Published : 07 Mar 2014 08:23 PM
Last Updated : 07 Mar 2014 08:23 PM

ஈரோடு: வசதிகள் இன்றி அவதிப்படும் மலை கிராம மக்கள்: நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் விமோசனம் பிறக்குமா?

ஈரோடு மாவட்ட மலைக்கிராம மக்கள் வீடு, மின்சாரம், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி அவதிக்குள்ளாவது தொடர்ந்து வருகிறது. இப்பகுதி மக்களின் தேவைகளுக்கு வரவுள்ள தேர்தலாவது விடை சொல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஈரோடு மாவட்ட மலைக்கிராமங்களான தாளவாடி, ஆசனூர், கடம்பூர், குன்றி, பர்கூர் ஆகிய பகுதிகளை ஒட்டிய மலை கிராமங்களில், கல்வி, மருத்துவம், குடிநீர், சாலைவசதி, மின்சாரம், குடியிருப்புகள் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கூட இன்னும் முழுமையாக சென்றடையாமல் இருந்து வருகிறது. சந்தன வீரப்பனின் பிடியில் இந்த மலைக்கிராமங்கள் இருந்து வந்த நிலையில், மக்களுக்கு அடிப்படை வசதிகளை கொண்டு சேர்ப்பதில் பல்வேறு தடைகள் ஏற்பட்டதாக முன்பு அரசு நிர்வாகங்கள் கூறி வந்தன.

வீரப்பன் மறைவிற்கு பிறகும், இந்த மலைக்கிராம மக்களை அரசு கண்டுகொள்வதில்லை என்பது வேதனையான உண்மை. மத்திய, மாநில அரசுகள் பழங்குடியின மக்களுக்காக பெரும் தொகையை நிதியாக ஒதுக்கி பல திட்டங்களை அறிவிக்கின்றன. ஆனால், இவை அந்த மக்களை சென்றடையாத நிலை உள்ளது.

மின்சாரம் இல்லை

குறிப்பாக ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டத்தை சேர்ந்த கத்திரிமலை, அக்னிபாபி சத்தியமங்கலம் வட்டத்தை சேர்ந்த மல்லியம்மன் துர்க்கம், தளாவடி வட்டத்தைச் சேர்ந்த ராமரணை போன்ற கிராமங்களில் இதுவரை மின்சார வசதி கூட இல்லாத நிலை தொடர்கிறது. கடந்த ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட இலவச வண்ண த்தொலைக்காட்சியை பெற்ற இந்த கிராம மக்கள் அதனை பயன்படுத்த மின்சாரம் இல்லாததால், பரணில் போட்டு வைத்துள்ளனர்.

பர்கூர் ஊராட்சிக்குட்பட்ட அக்னிபாவி கிராமத்தில் உள்ள 30 குடும்பத்தினர் 30 கிலோ மீட்டர் நடந்தால்தான் மருத்துவம் உள்ளிட்ட வசதிகளைப் பெறமுடியும். கத்திரி மலையில் வசிக்கும் 80 குடும்பத்தினரும், மல்லியம்மன் துர்க்கத்தில் வசிக்கும் 50 குடும்பத்தினருக்கும், ராமரணை மலைக்கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கும் இதே நிலைதான். பல மலைக் கிராமங்களில் உள்ள மக்கள் குடிசை வீடுகளில்தான் இன்றும் வசித்து வருகின்றனர்.

கத்திரி மலையில் உள்ள அரசு உண்டு உறைவிடப்பள்ளிக்கு செல்லும் ஆசிரியர் 8 கி.மீ., நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதில் அக்னிபாபி கிராமத்திற்கு அருகே மின் இணைப்புகள் உள்ளதால், இந்த கிராமத்தில் எளிதாக மின்வசதி செய்து தர முடியும். ஆனால், நிர்வாகங்கள் அக்கறை காட்டவில்லை என்று குற்றஞ்சாட்டுகின்றனர் இப்பகுதி மக்கள்.

தொட்டிலில் நோயாளிகள்

இதுகுறித்து, அக்னிபாபியைச் சேர்ந்த பழங்குடி மக்கள் சங்க பர்கூர் மலை வட்டார பொறுப்பாளார் அப்புசாமி கூறியதாவது:

மலைப்பகுதி கிராமங்களில் மின்வசதி இல்லை என்பதோடு, மருத்துவ வசதி இல்லாததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். கர்ப்பிணிகள், நோயாளிகளை தொட்டில் கட்டி 20 கி.மீ. தூக்கி சென்றால்தான் ஆரம்ப சுகாதார நிலையத்தை அடைந்து மருத்துவ சிகிச்சை பெற முடியும். மலை கிராமங்களில் மாதத்தில் ஒரு நாள் அரசு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என நீண்டகாலமாக கோரி வருகிறோம்.

கத்திரிமலையை சேர்ந்த மக்கள், சேலம் மாவட்டம் கத்திரி பட்டிக்கு 15 கி.மீ., நடந்து சென்றால்தான் ரேக்ஷன் பொருட்களை வாங்க முடியும். மற்ற கிராமங்களிலும் இதே நிலைதான்.

கோயில்நத்தம் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடந்து ஒரு ஆண்டு ஆகிறது. ஆனால், பணிகள் ஏதும் நடக்கவில்லை. மழையை நம்பி இந்த மக்கள் செய்யும் விவசாயத்திற்கும், வன விலங்குகளால் பாதிப்பு ஏற்படுகிறது. யானை, காட்டுப்பன்றி, காட்டெறுமை போன்ற வன விலங்குகளின் தாக்குதலில் இருந்து உயிரையும், விளை பொருட்களையும் பாது காக்க கிராமங்களை சுற்றி வன துறையினர் அகழி வெட்டித்தர வேண்டும்.

சாதிச்சான்றிதழ் வழங்கு வதில் உள்ள குளறுபடிகளால், மாணவர்களின் கல்வி பாதிக்க பட்டு வருகிறது. தேர்தலுக்கு ஓட்டு கேட்டு வரும் வேட்பாளர்களிடம் எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்துவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பர்கூர் மலைபகுதி மக்களின் 50 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், மணியாச்சி பள்ளத்தில் பாலப்பணி நடக்கிறது. இந்த பணி முடிந்தால், 14 கிராமக்களுக்கு போக்குவரத்து வசதி கிடைக்கும் என்று எதிர்பார்ப்புடன் உள்ளனர் மலை கிராம மக்கள்.

எம்.எல்.ஏ., விளக்கம்

இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பவானிசாகர் தொகுதி எம்.எல்.ஏ., சுந்தரத்திடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:

தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து போர்வல் மூலம் குடிநீர் வசதி, கான்கிரீட் பாதைகளை மலைக்கிராம மக்களுக்கு அமைத்து தந்துள்ளோம். ராமரணை, பெஜ லட்டி, கெத்தேசால், புதுக்காடு உள்ளிட்ட கிராமங்களில் பழங்குடி யினர் நலத்துறை மூலம் 1000 வீடு களை கட்டித்தர அரசிடம் கோரிக்கை விடுத்தேன்.

இதில், 300 வீடுகளை கட்டிக்கொடுக்க அரசு பரிசீலனை செய்து வருகிறது. வன உரிமைச் சட்டப்படி, மலைக்கிராம மக்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து உரிமைகளும் கிடைக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x