Published : 21 Jan 2014 08:34 AM
Last Updated : 21 Jan 2014 08:34 AM

காங். கூட்டணி இன்னும் முடிவாகவில்லை: பி.எஸ்.ஞானதேசிகன் பேட்டி

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் கூறினார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் திங்கள்கிழமை, தனது 66-வது பிறந்த நாளை ஞானதேசிகன் கேக் வெட்டி கொண்டாடினார். அவருக்கு முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஜே.எம்.ஆரூண் எம்.பி., நிர்வாகிகள் ராயபுரம் மனோ, ரங்கபாஷ்யம், மத்திய சென்னை எஸ்.எஸ்.குமார், சிரஞ்சீவி உள்பட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் நிருபர்களிடம் ஞானதேசிகன் கூறியதாவது:

இலங்கை - தமிழக மீனவர் களிடையே நடக்கவிருந்த பேச்சு வார்த்தை வரும் 27-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு இலங்கை அரசே காரணம். பேச்சுவார்த்தை நடத்துவதற்கான மீனவர் குழு அமைக்க இலங்கை அரசு அவகாசம் கேட்டுள்ளது. இதுகுறித்து, இந்திய அரசுக்கு இலங்கை அரசு கடிதம் எழுதியது. இலங்கையின் கோரிக்கையை தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மூலம் தெரிவித்தது. இதையடுத்து தமிழக அரசின் ஒப்புதலின் பேரில், பேச்சுவார்த்தை தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினையை தேர்தல் ரீதியாக காங்கிரஸ் அணுகுவதாக சில மீனவ அமைப்புகள் கூறுவது தவறானது. மீனவர்கள் பிரச்சினைக்கு சுமுக தீர்வு காணவே மத்திய அரசு விரும்புகிறது. இருநாட்டு மீனவர்களும் 72 நாட்கள், எல்லை தாண்டி வந்து மீன் பிடிக்க உரிமை கோருகின்றனர். பேச்சுவார்த்தையில் இதற்கு தீர்வு கிடைக்கும்.

பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குறித்து, மணிசங்கர் அய்யர் கூறிய கருத்துக்கும் காங்கிரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது அவரது தனிப்பட்ட கருத்து.

மாநிலங்களவைத் தேர்தலில், கடந்தமுறை காங்கிரஸிடம் திமுக ஆதரவு கேட்டது. தற்போது ஆதரவு கேட்டால், அதுகுறித்து மேலிடம்தான் முடிவெடுக்கும்.இவ்வாறு ஞானதேசிகன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x