

சென்னை: அமோனியா வாயு கசிவால் உயிரிழந்த 2 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கவும், விபத்து குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய 3 பேர் குழுவையும் அமைத்து முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் விஜய் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் தனியார் மீன் உணவு ஏற்றுமதி தொழிற்சாலையின் உற்பத்தி பிரிவில் எதிர்பாராதவிதமாக அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதில், அங்கு பணியில் இருந்தவர்கள் பாதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் துரதிர்ஷ்டவசமாக 2 பெண்கள் உயிரிழந்துவிட்டனர். 15 பேர் அரசு மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பிலும், 23 பேர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் உள்ளனர். 24 பேர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.
இந்த விபத்து குறித்து தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இயக்குநர், பொது சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநர், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் - செயலர் தலைமையில் ஆய்வு மேற்கொண்டு முதல்கட்ட விசாரணை அறிக்கையை 24 மணி நேரத்துக்கு உள்ளாகவும், முழு விசாரணை அறிக்கையை 3 நாட்களுக்கு உள்ளாகவும் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளேன்.
இந்த சம்பவத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். அவர்களது உடலை சொந்த மாநிலத்துக்கு அனுப்பி நல்லடக்கம் செய்ய அரசு செலவில் நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளேன்.
மருத்துவமனையில் உள்ளவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும், உயிரிழந்த மற்றும் பாதிப்படைந்த தொழிலாளர்களுக்கு, தொழிலாளர் மாநில ஈட்டுறுதி காப்பீட்டு (இஎஸ்ஐ) திட்டம், வேலையாள் இழப்பீடு சட்டத்தின்கீழ் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளேன்.
வருங்காலங்களில் இதுபோன்ற விபத்துகளை தவிர்க்கும் நோக்கில், பேரபாய தொழிற்சாலைகளில் உடனடியாக ஆய்வுகள் மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளேன்.
தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், எம்எல்ஏ, மாவட்டக் கண்காணிப்பு அலுவலர், மூத்த ஐஏஎஸ் அதிகாரி, மாவட்ட ஆட்சியர் இணைந்து சம்பவ இடத்தில் நேரடியாக ஆய்வு செய்து தக்க மேல் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில தொழிலாளர் நலத் துறை அமைச்சர் ஜெ.முகமது பர்வேஸ் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்ததாக முதலில் தகவல் வெளியான நிலையில், 2 பேர் மட்டுமே உயிரிழந்ததாக பின்னர் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.