Published : 28 Aug 2016 12:39 PM
Last Updated : 28 Aug 2016 12:39 PM

சிறுவாணியில் அணை - செப்.-3, கோவையில் ஆர்ப்பாட்டம்: கருணாநிதி அறிவிப்பு

கேரள அரசு, தமிழ்நாட்டின் எல்லைப் பகுதியான அட்டப்பாடி வனப் பகுதியில் உள்ள முக்காலி என்னும் இடத்தில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்ட திட்டமிட்டுள்ளது, இதனைக் கண்டித்து செப்டம்பர் 3-ம் தேதி கோவையில் ஆர்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை ஒன்றைக் கட்டுவது பற்றி, மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையும், கேரள அரசும் எழுதிய பல கடிதங்களுக்கு தமிழக அரசிடமிருந்து எந்தவிதமான பதிலும் வராத நிலையில், அணைக் கட்டும் திட்டத்திற்கான அனுமதியை நதி நீர்ப் பள்ளத்தாக்கு மற்றும் புனல் மின் திட்டங் களுக்கான மத்திய நிபுணர்கள் குழு, இந்தத் திட்டத்தை மேற்கொள்வதற்கான வரைமுறைகளைப் பரிந்துரை செய்திருக்கிறது என்று “இந்து” நாளிதழில் 26-8-2016 அன்று வெளி வந்த அதிர்ச்சி தரத் தக்க செய்தியைப் பார்த்துவிட்டு, நானும் தமிழ்நாட்டில் உள்ள மற்ற எதிர்க் கட்சிகளின் தலைவர்களும் அவசர அவசரமாக அறிக்கைகள் விடுத்திருந்தோம்.

அனைத்துக் கட்சிகளின் சார்பில் அறிக்கைகளை வெளியிட்ட பிறகு, தமிழக அரசு விழித்துக் கொண்டு, தமிழக முதலமைச்சர் அவசர அவசரமாக ஆனால் வழக்கம் போல, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்டும் திட்ட ஆய்வுக்கான அனுமதியினை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், இந்த அணைகட்டும் திட்டத்தை கேரள அரசு தொடரக் கூடாது என்று கேரள அரசுக்கு ஆலோசனை வழங்க வேண்டுமென்று கடந்த 21-6-2012 அன்று அப்போதைய பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்ததாகவும், முதல் அமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டிருக்கிறார். 2012ஆம் ஆண்டிற்குப் பிறகு நான்கு ஆண்டுகள் ஆகின்றனவே, இந்த இடைக்காலத்தில் தமிழக அரசு முக்கியமான இந்தப் பிரச்சினை பற்றி டெல்லியில் ஆளும் புதிய அரசுக்குத் தெரியப் படுத்தியிருக்கிறதா? நேரில் சந்தித்த போது, பிரதமரிடம் பேசியிருக்க வேண்டாமா? இப்போது அணை கட்டுவதற்கான முயற்சிக்கு மத்திய அரசு ஒப்புதல் தந்த பிறகு, அதனைத் திரும்பப் பெற வேண்டும் என்று கடிதம் எழுதுவது தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிக்கின்ற முயற்சி அல்லவா என்ற சந்தேகங்கள் எல்லாம் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட மக்கள் மத்தியில் எழுகின்றனவா அல்லவா?

