Published : 16 Apr 2017 02:15 PM
Last Updated : 16 Apr 2017 02:15 PM

பெரியாறு ஆற்றுப்படுகையில் 140 கன அடி தண்ணீர் திருட்டு: பிடிஆர்பி தியாகராஜன் எம்எல்ஏ குற்றச்சாட்டு





பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு திறக்கப்படும் தண்ணீரில் 140 கனஅடி வரை திருடுபோவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாலே மதுரை உட்பட சில மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்கலாம் என பிடிஆர்பி.தியாகராஜன் எம்எல்ஏ கூறினார்.

மதுரையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. மத்திய தொகுதியில் குடிநீர் விநியோகம் சீராக இல்லை. இது குறித்து மாநகராட்சி ஆணையர் சந்தீப் நந்தூரியுடன் மத்திய தொகுதி எம்எல்ஏ பிடிஆர்பி தியாகராஜன் நேற்று ஆலோசனை நடத்தினார். அதையடுத்து அவரது உத்தரவின் பேரில் மாநகராட்சி பொறியாளர்கள் 15 பேருடன் தியாகராஜன் எம்எல்ஏ தனது அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

மதுரையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க மாநகராட்சி பொறியாளர்களுடன் ஆலோசனை செய்தேன். தொகுதி மேம்பாட்டு நிதியுடன், எனது ஊதியம் முழுவதையும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க பயன்படுத்துவேன்.

மதுரை மாநகராட்சி குடிநீருக்காக வைகை அணையில் இருந்து தினமும் 60 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதில் 47 கன அடி மட்டுமே மதுரைக்கு வந்து சேர்வதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மீதி 13 கன அடி தண்ணீர் ஆண்டிபட்டி உள்ளிட்ட வழியில் சில இடங்களில் விதிமீறி எடுத்துக் கொள்ளப்படுவதாக கூறுவதை ஏற்க முடியவில்லை. மதுரைக்கு குடிநீருக்காக ஒதுக்கப்பட்ட தண்ணீரை முழுமையாகப் பெற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம் காட்டுகின்றனர். மேலும் பெரியாறு அணையில் இருந்து சாதாரண காலங்களில் 200 முதல் 225 கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டு, வைகை அணையில் சேமிக்கப்படும். 225 கன அடி தண்ணீர் திறக்கப்படும் நிலையில், 25 கன அடி தண்ணீர் வரும் வழியில் அமைக்கப்பட்டுள்ள 18 குடிநீர் திட்டங்களுக்கு எடுக்கப்படுகிறது. ஆவியாதல் உட்பட பல்வேறு கார ணங்களால் 20 கன அடி தண்ணீர் குறைந்துவிடுகிறது. வைகை அணைக்கு வரவேண்டிய மீதி தண்ணீர் 180 கன அடி. ஆனால் உண்மையில் வந்து சேர்வது 40 கன அடி மட்டுமே. மீதமுள்ள 140 கன அடி தண்ணீர் திருடப்படுகிறது.

தண்ணீர் வரும் ஆற்றுப்படுகையின் இருபுறமும் உள்ள நிலங்களில் விவசாயம் செய்வோர், ஆற்றில் நேரடியாகக் குழாய்களைப் பொருத்தி, மோட்டார் மூலம் திருடி விடுகின்றனர். ஆயக்கட்டு உரிமை பெற்ற விவசாயிகளுக்கும், குடிநீருக்கும் கிடைக்க வேண்டிய தண்ணீர் திருடப்படுவது பல ஆண்டுகளாக நடக்கிறது. பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு நன்றாக தெரிந்திருந்தும் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

இப்புகார் குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் ஆற்றுப்படுகையை அண்மையில் முழுமையாக ஆய்வு செய்துள்ளனர். இதை முன்கூட்டியே அறிந்து, ஆற்றில் தண்ணீரை திருட பயன்படுத்திய குழாய்கள் தற்காலிகமாக அகற்றப்பட்டன. இதனால், ஆய்வு நடந்த நாட்களில் 225 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதில், வைகை அணைக்கு 180 கன அடி வந்து சேர்ந்துள்ளது. இதன் மூலம் இடையில் தண்ணீர் திருட்டு நடப்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

இந்த திருட்டின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருட்டு நீரை நம்பி பாசனப் பகுதியையும் அதிகரித்து வருகின்றனர். உரிமையுள்ள ஆயக்கட்டு நிலங்கள் தண்ணீர் இன்றி தரிசாக உள்ளன.

இந்த தண்ணீர் திருட்டால் மதுரை மாநகராட்சி மட்டுமின்றி பல குடிநீர் திட்டங்கள் பாதிக்கப்பட்டு, மக்கள் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

தண்ணீர் திருட்டுக்கு இலவச மின்சாரம்

முல்லை பெரியாற்றில் திறக்கப்படும் தண்ணீரை 5 இன்ச் பைப் மூலம் மோட்டார் பொருத்தி எடுத்து பல கி.மீ. தொலைவுக்கு இலவச மின்சாரம் மூலம் கொண்டு செல்கின்றனர். 90 சதவீதம் பேர் இவ்வாறு செய்கின்றனர்.

5 இன்ச் மோட்டார் ஓராண்டு ஓடினால் ரூ.13 லட்சம் மின்கட்டணம் வரும். இலவச மின்திட்டம் மூலம் பல ஆயிரம் மோட்டார்கள் இயக்கப்படுகின்றன. திருட்டுத்தனமாக தண்ணீர் எடுப்பதுடன், இலவச மின்சாரத் தையும் தவறாக பயன்படுத்து கின்றனர். மின்வாரிய அதிகாரிகள் திருட்டு மோட்டார் இணைப்பை துண்டித்தும், பொதுப் பணி துறையினர் ஆற்றுப்படுகையில் திருட்டுத்தனமாக நீரை எடுக்காத வாறு நடவடிக்கை எடுத்தால்தான் இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x