருப்பது போல் சொல்கிறது கேரள அரசு.

அவர்கள் சொல்லும் அந்த 19 பேரையும் நாங்கள் தமிழகத்துக்கு அகதிகளாக அழைத்துவர முடிவெடுத்திருக்கிறோம். அவர்களில் தலா இரண்டு பேரை நாடார் மகாஜன சங்கம், கொங்கு வேளாள கவுண்டர் பேரவை, பிற்படுத்தப்பட்டோர் பேரவை, விடுதலைச் சிறுத்தைகள், கேரள தமிழர் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளும் தலா மூன்று பேரை ஃபார்வர்டு பிளாக், கொங்குநாடு முன்னேற்றக் கழகம் அமைப்புகளும் மக்கள் ஜனநாயகக் கட்சி ஒருவரையும் தூத்துக்குடி வழக்கறிஞர் சந்திரகாந்தன் இரண்டு நபர்களையும் தத்து எடுக்கிறார்கள்.

அகதிகளுக்கான விவசாய நிலங்களை தத்து எடுத்த நபர்களும் அமைப்புகளும் தமிழகத்தில் வாங்கிக் கொடுப்பதாக உறுதியளித்திருக்கிறார்கள். ஆனால், 19 பேரும் அகதிகளாக தமிழகம் வந்த பிறகு, அட்டப்பாடியில் தமிழன் யாரும் தாக்கப்படக் கூடாது; யாரையும் அங்கிருந்து வெளியேற்றக் கூடாது. இதற்கு சம்மதித்து கேரள அரசாங்கம் எங்களுக்கு உத்தரவாதம் கொடுக்க வேண்டும்'' என்று சொன்னார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x