Published : 10 Sep 2016 04:58 PM
Last Updated : 10 Sep 2016 04:58 PM

காவிரி பிரச்சினையில் கர்நாடகத்தின் கோரிக்கையை மாநில, மத்திய அரசுகள் ஏற்கக்கூடாது: ராமதாஸ்

காவிரி பிரச்சினையில் கர்நாடக அரசின் எந்த கோரிக்கையையும் மாநில, மத்திய அரசுகள் ஏற்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதை எதிர்த்து கர்நாடகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்கள் மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கை பாதிக்கும் அளவுக்கு மோசமடைந்திருப்பதாகவும், இதற்கு காரணமான காவிரி நீர் சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் காவிரி பாயும் மாநில முதல்வர்கள் கூட்டத்தைக் கூட்டும்படியும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமய்யா கடிதம் எழுதியிருக்கிறார். இது தமிழகத்தை சிக்க வைப்பதற்கு கர்நாடகத்தால் விரிக்கப்பட்டுள்ள வலையாகும்.

பிரதமருக்கு சித்தராமய்யா எழுதியுள்ள கடிதம் வஞ்சம் நிறைந்ததும், தமிழகத்திற்கு தண்ணீர் விட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சிதைக்கக்கூடியதும் ஆகும். 'தமிழ்நாட்டிற்கு காவிரியில் தொடர்ந்து நீர் திறந்து விட்டால் கர்நாடகத்திற்கு பாசனத்திற்கும், குடிநீருக்கும் தண்ணீர் இருக்காது. அதேநேரத்தில் மேட்டூர் அணையில் தற்போதுள்ள தண்ணீரும், வடகிழக்கு பருவமழை மூலம் கிடைத்த நீரும் போதுமானது' என்று சித்தராமய்யா கூறியிருப்பது விஷமத்தனமானது ஆகும்.

மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி 39 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே உள்ளது. ஆனால், கர்நாடக அணைகளில் 55.68 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. தமிழகத்தில் காவிரி நீர் தான் 44,016 சதுர கி.மீ நிலங்களுக்கு பாசன ஆதாரமாகவும், சுமார் 5 கோடி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் திகழ்கிறது. அதேநேரத்தில் கர்நாடகத்தில் 34,273 சதுர கி.மீ நிலங்கள் மட்டுமே பாசனத்திற்காக காவிரி ஆற்றை நம்பியுள்ளன. அதுமட்டுமின்றி, குடிநீருக்காக ஒரு கோடிக்கும் குறைவானவர்களே காவிரியை நம்பியிருக்கின்றனர்.

அவ்வாறு இருக்கும் போது, அதிக தேவை உள்ள தமிழகத்திற்கு 39 டி.எம்.சி தண்ணீர் போதுமானது என்பதும், குறைந்த தேவை கொண்ட கர்நாடகத்திற்கு 55.68 டி.எம்.சி தண்ணீர் போதாது என்பதும் விந்தையிலும் விந்தையாகும். எந்த நீரியல் ஆய்வின் மூலம் இதையெல்லாம் சித்தராமய்யா கண்டறிந்தார் என்பது தெரியவில்லை.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையே இன்னும் பெய்யாத நிலையில், அதன் மூலம் தண்ணீர் கிடைத்திருப்பதாக சித்தராமய்யா கூறுவதைப் பார்க்கும் போது, அவருக்கு தமிழகத்தின் பருவமழை பற்றி போதிய அறிதலும், புரிதலும் இல்லை என்றோ அல்லது தமிழகத்தின் தண்ணீர் நிலை குறித்து தவறான தகவல்கள் அளித்து பிரதமரை திசை திருப்ப முயல்கிறார் என்றோ தோன்றுகிறது. இவை இரண்டுமே மோசமானவை என்பதால் அவரின் இக்கருத்துக்களை பொருட்படுத்தக் கூடாது.

காவிரிப் பிரச்சினையால் கர்நாடகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைவதாகவும், அதைத் தடுக்க காவிரி பாயும் மாநில முதல்வர்கள் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்பதும் தேவையற்றவை. சட்டம் - ஒழுங்கு என்பது மாநிலத்தின் பொறுப்பாகும். அதைக் கட்டுப்படுத்த சித்தராமய்யாவால் முடியவில்லை என்றால் மத்தியப் படைகளை அனுப்பும்படி பிரதமரை கோரலாம் அல்லது தமது இயலாமையை காரணம் காட்டி முதல்வர் பதவியிலிருந்து விலகலாம்.

