Published : 03 Aug 2016 08:05 AM
Last Updated : 03 Aug 2016 08:05 AM

போதையில் கார் ஓட்டி தொழிலாளி பலி: ஐஸ்வர்யா ஜாமீன் மனு விசாரணை தள்ளிவைப்பு

போதையில் கார் ஓட்டி கூலித் தொழிலாளர் பலியான வழக்கில் காரை ஓட்டிச் சென்ற இளம்பெண் ஐஸ்வர்யா, தனது ஏடிஎம் கார்டு மூலமாக மது பானங்கள் வாங்கியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஜாமீன் மனு மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.

கடந்த ஜூலை 1-ம் தேதி அதிகாலை நான்கரை மணியள வில் திருவான்மியூர் காமராஜர் நகரைச் சேர்ந்த முனுசாமி, தனது நண்பர் சரவணனுடன் கூலி வேலைக்கு சென்றார். தரமணி அருகே ராஜீவ் காந்தி சாலையை முனுசாமி கடக்க முயன்றபோது வேகமாக வந்த ஆடி கார் முனுசாமி மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

கிண்டி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாரின் விசாரணையில் சேத்துப்பட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகளான இளம்பெண் ஐஸ்வர்யா மது போதையில் காரை ஓட்டியதால் இந்த மரணம் நிகழ்ந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதையடுத்து ஐஸ்வர்யா கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஐஸ்வர்யா ஏற்கெனவே கீழ் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடியான நிலையில், 3-வது முறையாக ஐஸ்வர்யா தனக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு நடந்தது.

அப்போது ஐஸ்வர்யா தரப்பு வழக்கறிஞர், “ஏற்கெனவே ஐஸ்வர்யா கைது குறித்து 2 முறை போலீஸார் பதில் மனு தாக்கல் செய்துவிட்டனர். 15 நாட்களுக்கும் மேலாக அவர் சிறையில் இருந்து வருகிறார். எனவே அவருக்கு ஜாமீன் தர வேண்டும்” என வாதிட்டார்.

அரசுத் தரப்பில் ஆஜரான வழக் கறிஞர், ‘‘ஐஸ்வர்யா மது அருந்தி தனது விலை உயர்ந்த காரை ஓட்டியதற்கும், ஒரு ஹோட்டலுக்கு சென்று தனது ஏடிஎம் கார்டு மூலமாக மது பானங்கள் வாங்கியதற்கும் எங்களிடம் ஆதாரங்கள் உள்ளன. அவற்றை தாக்கல் செய்ய கால அவகாசம் தேவை” என வாதிட்டார். அதையடுத்து நீதிபதி வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 8-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x