Published : 20 Mar 2017 09:26 AM
Last Updated : 20 Mar 2017 09:26 AM

சாலை விபத்துகளில் தமிழகம் முதலிடம்: தேசிய சாலை பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் கவலை

இந்தியாவிலேயே சாலை விபத்துகள் அதிகம் நடைபெறுவதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக தேசிய சாலை பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் கமல்சோய் கவலை தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் கமல்சோய் கேரளா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், மேற்குவங்காளம், ஒடிசா, டெல்லி ஆகிய மாநிலங்களில் சாலை விபத்துகளை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் சென்னை வந்த அவர் நிருபர்களிடம் கூறும்போது, விமான விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டால் மிகவும் கவனிக்கப்படுகிறது. ஆனால் சாலை விபத்துக்களில் நாளொன்றுக்கு சராசரியாக 50 பேர் வரை உயிரிழந்தாலும் கவனிக்கப்படுவதில்லை. உலகிலேயே இந்தியாவில் தான் அதிகளவிலான சாலை விபத்துகள் நடைபெறுகின்றன. இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் 2014-ம் ஆண்டு நடைபெற்ற 67,250 சாலை விபத்துகளில் 77,725 பேர் காயமடைந்தனர். 15,190 பேர் உயிரிழந்துள்ளனர்.

2015-ம் ஆண்டு நடைபெற்ற 69,059 சாலை விபத்துகளில் 79,746 பேர் காயமடைந்தனர். 15,642 பேர் உயிரிழந்துள்ளனர் என தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைகளில் வர்த்தக வாகனங்கள் அதிவேகமாக செல்வதாலும், குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுவதாலும் பெரும்பாலான வாகன விபத்துகள் ஏற்படுகின்றன. சுய கட்டுப்பாட்டுடன் வாகனங்களை ஓட்டினால் பெரும்பாலான விபத்துகளை தவிர்க்கலாம். பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தரமான வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை கண்டிப்பாக வாகனங்களில் பொருத்த வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை மாநில போக்குவரத்து துறை முறையாக கண்காணிக்க வேண்டும்.

சட்டத்தை முறையாக அமல்படுத்தாத காரணத்தால் அங்கீகாரம் இல்லாத தயாரிப்பாளர்களின் வேகக் கட்டுப்பாட்டு சாதனங்களை வாகனங்களில் பொருத்துவது அதிகரித்து வருகிறது. எனவே சட்டத்தை உடனடியாக செயல்படுத்தினால் சாலை விபத்துகள் மற்றும் விபத்துகளில் பலியாவோரின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x