முதலமைச்சர் ஜெயலலிதா நேற்றைய தினம் (27-8-2016) பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “தமிழக அரசுக்கு மத்தியச் சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை பல முறை கடிதம் எழுதியதாகக் குறிப்பிட்டிருப்பது உண்மையில் தவறான தாகும்” என்று தெரிவித்திருக்கிறார். ஆனால் 26-8-2016 தேதிய “இந்து” ஆங்கில நாளிதழில், “The WRD Additional Chief Secretary wrote to the Tamil Nadu Public Works Department Secretary on May 4. No reply was received from the State of Tamil Nadu till August 11 and 12 when the EAC Meeting was held”அதாவது “மத்திய அரசின் நீர் வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் 4-5-2016 அன்று தமிழக அரசின் பொதுப்பணித் துறைச் செயலாளருக்கு கடிதம் எழுதினார். ஆகஸ்ட் 11, 12ஆம் தேதி வரை எந்தப் பதிலும் தமிழக அரசிடமிருந்து வரவில்லை” என்று எழுதப்பட்டிருக்கிறது என்றால்; முதல் அமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் பல முறை கடிதம் எழுதியதாகக் குறிப்பிட்டிருப்பது உண்மையில் தவறானதாகும் என்று சொல்லி யிருப்பது தவறான செய்தியா? அல்லது 4-5-2016 அன்று தமிழக அரசின் பொதுப்பணித் துறை;ச செயலாளருக்கு மத்திய அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியதாகக் கூறியிருப்பது தவறான செய்தியா? இதிலே எது உண்மை? மத்திய அரசு சொல்வது சரியா; அல்லது ஜெயலலிதா சொல்வது சரியா? எது சரி என்று நாடு தெரிந்து கொள்ள வேண்டாமா?

மேலும் முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்தத் திட்டத்தை ஆட்சேபித்து மத்திய அரசின் சுற்றுச் சூழல், வனம் மற்றும் வானிலை மாற்றத் துறை மற்றும் கேரள அரசு ஆகியோருக்கு தமிழக அரசு பல முறை கடிதம் எழுதியுள்ளது என்று தெரிவித்திருக்கிறார். ஆனால் வந்த செய்தியில், “With the Tamil Nadu Government failing to respond to “several letters” sent by the Union Ministry of Environment and Forests and the Kerala Government - அதாவது “மத்திய அரசும், கேரள அரசும் எழுதிய பல கடிதங்களுக்கு தமிழக அரசு பதில் அளிக்காத நிலையில்” என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதா பல முறை கடிதம் எழுதியதாக நேற்று தெரிவித்திருக்கிறார். இதிலே எது உண்மை?

முதலமைச்சர் ஜெயலலிதா கூறுவது போல தமிழக அரசு பல கடிதங்கள் எழுதியது உண்மை என்றால், எந்தெந்த தேதியில் கடிதங்கள் தமிழக அரசின் சார்பில் அண்மைக் காலத்தில் எழுதப்பட்டன என்ற விவரங்களையெல்லாம் தெரிவிக்க வேண்டாமா? அப்பொழுது தானே அவரது கூற்றில் உள்ள உண்மை விளங்கும்.

அது மாத்திரமல்ல; தமிழக அரசு நடவடிக்கை எடுக்கிறதோ இல்லையோ, சிறுவாணியில் அணை கட்ட மத்திய அரசு ஒப்புதல் அளித்தால் தமிழ்நாட்டின் மூன்று மாவட்டங்கள் பாலைவனமாகி விடும் என்ற நிலையை உத்தேசித்து, உடனடியாக மத்திய-மாநில அரசுகள் சிறுவாணியில் கேரள அரசு அணையைக் கட்டுவதைத் தவிர்த்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்பதை வலியுறுத்துவதற்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கொங்கு மண்டலத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று என்னுடைய ஒப்புதலைப் பெற்று நடத்தப்படுமென்று நாமக்கல் நிகழ்ச்சியில் கழகப் பொருளாளர் அறிவித்திருக்கிறார். அதன்படி வரும் செப்டம்பர் 3ஆம் தேதியன்று காலை 10 மணி அளவில் கோவை சிதம்பரம் பூங்காவில், கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களின் சார்பில் கழகப் பொருளாளர் மு.க. ஸ்டாலின் தலைமையில், சிறுவாணியில் அணை கட்ட கேரள அரசுக்கு மத்திய அரசு எவ்வித அனுமதியும் அளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில், மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். கழகத் தோழர்கள் அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று சிறப்பாக கழகத்தின் குரலை எதிரொலிக்க வேண்டுமென்றும்; மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த பொது மக்கள் குறிப்பாக விவசாயப் பெருமக்கள் ஒத்துழைத்திட வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x