அவற்றை விடுத்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு திறந்து விடப்படும் பற்றாக்குறையான நீரின் அளவையும் குறைக்கும் நோக்கத்துடன் காவிரி மாநில முதல்வர்கள் கூட்டத்தை நடத்த சித்தராமய்யா கோருவது தமிழகத்திற்கு எதிரான, சுயநலம் கொண்ட சிந்தனையாகும். இத்தகைய கோரிக்கைகளை ஆய்வு செய்யாமலேயே பிரதமர் நிராகரிக்க வேண்டும்.

இவற்றையெல்லாம் மீறி காவிரிப் பிரச்சினையில் பேச்சுக்கள் மூலம் ஒரு போதும் தீர்வு ஏற்பட்டதில்லை. மாறாக தமிழகத்திற்கு பாதிப்புகள் தான் ஏற்பட்டிருக்கின்றன. 1924ஆம் ஆண்டின் காவிரி நீர் பகிர்வு ஒப்பந்தத்தை 1974 ஆம் ஆண்டில் புதுப்பிப்பது தொடர்பாக 10 ஆண்டுகள் நடைபெற்ற பேச்சுக்களால் எந்த பயனும் ஏற்படவில்லை. மாறாக ஒப்பந்தம் காலாவதியாகி காவிரி நீரில் தமிழகம் உரிமையை இழந்தது தான் மிச்சம்.

அதைத் தொடர்ந்து கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே ஹாரங்கி, ஹேமாவதி அணைகள் கட்டப்பட்ட போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழகம், காவிரி பிரச்சினையை தீர்க்க நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. ஆனால், பேச்சுக்கள் மூலம் பிரச்சினையை தீர்த்துக் கொள்ளலாம் என்று அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி கேட்டுக் கொண்டதை ஏற்று உச்ச நீதிமன்றத்திலிருந்த வழக்கை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி திரும்பப் பெற்றார். அதனால் காவிரி சிக்கலில் ஏற்பட்ட பின்னடைவுகளை தமிழகம் நன்கு அறியும்.

அதன்பின் சுமார் 25 ஆண்டுகாலப் போராட்டத்திற்கு பிறகு 1990-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் 1991-ஆம் ஆண்டு இடைக்காலத் தீர்ப்பு அளித்த போதிலும், அதை செயல்படுத்துவதற்கான காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப்படவில்லை. 1997ஆம் ஆண்டு இதற்கான திட்டம் தயாரிக்கப்பட்ட போது, காவிரி நதிநீர் ஆணையத்துக்கு மிக அதிக அதிகாரங்கள் அளிக்கப் பட்டிருந்தன. காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பை மதித்து தமிழகத்திற்கு கர்நாடகம் தண்ணீர் திறக்க மறுத்தால், அங்குள்ள அணைகளை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வதற்கான அதிகாரம் காவிரி நதிநீர் ஆணையத்திற்கு வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், இத்தகைய ஆணையத்தை அமைக்க அப்போதைய கர்நாடக முதல்வர் ஜே.எச்.படேல் எதிர்ப்பு தெரிவித்ததாலும், அப்போது மத்தியில் ஜனதாதளம் தலைமையிலான கூட்டணி அரசு இருந்ததாலும் காவிரி ஆணையம் அமைக்கப்படவில்லை.

அதன்பின் மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்ததும் அனைத்து அதிகாரங்களுடன் கூடிய காவிரி ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று கூட்டணியில் அங்கம் வகித்த பாமக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி கர்நாடக முதலமைச்சருடன் பேச்சு நடத்தி, காவிரி நதிநீர் ஆணைய வரைவை திருத்தி, அதிகாரமே இல்லாத காவிரி ஆணையமாக பிரதமர் தலைமையில் அமைக்கப்பட்டது. இவ்வாறு காவிரி பிரச்சினை குறித்து பேச்சு நடத்திய போதெல்லாம் தமிழகம் இழந்தது தான் அதிகம்.

அதையெல்லாம் தாண்டி, காவிரி பிரச்சினை குறித்து உச்ச நீதிமன்றமும், நடுவர் மன்றமும் பலமுறை விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கியிருக்கின்றன. அதற்கு மேல் பேசுவதற்கு எதுவும் இல்லை. காவிரிப் பிரச்சினைக்கு தற்காலிகத் தீர்வாக நாளை மறுநாள் நடைபெறவிருக்கும் காவிரி மேற்பார்வைக்குழு கூட்டத்தில் தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை திறந்து விடும்படி ஆணையிடுவதும், நிரந்தரத் தீர்வாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதும் தான் மத்திய அரசு செய்ய வேண்டிய பணிகள் ஆகும். அதைத்தவிர கர்நாடக அரசின் எந்த கோரிக்கையையும் தமிழக, மத்திய அரசுகள் ஏற்கக்கூடாது'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x