Published : 31 Oct 2014 14:38 pm

Updated : 31 Oct 2014 14:38 pm

 

Published : 31 Oct 2014 02:38 PM
Last Updated : 31 Oct 2014 02:38 PM

உணர்வுகளின் காதலி

யார் இவர்?

நடிகை ரேவதியை 80-90களின் பிரபல நாயகியாகவும், தற்போது முன்னணி ஹீரோக்களின் அம்மாவாகவுமே பலருக்கும் தெரியும். தேசிய விருது பெற்ற முழுநீள ஆங்கிலப் படத்தையும், தேசிய விருது பெற்ற குறும்படத்தையும் அவர் இயக்கியிருக்கிறார். அந்த வகையில் மூன்று வித்தியாசமான பிரிவுகளில் தேசிய விருது பெற்றிருக்கிறார்.


விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களையே இயக்கியிருந்தாலும், அந்தப் படங்கள் எதைப் பற்றியதாக இருக்க வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்ற தீர்மான உணர்வில் இருந்து ரேவதியின் படைப்பாளுமையை நாம் உணர்ந்துகொள்ள முடியும்.

பின்னணி

கொச்சியில் பிறந்த ரேவதியின் உண்மைப் பெயர் ஆஷா. அவருடைய அப்பா ராணுவ மேஜர் கேளுன்னி. அதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரேவதி வாழ்ந்துள்ளார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட ஐந்து மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான ‘டூ ஸ்டேட்ஸ்' உட்பட 12 இந்திப் படங்களும் இதில் அடக்கம்.

முதல் அரும்பு

ஆரம்பத்தில் இரண்டு தொலைக்காட்சிப் படங்களை இயக்கிய பிறகு முழுநீளப் படத்தை இயக்க வந்தார். அவருடைய இயக்கத்தில் வெளியான முதல் படம் ‘மித்ர: மை ஃபிரெண்ட்'. இதில் பணிபுரிந்த முதன்மை தொழில்நுட்பக் கலைஞர்கள் அனை வரும் பெண்கள், இசையமைப்பாளர் பவதாரிணி உட்பட.

தமிழ்ப் பண்பாட்டில் ஊறிய நாயகி, அமெரிக்காவில் சென்று வசிக்கும்போது இரண்டு கலாசாரங்களுக்கு இடையே நடக்கும் மோதலே கதை. அமெரிக்க கலாசாரத்தில் ஊறிய நாயகியின் மகள் காதல் வசப்படுகிறாள். அதனால் அவளுக்கும் நாயகிக்கும் இடையே உரசல்கள் ஏற்படுகின்றன. இந்த பிரச்சினைகளுக்கு இடையே நாயகிக்கும் ஒரு நண்பர் கிடைக்கிறார்.

உலகத் திரை விழாக்களில் பாராட்டப்பட்ட படம் இது. 2002-ல் தேசிய அளவில் சிறந்த இந்திய ஆங்கிலப் படம், சிறந்த நடிகை (ஷோபனாவுக்கு இரண்டாவது தேசிய விருது), சிறந்த படத் தொகுப்பு ஆகிய பிரிவுகளில் விருது பெற்றது.

முக்கியப் படைப்புகள்

இந்தியில் எடுக்கப்பட்ட ‘ஃபிர் மிலேங்கே' (மீண்டும் சந்திப்போம்) அவருடைய இரண்டாவது படம். எய்ட்ஸைப் பற்றிப் பேசிய முதல் இந்தியப் படங்களில் ஒன்று.

தங்கைக்கு ரத்தம் கொடுக்கச் செல்லும்போது, ஹெச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கண்டுபிடிக்கப்படுகிறாள் நாயகி. ஆதரவுக்காகத் தன் காதலனைத் தேடுகிறாள், ஆனால் பயனில்லை. அவளுடைய வேலையும் பறிக்கப்படுகிறது.

அதற்கு எதிராக வழக்குத் தொடுக்க முயற்சிக்கும்போது, அதை எடுத்து நடத்த ஒரு வழக்கறிஞர் முன்வருகிறார். ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட மனிதர்கள் இன்றுவரை எதிர்கொண்டு வரும் சமூகப் புறக்கணிப்பைப் (social stigma) பற்றி இப்படம் பேசுகிறது. அபிஷேக் பச்சன், சல்மான் கான், ஷில்பா ஷெட்டி ஆகியோர் நடித்திருந்தார்கள்.

மலையாள இயக்குநர்கள் 10 பேர் இணைந்து உருவாக்கிய புகழ்பெற்ற தொகுப்புப் படமான ‘கேரளா கஃபே'யில், பெண் குழந்தை கடத்தல் தொடர்பாக ‘மக்கள்' என்ற படத்தை ரேவதி இயக்கினார்.

பெற்றோர் இடையிலான சண்டைகள் குழந்தைகளை எப்படி பாதிக்கின்றன என்பதைப் பற்றிய ‘ரெட் பில்டிங் வேர் தி சன் செட்ஸ்' என்ற குறும்படத்துக்கு தேசிய விருது பெற்றிருக்கிறார்.

தெரியுமா?

ரேவதி நல்ல பரதநாட்டியக் கலைஞர். அவருடைய பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்த இடம் சென்னை, வருடம் 1979. இந்தியில் அவர் அறிமுகமான படத்தின் ஹீரோ சல்மான் கான், படத்தின் பெயர் ‘லவ்'.

‘மின்சாரக் கனவு' படத்தில் கஜோலுக்கு, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தில் தபுவுக்கு, ‘தேவராகம்' படத்தில் தேவி ஆகியோருக்குப் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார்.

எபிலிட்டி அறக்கட்டளை மூலம் ஊனமுற்றோருக்கான திரை முயற்சிகளை ஊக்குவித்துவருகிறார். தவிர பேன்யன், டாங்கர் அறக்கட்டளை, வித்யாசாகர் போன்ற சமூக அமைப்புகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறார்.

சென்னை சர்வதேசத் திரைப்பட விழா, இந்திய சர்வதேசத் திரைப்பட விழாக்களின் தேர்வுக் குழு-விருதுக் குழு உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.

நடிகை ரேவதிஇயக்கும் கரங்கள்திரைப்படங்கள்சினிமா

You May Like

More From This Category

the-struggle-to-continue

தொடரும் போராட்டம்

இணைப்பிதழ்கள்

More From this Author