Last Updated : 19 Nov, 2013 12:00 AM

 

Published : 19 Nov 2013 12:00 AM
Last Updated : 19 Nov 2013 12:00 AM

ஏற்காட்டில் தலைவர்களை கண்காணிக்க வீடியோ படை: தேர்தல் ஆணையத்தின் பிடி இறுகுகிறது

ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில் தொடர்ந்து முறைகேடு புகார்கள் வருவதையடுத்து, அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. தலைவர்கள், அமைச்சர்களை கண்காணிக்க முதல்முறையாக வீடியோ படை அமைக்கப்படுகிறது.

அதிமுக எம்எல்ஏ பெருமாள் மரணமடைந்ததைத் தொடர்ந்து ஏற்காடு சட்டமன்றத் தொகுதிக்கு (எஸ்.டி.), வரும் டிசம்பர் 4-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. அங்கு அதிமுக, திமுக இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடாத தேமுதிக, காங்கிரஸ், பாஜக, மதிமுக உள்பட முக்கிய கட்சிகள் எதுவும் யாருக்கு ஆதரவு என்ற தங்கள் நிலையை இன்னும் அறிவிக்கவில்லை. இந்தக் கட்சிகளின் ஆதரவைப் பெற திமுக தரப்பில் முயற்சிகள் நடந்து வருகின்றன.

தொடர் புகார்கள்

இதற்கிடையே, ஏற்காடு தொகுதி வாக்காளர்களைக் கவர அதிமுக மற்றும் திமுக கட்சிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இரு கட்சிகளின் வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில் ஆளுங்கட்சியினர் மீதும், அரசு அதிகாரிகள் மீதும் திமுக தொடர்ந்து புகார்களை கூறி வருகிறது. இதையடுத்து தேர்தல் துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். அதிமுக அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் அனைவரும் ஏற்காட்டில் முகாமிட்டு தேர்தல் பணிகளைக் கவனித்து வருகின்றனர். தொடர்ந்து வரும் புகார்களையடுத்து முக்கியப் பிரமுகர்களை கண்காணிக்கும் பணியில் மத்திய தொழிற்படையினர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய உத்தி

இந்நிலையில், முதல்முறையாக ஏற்காடு இடைத்தேர்தலில் பிரச்சாரத்துக்குச் செல்லும் அதிகாரிகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் புதிய உத்தியை வகுத்துள்ளது. அமைச்சர்களையும், முக்கிய தலைவர்களையும் தொடர்ந்து கண்காணிப்பில் வைத்துக் கொள்ளும் வகையில் அவர்களது பயணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் வீடியோவில் பதிவு செய்ய தேர்தல் துறை முடிவு செய்துள்ளது.

வீடியோ படை

இதுகுறித்து தேர்தல் துறையினர், ‘தி இந்து’ நிருபரிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

எப்போதும் இல்லாத வகையில் முதல்முறையாக, ஏற்காடு இடைத்தேர்தலில் முக்கிய தலைவர்கள் மற்றும் அமைச்சர்களைக் கண்காணிக்க வீடியோ படை அமைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, வாக்குப்பதிவு உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளை மட்டுமே வீடியோவில் பதிவு செய்வோம். ஆனால், ஏற்காட்டில் தொடர்ந்து புகார்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, தொகுதிக்கு வரும் அனைத்துத் தலைவர்களின் நிகழ்ச்சிகளையும் படம் பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வீடியோ படையினர், தலைவர்களுடனும் எல்லா இடங்களுக்கும் சென்று அவர்களது செயல்பாடுகளை வீடியோவில் பதிவு செய்வர். இதற்கு தேவையான அளவு வீடியோகிராபர்கள் நியமிக்கப்படுவர்.

அமைச்சருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை, பி.டி.ஓ. சஸ்பெண்ட் உள்ளிட்ட தேர்தல் துறையின் தீவிர நடவடிக்கைகளால் ஏற்காட்டில் தற்போது நிலைமை கட்டுக்குள் இருந்து வருகிறது. இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

10 கிலோ நகை பறிமுதல்

ஏற்காடு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து சேலம் மாவட்டத்துக்குள் நுழையும் வாகனங்களில் கடும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை, கணக்கில் வராத ரூ.1.39 கோடி ரொக்கமும், 10 கிலோ தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று தேர்தல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x