Published : 01 Jan 2016 02:22 PM
Last Updated : 01 Jan 2016 02:22 PM

ஒரே நாள் அவகாசத்தில் ஜல்லிக்கட்டை நடத்தலாம்: மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஆர்வலர்கள்

ஒரு நாள் அவகாசம் இருந்தாலே ஜல்லிக்கட்டை சிறப்பாக நடத்திவிடுவோம் என மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

பொங்கல் பண்டிகையின்போது நடத்தப்படும் ஜல்லிக்கட்டு நீதிமன்ற தடையால் கடந்தாண்டு நடைபெறவில்லை. இன்னும் தடை விலகாத நிலையிலும், வரும் பொங்கலுக்கு உறுதியாக ஜல்லிக்கட்டு நடைபெறும் என பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகிறார். இதனால் ஜல்லிக்கட்டு நடைபெறும் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உட்பட பல ஊர்களில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் அதிக நம்பிக்கையுடன் உள்ளனர்.

இன்னும் 14 நாட்களே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு நடத்துவது சாத்தியமா என்பது குறித்து ஜல்லிக்கட்டு நடத்தும் குழுவில் பல ஆண்டுகளாக முக்கிய பணியாற்றிய ஆர்.கோவிந்தராஜ் (49) கூறியது: காளைகளுக்குப் பயிற்சி அளிப் பது போன்று எந்த நிகழ்வும் இருக்காது. கோயில்களுக்கு நேர்த்திக் கடனாக விடப்படும் காளைகள், குலதெய்வத்துக்காக வீடுகளில் வளர்க்கப்படும் காளைகள்தான் ஜல்லிக் கட்டில் அவிழ்த்து விடப்படும்.

நேரம் தவறாமல் சத்துள்ள உணவு, முழுநேர ஓய்வு என 2 முறைகளை மட்டுமே காளைகளை வளர்க்கப் பயன்படுத்துகிறோம். மண்ணை குத்துவது, நீச்சலுக்கு விடுவது போன்று எந்த பயிற்சியும் வழங்குவதில்லை. சிலர் ஆர்வக்கோளாறினால் சில பழக்கவழக்கங்களை கடைப் பிடிக்கலாம். 5 தலைமுறையாக காளை வளர்க்கும் எங்கள் குடும்பத்தில் இதுபோன்ற நடைமுறை எப்போதும் இருந்ததில்லை. பரிசுகள் சேகரிப்பு, கேலரி, தடுப்புகள் அமைப்பது, காளைகளை பதிவு செய்வது ஆகிய பணிகள்தான் முக்கியம். இதை கமிட்டியும், அரசும் இணைந்து ஒருநாள் அவகாசத்திலேயே செய்துவிட முடியும். இந்த நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம் என்றார்.

ஜல்லிக்கட்டு கமிட்டி முன்னாள் நிர்வாகி டி.ரகுபதி (54): மத்திய அரசு புதிய உத்தரவை பி றப்பி த்தாலும், உச்ச நீதிமன்றத்தில் அனுமதி பெற்று நடத்த வேண் டும். நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் மத்திய அமைச்சர் அளித்த உறுதிமொழியை நம்பி காத்திருக்கிறோம். ஜல்லிக்கட்டு நடத்த 2009-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. மறுநாளே இந்த தடை விலக்கிக்கொள்ளப்பட்டு பொங்கல் பண்டிகை நாளில் அனுமதி பெறப்பட்டது. ஒருநாள் இடை வெளியில் அந்தாண்டு அலங்கா நல்லூரில் சிறப்பாக ஜல்லிக்கட்டு நடந்தது. முயன்றால் முடியாதது இல்லை. பல ஜல்லிக்கட்டுகளை நடத்திய அனுபவம் இருப்பதால் ஏற்பாடுகள் செய்வதில் சிரமம் இல்லை என்றார்.

மாடுபிடிவீரர் அலங்கா நல்லூர் வீரா கூறியது: ஜல்லிக்கட்டு எப்போது வரும் என இப்பகுதி இளைஞர்கள் மிகுந்த எதிர்பா ர்ப்புடன் காத்திருக்கிறோம். காளை களை லாவகமாகப் பிடிக்கும் திறமை இருந்தால் போதும். காளைகளின் செயல்பாட்டை நன்றாக அறிந்திருக்க வேண்டும். இது காளை வளர்ப்போருக்கு மிக எளிதாக இருக்கும். உடலில் வலிமை, புத்திக்கூர்மை இருந்தால் எந்த காளையிடமும் குத்து வாங்காமல் தப்பிவிடுவதுடன், வாய்ப்புள்ள காளைகளை அடக்கவும் செய்யலாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x