Published : 14 Sep 2016 08:17 PM
Last Updated : 14 Sep 2016 08:17 PM

கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து செப்.16-ல் கடையடைப்பு போராட்டம்: தமிழக கட்சிகள் ஆதரவு

கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து விவசாயிகள், வணிகர்கள் செப்.16-ல் நடத்தவுள்ள போராட்டத்துக்கு தமிழக அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக தலைவர்கள் வெளியிட்ட அறிக்கைகளின் விவரம் பின்வருமாறு:

திமுக தலைவர் கருணாநிதி: காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் நியாயமான உரிமைகளை நிலைநாட்ட வலியுறுத்தியும், கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்தும், தமிழகத்தில் வரும் 16-ம் தேதி முழு கடையடைப்புப் போராட்டம் நடத்திட தமிழ்நாடு அனைத்து விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை உள்ளிட் அமைப்புகள் முடிவு செய்துள்ளன. இந்த முழு கடை அடைப்புப் போராட்டத்துக்கு திமுக ஆதரவளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டதன் அடிப்படையில், அதற்கு திமுக ஆதரவளிக்கிறது. இதில், திமுக தொண்டர்கள் பங்கேற்க வேண்டுகிறேன்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிரான தாக்குதலைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழு அமைக்க வலியுறுத்தியும் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் செப்டம்பர் 16 அன்று தமிழகத்தில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனை பொதுமக்கள் வெற்றியடையச் செய்ய வேண்டும். அன்றைய தினம் நடக்கவுள்ள ரயில், சாலை மறியல் போராட்டங்களில் மதிமுக தொண்டர்கள் பங்கேற்பர்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு துரோகம் இழைக்கப்படுவதையும், கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதையும் கண்டித்து வரும் 16-ம் தேதி தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்த உழவர் அமைப்புகள், வணிகர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இப்போராட்டத்திற்கு பாமகவின் ஆதரவை அந்த அமைப்புகள் கோரியிருந்தன. இப்போராட்டத்துக்கு பாமக தனது ஆதரவை அளிக்கும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்: காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் அடிப்படையில் மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவையும் மத்திய அரசு பல ஆண்டுகள் கடந்த பின்னரும் அமைக்கவில்லை. அவற்றை அமைக்க வலியுறுத்தி விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு, வணிகர் சங்கங்கள் சார்பில் 16-ம் தேதி நடக்கவுள்ள கடையடைப்பு போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்கிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக்குழுவும் அமைக்க வலியுறுத்தியும், கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்களை கண்டித்தும் விவசாயிகள், வணிகர்கள் வரும் 16-ம் தேதி நடத்தவுள்ள கடையடைப்பு போராட்டத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளிக்கும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தமிழகத்துக்கு தண்ணீர் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது முதல், கர்நாடக மாநிலத்தில் வன்முறைச் சம்பவங்களும், போராட்டமும், ஆர்ப்பாட்டமும் நடைபெறுகின்றன. இதனைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் தமிழக அனைத்து விவசாய சங்கங்கள், வணிகர்கள் வரும் 16 -ம் தேதி நடத்தவுள்ள கடையடைப்பு போராட்டத்தில் தமாகா பங்கேற்கும்.

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா: காவிரி மீதான தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும், கர்நாடகத்தில் தமிழர்கள் மீது நடைபெறும் தாக்குதல்களைக் கண்டித்தும் தமிழகத்தில் உள்ள வணிகர் சங்கங்கள் வரும் 16ம் தேதி நடத்தவுள்ள கடையடைப்பில் மமக முழுமையாகப் பங்கேற்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x