Published : 04 Feb 2014 06:59 PM
Last Updated : 04 Feb 2014 06:59 PM

என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அமைக்க முதல்வர் ரங்கசாமிக்கு முழு அதிகாரம்

என்.ஆர். காங்கிரஸ் கட்சி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பதற்கான முழு அதிகாரம், கட்சியின் தலைவரும், முதல்வருமான ரங்கசாமிக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் புதுவை காமராஜர் சாலையில் உள்ள ஓட்டல் அண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடை பெற்றது. இந்தக் கூட்டத்துக்கு அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவரும், புதுச்சேரி யூனியன் பிரதேச முதல்வருமான ந.ரங்கசாமி தலைமைத் தாங்கினார்.

முன்னதாக அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் வி.பாலன் வரவேற்று, தீர்மானங்களை முன் வைத்தார்.

நாடாளுமன்றத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்க கட்சித்தலைவரும் முதல்வருமான ரங்கசாமிக்கு முழு அதிகாரம் அளிப்பது, இளைஞரணி மற்றும் மகளிரணி உட்பட 18 துணை அமைப்புகள் அமைக்க தலைவருக்கு அதிகாரம் அளிப்பது உட்பட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையடுத்து நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் என்.ரங்கசாமி பேசியது:

கடந்த 2 ஆண்டுகளாக நிதி பற்றாக்குறையில் அரசு சிக்கித் தவித்தது. தற்போது, புதுச்சேரி மக்களின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் நலத்திட்டங்களை அரசு வழங்கி வருகிறது. புதுச்சேரியின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு மாநில அந் தஸ்து பெற வேண்டிய சூழலுக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். அதைப் பெற மத்திய அரசிலும் நமக்கு அதிகாரம் தேவைப்படுகிறது. அதற்காக, நாம் மக்களவைத் தேர்தலை எதிர்நோக்கி உள்ளோம்.

நம்முடைய கோரிக்கைகள் நிறைவேறும் வகையில், அங்கு நமக்கு பலமான கூட்டணி அமைய வேண்டும். கட்சியில் மகளிரணி, மாணவரணி, வழக்கறிஞர்கள் அணி, மருத்துவர்கள் அணி, வர்த்தகர்கள் அணி போன்ற அனைத்து தரப்பு மக்களும் இணையும் வகையில் 18 துணை அமைப்புகள் அமைக்கப்படும் என்றார் ரங்கசாமி.

என்.ஆர்.காங்கிரஸின் கூட்டம் மாலை 6.30 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏராளமான நிர்வாகிகள் முதல்வர் வருகைக்காக ஓட்டல் அண்ணா மலையில் காத்திருந்தனர். முதல்வர் வர தாமதமானதால், கூட்டம் இரவு 7.30 மணியளவில் தொடங்கியது. பின்னர் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வரத்தொடங்கினர். இறுதியில் இரவு 9.55 மணிக்கு முதல்வர் வந்து சேர்ந்தார். அதையடுத்து தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு விவாதம் தொடங்கியது. இதெல்லாம் முடிந்த பிறகு நள்ளிரவில் முதல்வர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x