Last Updated : 14 Dec, 2013 12:09 PM

 

Published : 14 Dec 2013 12:09 PM
Last Updated : 14 Dec 2013 12:09 PM

தனியார் வளாகங்களில் சிக்கிக் கிடக்கும் சென்னை மாநகராட்சிப் பூங்காக்கள்

தனியார் வளாகங்களில் மாநகராட்சிக் கென ஒதுக்கப்பட்ட நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள பூங்காக்கள், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படாமல் உள்ளன. மாநகராட்சிப் பூங்கா என்று பலகை இருந்தாலும் அவை தனியார் நிறுவனங்களின் பயன்பாட்டுக்கே உள்ளது. இதுபோல் சென்னையில் பல இடங்களில் தனியார் வசம், மாநகராட்சி இடங்கள் மீட்கப்படாமல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

தனியார் நிறுவனங்களின் வளா கத்தில் பத்தாயிரம் சதுர அடிக்கு மேல் திறந்தவெளி நிலம் இருந்தால் (ஓஎஸ்ஆர்) அதில் 10 சதவீதத்தை மாநகராட்சி பயன்பாட்டுக்கு ஒதுக்க வேண்டும் என்பது விதி. அதில், பூங்காவை அந்நிறுவனம் அமைத்துத் தர வேண்டும். அதனை மாநகராட்சி பராமரிக்க வேண்டும்.

ஆனால், சென்னையில் பல இடங் களில் குறிப்பாக, விரிவுபடுத்தப்பட்ட மாநகராட்சிப் பகுதிகளில் ஓ.எஸ்.ஆர். நிலங்கள் மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்படாமல் உள்ளன. உதாரணத்துக்கு, தரமணி அசெண் டாஸ் வளாகத்தில் கடந்த 6 மாதங் களுக்கு முன்பு பொதுமக்கள் பயன் பாட்டுக்கு திறந்து விடப்பட்ட பூங்கா, வேலியிடப்பட்டு மூடப்பட்டுள்ளது.

இது குறித்து பெரியார் நகரில் வசிக்கும் ரபி கூறும்போது, “இப் பகுதிவாசிகள் இந்த வளாகத்தை முற்றுகையிட்ட பிறகு தான் காவல் துறையினர் வந்து இதனை பொது மக்கள் பயன்படுத்த அனுமதித்தனர். ஆனால் இப்போது இதனை மாநக ராட்சியும் பராமரிக்கவில்லை, நிறு வனமும் பராமரிக்கவில்லை. குழந்தைகள் விளையாட எந்த வசதியும் இல்லை. பாதி பூங்கா வேலியால் தடுக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் பயன்படுத்த முடியவில்லை”என்றார்.

இது குறித்து அசெண்டாஸ் அதிகாரிகளை தொடர்பு கொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. அதே போன்று அருகில் உள்ள டைசல் நிறுவன வளாகத்தில், மாநகராட்சிப் பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் “மாநகராட்சி பூங்கா” என்ற பலகை மட்டுமே காணப்படுகிறது. அந்த இடம் மூடிவைக்கப்பட்டுள்ளது.

இது பற்றி காந்தி நகரில் வசிக்கும் விஜய்குமார் கூறும்போது, “இது நிறுவனத்தின் ஊழியர்கள் பயன்படுத் தும் இடமாகத் தான் உள்ளது. பூங்கா வுக்கும் நிறுவனத்துக்கும் ஒரே நுழை வாயில் தான் உள்ளது” என்றார்.

இது குறித்து டைசல் நிறுவன நிர்வாக மேலாளரிடம் கேட்டபோது, “பொது மக்களை அனுமதிக்கிறார் களா இல்லையா என்று தெரிய வில்லை. இது என்னவென்று விசா ரித்து தான் கூற வேண்டும்,” என்றார்.

மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் இது குறித்து கேட்டபோது, “இது பற்றிய புகார் எதுவும் வரவில்லை. இது உண்மையாக இருந்தால் அந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப் படும். வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலையத்திலிருந்து குருநானக் கல் லூரி செல்லும் வழியில் இருந்த நிறு வனம் ஒன்று மாநகராட்சி பூங்காவை மூடி வைத்திருந்தது. அதனை இப்போது திறந்துள்ளோம்” என்றார்.

சென்னையின் விரிவுபடுத்தப் பட்ட மாநகராட்சி பகுதிகளில் அமைந் துள்ள தனியார் நிறுவனங்களில் உள்ள திறந்த வெளி நிலங்களில் 100 பூங்காக்கள் அமைக்கப்படும் என கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டு, 83 இடங்களில் பணிகள் முடிவடைந் துள்ளன. 13 பூங்காக்களில் பணி நடந்து வருகிறது. மீதமுள்ள 4 பூங்காக்களில் பணிகள் தற்காலிக மாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு மேலும் 100 பூங்காக் கள் அமைக்கப்பட உள்ளன. இதில் இதுவரை ஆலந்தூர், மணலி, வளசர வாக்கம் உள்ளிட்ட 24 இடங்களில் பணிகள் தொடங்கிவிட்டன.

சில தனியார் நிறுவனங்கள் பூங்காக்களை அமைக்க இடம் தந்தா லும் அவற்றை பொது மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து விடுவதில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x