Published : 03 Feb 2017 09:25 AM
Last Updated : 03 Feb 2017 09:25 AM

தூங்கிக்கொண்டிருந்த பெண்ணின் மூக்கில் புகுந்து மூளை வரை சென்ற கரப்பான்பூச்சி: ஸ்டான்லி மருத்துவர்கள் உயிருடன் அகற்றினர்

தூங்கிக்கொண்டிருந்தபோது பெண்ணின் மூக்கின் வழியாக உள்ளே புகுந்த கரப்பான்பூச்சி, அவரது மூளையின் அடிப்பகுதிக்கு அருகே சென்றது. சுமார் 12 மணி நேரம் வரை அங்கு இருந்து குடைச்சல் கொடுத்த கரப்பான்பூச்சியை அரசு ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் மிக கவனமாக உயிருடன் அகற்றினர்.

சென்னை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்தவர் செல்வி (42). இவர் கடந்த 31-ம் தேதி தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென வலது மூக்கு துவாரத்தில் ஏதோ ஊர்வதுபோன்ற உணர்வு ஏற்பட்டது. திடுக்கிட்டு எழுந்தார். அப்பகுதியில் குடைச்சலும், அரிப்பும் ஏற்பட்டது. பின்னர், அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். சோதித்துப் பார்த்த மருத்துவர், மூக்குக்குள் ஏதோ அசைவதாக கூறியுள்ளார். அருகே உள்ள வேறு சில தனியார் மருத்துவனைகளிலும் காட்டியதற்கு, எந்த மருத்துவர்களாலும் சரியான காரணத்தைக் கண்டறிய முடியவில்லை.

இதையடுத்து, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவனையின் காது, மூக்கு, தொண்டை பிரிவுக்கு செல்வி அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு துறைத் தலைவர் எம்.என்.சங்கர், டாக்டர் முத்துசித்ரா ஆகியோர் மூக்கு உள்நோக்கு கருவி மூலம் பரிசோதித்தனர். செல்வியின் மூக்கு உள்பகுதியில் ஒரு கரப்பான்பூச்சி இருப்பதையும், அது அவரது மூளையின் அடிப்பகுதிக்கு அருகே உயிரோடு உலவிக் கொண்டிருப்பதையும் கண்டறிந்தனர். பின்னர், சிகிச்சையின் மூலம் அதை உயிரோடு வெளியே எடுத்தனர்.

இதுகுறித்து டாக்டர் எம்.என்.சங்கர் கூறும்போது, ‘‘செல்வி மூளையின் அடிப்பகுதிக்கு அருகே சுமார் 12 மணி நேரமாக அந்த கரப்பான்பூச்சி உயிருடன் இருந்திருக்கிறது. மிக கவனத்துடன், பத்திரமாக அந்த கரப்பான்பூச்சி அகற்றப்பட்டதால் நோயாளிக்கு உடனடி நிவாரணம் கிடைத்துள்ளது. இதுபோல, மூளைக்கு அடிப்பகுதியில் கரப்பான்பூச்சி 12 மணி நேரம், அதுவும் உயிருடன் அகற்றப்பட்டது மிகவும் அரிதானது. முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது’’ என்றார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x