Last Updated : 09 Jan, 2014 12:00 AM

1  

Published : 09 Jan 2014 12:00 AM
Last Updated : 09 Jan 2014 12:00 AM

மனுக்களின் நிலை அறிய வழக்கறிஞர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் - உயர்நீதிமன்றத்தின் புதிய திட்டம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுக்களின் நிலை என்ன என்பது பற்றி சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவிக்கும் புதிய திட்டம் அறிமுகம் ஆகிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்காக தாக்கல் செய்யப்படும் ஒவ்வொரு மனுவுக்கும் முத்திரைக் கட்டண பதிவேடு எண் (எஸ்.ஆர். நம்பர்) வழங்கப்படும். அதன் பிறகு அந்த மனுவின் தகுதி நிலைப்பாடு குறித்து நீதிமன்ற அலுவலர்கள் பரிசீலனை செய்வார்கள். தகுதியான மனு எண் எனில் வழக்கு எண் ஒதுக்கப்படும். இல்லையெனில் முறையாக தாக்கல் செய்வதற்காக அந்த மனு திரும்ப அளிக்கப்படும். வழக்கு எண் ஒதுக்கப்பட்ட மனுக்கள் அடுத்து நீதிமன்ற விசாரணைப் பட்டியலில் இடம்பெற்று நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு வரும்.

மனுவை சம்பந்தப்பட்ட பிரிவில் தாக்கல் செய்வதிலிருந்து அந்த மனு விசாரணைப் பட்டியலில் எப்போது இடம்பெறும் என்பது வரை ஒவ்வொரு கட்டத்திலும் மனுவின் நிலை குறித்து அறிய வழக்கறிஞர்கள் மனு பிரிவுக்கு அலைய வேண்டிய நிலை உள்ளது. இதனால் மனு தாக்கல் செய்யப்படும் பிரிவில் எப்போதும் கூட்டமாக இருக்கும்.

இந்த சிரமங்களைப் போக்கும் விதத்தில் மனுவின் நிலை குறித்து எஸ்.எம்.எஸ். மூலம் வழக்கறிஞர்களுக்கு தகவல் தெரிவிக்கும் முறை அமல்படுத்தப்படவுள்ளது.

மனு தாக்கல் செய்தவுடன் வழங்கப்படும் முத்திரைக் கட்டண பதிவேட்டு எண் முதலில்

எஸ்.எம்.எஸ். மூலம் வழக் கறிஞருக்கு தெரிவிக்கப்படும். அடுத்து அந்த மனு தகுதியானது எனில் வழக்கு எண் வழங்கப்பட்டு அது தொடர்பான தகவல் அனுப்பப்படும். ஒருவேளை மனு முறையாக தாக்கல் செய்யப்படவில்லை எனில் மனுவை திரும்ப அளிப்பது தொடர்பான தகவலும் எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கப்படும்.

இதுகுறித்து தெரிவித்த உயர் நீதிமன்ற பணிகளை கணினிமயப்படுத்துவதற்கான குழுவின் தலைவரான நீதிபதி வி.ராமசுப்பிரமணியன், “மனு தாக்கல் செய்யப்படுவது முதல் வழக்கு எண் ஒதுக்கப்படும் கட்டம் வரையிலான தகவல்களை எஸ்.எம்.எஸ். மூலம் வழக்கறிஞர்களுக்கு தெரிவிக்கும் திட்டம் ஜனவரி 20-ம் தேதி அமலுக்கு வருகிறது” என்றார்.

மேலும், எப்போது, எந்த நீதிமன்றத்தில் மனு விசாரணைக்கு வருகிறது, அடுத்த விசாரணைக்காக எந்த தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது, வழக்கு முடித்து வைக்கப்பட்டது பற்றிய தகவல், தீர்ப்பின் நகல் எப்போது கிடைக்கும் போன்ற விவரங்களை எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கும் திட்டம் பின்னர் அமலுக்கு வரும் என்றார் நீதிபதி. இந்தத் திட்டம் குறித்து கருத்து தெரிவித்த மூத்த வழக்கறிஞர் எஸ்.ஹாஜா முகைதீன் கிஸ்தி, ஏராளமான வழக்குகளை கையாளும் வழக்கறிஞர்களுக்கு இந்த புதிய திட்டம் பெரும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x