Last Updated : 08 Jan, 2017 10:52 AM

 

Published : 08 Jan 2017 10:52 AM
Last Updated : 08 Jan 2017 10:52 AM

கோவை: பட்டாசு பற்றாக்குறையால் யானைகளை விரட்டுவதில் சுணக்கம்

கோவை வனக்கோட்டத்தில் யானைகள் ஊடுருவல் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை எதிர்கொண்டு விரட்டிச் செல்வதற்கான பட்டாசுகள் குறைவாகவே வழங்கப்படுவதாக வன ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் யானைகளை எதிர்கொள்ள முடியாமல் வன ஊழியர்கள் விபத்துகளில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது.

கோவை பேரூர் அருகே உள்ள செட்டிபாளையத்தில் குளத்தேரி குட்டை, பெரியகுளம் ஆகிய நீர் நிலைகள் அடுத்தடுத்து உள்ளன. கரடிமடை வனப்பகுதியில் இருந்து தண்ணீர், தீவனம் தேடி வந்த ஒரு குட்டியானை உட்பட 5 யானைகள் நேற்று இந்த நீர்நிலைப் பகுதியில் புகுந்தன. அருகில் இருந்த விவசாய நிலங்களையும் அவை சேதப்படுத்தின. பொதுமக்கள் தெரிவித்த தகவலின்பேரில் அங்கு சென்ற கோவை, மதுக்கரை சரக வனத்துறையினர் நேற்று அதிகாலை 2 மணியில் இருந்து அவற்றை விரட்டிச் செல்ல முயற்சித்தனர்.

ஆனால் இருளில் யானைகளை விரட்டிச் செல்வதற்கு பயன்படுத்தக்கூடிய வெடிகளும், பட்டாசுகளும் வனத்துறையினரிடம் போதிய எண்ணிக்கையில் இல்லை. இதனிடையே நீர்நிலைப் பகுதியில் இருந்து அவை வெளியேறி விடக் கூடாது என, கையில் இருக்கும் சில பட்டாசுகளை மட்டும் வைத்து யானைகளை விரட்டினர். ஒருகட்டத்தில் ஆவேசமடைந்த ஒரு யானை வனத்துறையினரை துரத்தியது. அதில், தப்பி ஓடும்போது அங்கிருந்த கருவேல மரத்தில் மோதி வெள்ளிங்கிரி என்ற வன ஊழியர் படுகாயமடைந்தார். உடனடியாக அவர் அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். போதுமான அளவில் பட்டாசு, வெடிகள் இருந்திருந்தால், எளிதாக யானைகளை விரட்டி இருக்க முடியும், விபத்தையும் தடுத்திருக்கலாம் என ஊழியர்கள் கூறுகின்றனர்.

வனத்துறை ஊழியர்கள் கூறியதாவது: கோவை வனக் கோட்டத்தில் சுமார் 500-க்கும் அதிகமான வேட்டைத் தடுப்புக் காவலர்கள் உள்ளனர். நேரடியாக களத்தில் இருந்து விலங்குகளை விரட்டும் பணியில் ஈடுபடுபவர்கள் இவர்களே. சமீப காலமாக விலங்குகளை விரட்டுவதற்குத் தேவையான பொருட்கள் கிடைப்பதில்லை. இதனால் கையிருப்பில் இருப்பதை வைத்து யானைகளை விரட்ட வேண்டியுள்ளது. சிறுமுகை, காரமடை, தென்மாவட்டங்களில் தயாரிக்கப்படும் பாணம் எனப்படும் வெடியும், பட்டாசும் தான் யானைகளை விரட்டப் பயன்படுத்தப்படுகின்றன.

கோவையில் உள்ள வனச்சரகங்களுக்கு தலா 25 என்ற எண்ணிக்கை அடிப்படையிலேயே அவை கொடுக்கப்படுகின்றன. யானை ஊடுருவல் அதிகமுள்ள சரகங்களுக்கு சற்று அதிகம் கொடுக்கின்றனர். ஆனால் அவை அனைத்துமே சில மணி நேரங்களில் தீர்ந்துவிடும். செட்டிபாளையத்தில் யானைகளை விரட்ட போதுமான அளவில் பட்டாசுகள் இல்லை. அதனாலேயே ஒருவருக்கு விபத்து ஏற்பட்டது. கோவை சரகத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 50 பட்டாசுகளும், மதுக்கரையில் இருந்து கொண்டு வரப்பட்ட 200 பட்டாசுகளும் சீக்கிரமே தீர்ந்துவிட்டன. கூடுதலாக பட்டாசுகள் கையிருப்பில் இருந்திருந்தால், விரைவாகவே யானைகளை விரட்டியிருக்கலாம் என்றனர்.

இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘முன்பெல்லாம் மாவட்ட வன அலுவலர் மூலம் பட்டாசுகள் வாங்க நிதி ஒதுக்க முடியும். ஆனால் இப்போது கருவூலத்தின் மூலமே இந்த பணிகள் அனைத்தும் நடக்கின்றன. எனவே சில பொருட்களை பெறுவதில் சிக்கல் நிலவுகிறது. யானைகள் ஊடுருவல் அதிகமாக இருப்பதால், அதிகளவில் பட்டாசுகள் பயன்படுத்தப்பட்டுவிட்டன. பற்றாக்குறைக்கு இதுவும் ஒரு காரணம். இது தொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் பேசி உடனே நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x