Published : 04 May 2017 08:44 AM
Last Updated : 04 May 2017 08:44 AM

தீவிரமடைந்த டாக்டர்கள் போராட்டம்: அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகள் நிறுத்தம் - இன்று முதல் புறநோயாளிகள் பிரிவு புறக்கணிப்பு

மருத்துவப் பட்டமேற்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி நடத்தப்பட்டு வரும் அரசு டாக்டர்களின் போராட்டத்தால் நேற்று தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் திட்டமிட்ட அறுவை சிகிச்சைகள் நடைபெறவில்லை.

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிவரும் டாக்டர்களுக்கு மருத்துவப் பட்டமேற்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த 19-ம் தேதி முதல் அரசு டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முதல் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவ மனைகளில் திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகள், முதல மைச்சர் காப்பீட்டுத் திட்ட மருத்துவ சேவைகள், மருத்துவ முகாம்கள், நீதிமன்றப் பணிகள்,விஐபி மருத் துவக் குழு, மாணவர்களுக்கான கற்பித்தல் வகுப்புகள் ஆகிய வற்றை நிறுத்தி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு மருத்துவமனை களில் நடைபெற வேண்டிய சுமார் 4 ஆயிரம் திட்டமிட்ட அறுவை சிகிச்சைகள் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. அவசர அறுவை சிகிச்சைகள் மட்டும் நடைபெற்றன. இதனால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக அரசு மருத்து வர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் ஏ.ராம லிங்கம், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் டாக்டர் பி.பாலகிருஷ்ணன் ஆகியோர் கூறும்போது, “இன்று (நேற்று) தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் திட்டமிட்ட அறுவை சிகிச்சைகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுப்பட்டோம். அவசர அறுவை சிகிச்சைகள் நடைபெற்றது. நாளை (இன்று) புறநோயாளிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுகிறோம்” என்றார்.

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் என 100 பேர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சங்கத்தின் சார்பில் மருத்துவ மாணவர்கள் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை கல்லூரி வளாகத்தில் நேற்றும் தொடர்ந்து நடத்தினர்.

தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அவர்கள் மத்திய அரசுக்கு புத்தி கொடுக்க வேண்டும் என கடவுளிடம் மனு கொடுக்கும் போராட்டம் என்ற பெயரில் பலூன்களில் தங்களுடைய கோரிக்கையை எழுதி பறக்கவிட்டனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் என சுமார் 500 டாக்டர்கள் நேற்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் நேற்று டாக்டர்கள் போராட்டம் நடத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x