Published : 25 Sep 2016 06:40 PM
Last Updated : 25 Sep 2016 06:40 PM

தமிழகத்தில் 1,31,794 உள்ளாட்சி பதவிகளுக்கு அக்டோபர் 17, 19 தேதிகளில் 2 கட்டமாக தேர்தல்

வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்; நடத்தை விதிகள் உடனடி அமல்

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்பு களுக்கான தேர்தல் அக்டோபர் 17, 19-ம் தேதிகளில் 2 கட்டங்களாக நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் அறிவித்தார். தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள் ளன.

தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சி கள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள், 12,524 ஊராட்சிகள் உள்ளன. தற்போதைய உள்ளாட்சி அமைப்புகளில் இருப் பவர்களின் பதவிக்காலம் அக் டோபர் 24-ம் தேதியுடன் முடிவடை கிறது. இதையடுத்து, உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி புதிய பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டது.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் நேற்று அறிவித்தார். அவர் கூறியதாவது:

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளுக்கான தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறும். இதற்கான தேர்தல் அறிவிக்கை 26-ம் தேதி (இன்று) வெளியிடப்படும். வேட்புமனு தாக்கலும் 26-ம் தேதியே தொடங்குகிறது. தினமும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். மனு தாக்கல் செய்ய கடைசி நாள் அக்டோபர் 3-ம் தேதி. மனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 4-ம் தேதி நடக்கும். வேட்புமனுக்களை அக்டோபர் 6-ம் தேதி பிற்பகல் 3 மணி வரை திரும்பப் பெறலாம். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

முதல்கட்ட வாக்குப்பதிவு 10 மாநகராட்சிகள், 64 நகராட்சிகள், 285 பேரூராட்சிகள், 193 ஊராட்சி ஒன்றியங்கள் ஆகியவற்றுக்கு அக்டோபர் 17-ம் தேதியும் 2-வதுகட்ட வாக்குப்பதிவு 2 மாநகராட்சிகள் (சென்னை, திண்டுக்கல்), 60 நகராட்சிகள், 273 பேரூராட்சிகள், 195 ஊராட்சி ஒன்றியங்கள் ஆகியவற்றுக்கு அக்டோபர் 19-ம் தேதியும் நடைபெறும். வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். 2 கட்ட தேர்தலிலும் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 21-ம் தேதி காலை 8.30 மணி முதல் எண்ணப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் களின் முதல் கூட்டம் மற்றும் பதவியேற்பு அக்டோபர் 26-ல் நடைபெறும்.

மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர், மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர், கிராம ஊராட்சி துணைத் தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நவம்பர் 2-ம் தேதி நடைபெறும்.

இந்த தேர்தல் மூலம் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 974 ஊரக உள்ளாட்சி பதவிகள், 12,820 நகர்ப்புற ஊராட்சி பதவிகள் என மொத்தம் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 794 பதவியிடங்கள் நிரப்பப்படும்.

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் கட்சி அடிப்படையிலும், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் கட்சி அடிப்படை அல்லாமல் பொது வான தேர்தலாகவும் நடத்தப்படும்.

4 நிறத்தில் வாக்குச்சீட்டுகள்

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான 4 தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடைபெறுவதால் 4 விதமான வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு வெள்ளை நிறத்திலும், ஊராட்சித் தலைவருக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கு பச்சை நிறத்திலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு மஞ்சள் நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும்.

இரண்டு கிராம ஊராட்சி வார்டுகளுக்கு பொதுவாக அமைக் கப்படும் வாக்குச்சாவடிகளில் ஒரு வார்டுக்கு வெள்ளை நிறத்திலும், மற்றொரு வார்டுக்கு இளநீல நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும். வாக்குச் சீட்டுகள் அச்சடிப்பு பணி நிறை வடையும் தருவாயில் உள்ளது.

91,098 வாக்குச்சாவடிகள்

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு 91,098 வாக்குச் சாவடிகளில் நடைபெறவுள்ளது. இதில் 62,337 வாக்குச்சாவடிகள் ஊரகப்பகுதியிலும், 28,761 வாக்குச் சாவடிகள் நகர்ப்புறங்களிலும் அமைக்கப்படும். சென்னை மாநக ராட்சியில் மட்டும் 5,531 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும். மொத்தம் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் மத்திய அரசு அதிகாரிகள், பொதுத்துறை வங்கி அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர்.

5.8 கோடி வாக்காளர்கள்

இந்த தேர்தலில் 5 கோடியே 80 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். அவர்களில் ஆண்கள் 2 கோடியே 88 லட்சம் பேர். பெண் கள் 2 கோடியே 92 லட்சம் பேர். இதர வாக்காளர்கள் 4,584 பேர்.

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி வீதம் மொத்தம் 37 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். சென்னை உட்பட சில மாநகராட்சிகளில் கூடுதல் பார்வையாளர்கள் நியமிக் கப்படுவர். வாக்காளர்கள் சுதந்திர மாகவும், அச்சமின்றியும் வாக் களிக்க வசதியாக வாக்குச்சாவடி களுக்கு தகுந்த போலீஸ் பாது காப்பு போடப்படும். பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்படும். அதோடு வாக்குப்பதிவு நடவடிக் கைகள் வீடியோ மூலம் பதிவு செய்யப்படும்.

நன்னடத்தை விதிகள் அமல்

தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டதால் நன்னடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின் றன. உள்ளாட்சி தேர்தலுக்கு ரூ.180 கோடிக்கு அரசு அனுமதி வழங்கியது. அதில் ரூ.107 கோடி மாவட்ட வாரியாக பங்கிடப்பட்டு மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டுவிட்டது.

இவ்வாறு சீத்தாராமன் கூறினார்.

பெண்களுக்கு 50 சதவீதம்

உள்ளாட்சி தேர்தலில் இந்த முறை கவுன்சிலர்கள் மற்றும் ஊராட்சி தலைவர்கள் மட்டுமே மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்படுவர். மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சி தலைவர், மாவட்ட ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடக்கிறது. இதற் கான சட்டத் திருத்தங்கள் சமீபத் தில் சட்டப்பேரவையில் நிறைவேற் றப்பட்டன. உள்ளாட்சி தேர்தலில் முதல்முறையாக பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட உள்ளது.

2 கட்ட வாக்குப்பதிவு

10 மாநகராட்சிகள், 64 நகராட்சிகள், 255 பேரூராட்சிகளுக்கும் ஊரகப் பகுதிகளில் 193 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 332 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 3,250 ஊராட்சி ஒன்றிய வார்டுகள், 50,640 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 6,444 கிராம ஊராட்சி தலைவர்கள் பதவிகளுக்கு அக்டோபர் 17-ல் முதல்கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.

சென்னை, திண்டுக்கல் ஆகிய 2 மாநகராட்சிகள், 60 நகராட்சிகள், 273 பேரூராட்சிகளுக்கும் ஊரகப் பகுதிகளில் 195 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 323 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 3,221 ஊராட்சி ஒன்றிய வார்டுகள், 48,684 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 6,080 கிராம ஊராட்சி தலைவர்கள் பதவிகளுக்கு அக்டோபர் 19-ல் 2ம் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x